இஸ்லாத்தில் பொய் சொல்ல அனுமதியுள்ளதா❓
நபிகளார் எப்போதாவது பொய் சொல்லியுள்ளார்களா❓
*உண்மையே பேச வேண்டும் என்றும் பொய் சொல்லக்கூடாது* என்றும் திருக்குர்ஆனும், நபிமொழிகளும் வலியுறுத்தின்றன.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! *உண்மையாளர்களுடன் ஆகுங்கள்*!
(அல்குர்ஆன் 9 :119)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
*உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும். நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும்*.
ஒரு மனிதர் உண்மை பேசிக் கொண்டே இருப்பார். இறுதியில் அவர் *வாய்மையாளர் (சித்தீக் எனும் பெயருக்கு உரியவர்) ஆகிவிடுவார்*.
(இதைப் போன்றே) பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். *ஒரு மனிதர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் பெரும் பொய்யர்* எனப் பதிவு செய்யப்பட்டு விடுவார்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல்: புகாரி (6094)
இது போன்று திருக்குர்ஆன் வசனங்களும், நபிமொழிகளும் பல உண்டு. என்றாலும் *சில நேரங்களில் பொய் சொல்வதற்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கியுள்ளார்கள்*.
உம்மு குல்ஸூம் பின்த் உக்பா பின் அபீமுஐத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், *(பரஸ்பரம் பிணக்கு கொண்ட இரு தரப்பாரிடம் நல்லதைப் புனைந்து கூறி) மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவர் பொய்யர் அல்லர். அவர் நல்லதையே சொல்கிறார்; நன்மையையே எடுத்துரைக்கிறார்* என்று கூறுவதை நான் கேட்டேன்.
இதன் அறிவிப்பாளரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ் அவர்கள் கூறுகிறார்கள்:
மக்கள் பொய் என்று சொல்லக்கூடிய எதற்கும் (மார்க்கத்தில்) அனுமதியுள்ளதாக நான் கேள்விப்படவில்லை; மூன்று பொய்களைத் தவிர!
1. *போர் (தந்திரத்திற்காகச் சொல்லப்படும் பொய்).*
2. *மக்களிடையே சமாதானத்தை உருவாக்குவதற்காகச் சொல்லப்படும் பொய்*.
3. (*குடும்ப ஒற்றுமைக்காக) கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் சொல்லும் பொய்.*
நூல்: முஸ்லிம் 5079
கஅப் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு புனிதப் போருக்கு (தலைமை தாங்கிச்) செல்ல விரும்பினால் *வேறெதற்கோ செல்வது போன்று பாசாங்கு செய்து அதை மறைப்பார்கள்*. தபூக் போரின்போது இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் செல்லாமல், தான் பின்தங்கி விட்ட கால கட்டத்தைக் குறித்து என் தந்தை கஅப் இப்னு மாலிக் (ரலி) விவரித்தபோது இதை அவர்கள் கூற கேட்டேன் என்று கஅப் (ரலி) முதிய வயதடைந்து கண்பார்வையிழந்து விட்ட போது அவர்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்பவராயிருந்த- அவர்களின் மகன் அப்துல்லாஹ் இப்னு கஅப் அறிவித்தார்.
நூல்: புகாரி (2947)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
*போர் என்பது சூழ்ச்சியாகும்.*
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ்,
நூல்: புகாரி(3030)
கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள் *ஒரு புனிதப் போருக்கு (தலைமை தாங்கிச் செல்ல விரும்பினால் வேறெதற்கோ செல்வது போன்று பாசாங்கு செய்து அதை மறைப்பார்கள்*.
நூல் : புகாரி 2947
*சண்டைக்காரர்களாக இருக்கும் இரு சகோதரர்களுக்கு மத்தியில் இணக்கத்தை ஏற்படுத்தச் சொல்லும் பொய், தண்டனைக்குரிய குற்றத்தில் சேராது. இந்தப் பொய் சுயநலத்திற்காக அல்லது அடுத்தவரைக் காயப்படுத்துவதற்காக சொல்லப்பட்ட பொய் அல்ல*. நன்மையைக் கருதி சொல்லப்பட்டதால் நபிகளார் இது பொய் அல்ல என்று கூறுகிறார்கள்.
*மகிழ்ச்சிக்காக அல்லது குடும்ப ஒற்றுமைக்காக கணவன், மனைவி இருவரும் சொல்லும் பொய்யும் தவறாகாது* என்று நபிகளார் விளக்கியுள்ளார்கள்.
இதைப் போன்று போர்க்களங்களில் பொய் சொல்லி எதிரிகளை வீழ்த்த திட்டம் தீட்டுவதும் தவறாகாது.
நபிகளாரும் போர்க்கள நேரத்தில் இதுபோன்று நிலையை எடுத்துள்ளார்கள் என்று கஅப் (ரலி) அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.
எனவே நபிகளார் அனுமதித்த இடங்களில் பொய் சொல்வது குற்றமாகாது.
———————————-
*ஏகத்துவம்*