*நைட் ஸ்டே (Night Stay) கலாச்சாரம்- ஓர் இஸ்லாமியப் பார்வை*
இன்று நம்மில் பலருக்கு வேகமாகப் பரவி வரும் ஒரு பழக்கம் *நைட் ஸ்டே’ (Night Stay – இரவு தங்குதல்).* வார இறுதி நாட்களிலோ அல்லது விடுமுறைகளிலோ, நண்பர்கள் குழுவாகச் சேர்ந்து, *ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களுக்கோ, பண்ணை வீடுகளுக்கோ, கடற்கரை ஒட்டிய பகுதிகளிலோ சென்று, இரவு முழுவதும் விழித்திருந்து, சமைத்து சாப்பிட்டுவிட்டு, கேளிக்கையில் ஈடுபட்டு இரவை கழிப்பதற்காக* இதற்க்கு விலை கொடுக்கப்படுகிறது
நண்பர்களுடன் கூடி மகிழ்வது தவறில்லை என்றாலும், இந்த ‘நைட் ஸ்டே’ கலாச்சாரம் இஸ்லாம் வகுத்துள்ள வரம்புகளை மீறுவதாகவும், குடும்ப உரிமைகளைப் பறிப்பதாகவும் அமைகிறது. இது குறித்து இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதைத் தெளிவாகப் பார்ப்போம்.
*வணக்கத்திற்காகக் கூட குடும்ப உரிமையை மீறக்கூடாது* – ஓர் அழகிய முன்மாதிரி
இஸ்லாம் சமநிலையான மார்க்கம். நண்பர்களுடன் கூடி அமர்ந்து பேசுவது ஒருபுறம் இருக்கட்டும், *இறைவணக்கத்திற்காகக் கூட குடும்பத்தாரைப் பிரிந்து, உடலை வருத்தி இரவு முழுவதும் விழித்திருப்பதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது*. இதற்குச் சிறந்த சான்றாகப் பின்வரும் நபிமொழி அமைந்துள்ளது:
சல்மான் (ரலி) அவர்களின் அறிவுரை:
நபி(ஸல்) அவர்கள் சல்மான்(ரலி) அவர்களையும் அபுத்தர்தா(ரலி) அவர்களையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். ஒருமுறை சல்மான்(ரலி), அபுத்தர்தா(ரலி) வீட்டுக்குச் சென்றபோது, அபுத்தர்தா(ரலி) அவர்கள் பகலில் நோன்பு வைப்பதும், *இரவு முழுவதும் விழித்து நின்று வணங்குவதுமாக இருப்பதைக் கண்டார்கள்*.
இரவு வந்ததும், அபுத்தர்தா(ரலி) அவர்கள் (தொழுகைக்காக) எழுந்தார்கள். உடனே சல்மான்(ரலி), *தூங்குங்கள்* என்று தடுத்தார்கள். அபுத்தர்தா(ரலி) தூங்கிவிட்டு, மீண்டும் தொழ எழுந்தார்கள். அப்போதும் சல்மான்(ரலி), *தூங்குங்கள்* என்றார்கள்.
இரவின் கடைசிப் பகுதி வந்ததும், சல்மான்(ரலி) அவர்கள், *இப்போது எழுங்கள்* என்றார்கள். இருவரும் தொழுதார்கள். அப்போது சல்மான்(ரலி) அவர்கள் கூறிய பொன்னான வார்த்தைகளைக் கவனியுங்கள்:
“நிச்சயமாக, உன்னுடைய இறைவனுக்காகச் செய்ய வேண்டிய கடமைகள் உனக்கு உள்ளன. மேலும், *உன் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உனக்கு உள்ளன*.
*உன் குடும்பத்தாருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உனக்கு உள்ளன*.
எனவே, ஒவ்வொருவருக்கும் *அவரவருக்குச் சேர வேண்டிய உரிமைகளை வழங்குவீராக!*
பின்னர் நபி(ஸல்) அவர்களிடம் இதைத் தெரிவித்தபோது, *சல்மான் உண்மையே சொன்னார்* என்று கூறினார்கள். (புகாரி 6139)
*சிந்திக்க வேண்டிய பாடம்*
அபுத்தர்தா (ரலி) அவர்கள், *நண்பர்களுடன் கூடி பேசி மகிழவோ, கிரில் சாப்பிடவோ விழிக்கவில்லை*. அவர்கள் விழித்திருந்ததே *தொழுவதற்காக* த்தான். தொழுவதற்காக விழித்திருந்தவரையே,
*உடலுக்கும் குடும்பத்திற்கும் செய்ய வேண்டிய கடமை பாக்கி உள்ளது, போய் தூங்குங்கள்* என்று இஸ்லாம் தடுக்கிறது என்றால், *வெறும் கேளிக்கைகாக விழித்திருந்துவிட்டு, ஃபஜர் மட்டும் தொழுதுவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்* என்று நாம் நினைப்பது எவ்வளவு பெரிய அறியாமை?
*நாம் தான் ஃபஜர் தொழுதுவிடுகிறோமே!* –
*நாங்கள் இரவு முழுவதும் விழித்திருந்தாலும், ஃபஜர் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுதுவிட்டுத்தான்* தூங்குகிறோம். அப்படியிருக்க இதில் என்ன தவறு இருக்கிறது என்று நாம் நினைக்கலாம்?
மேலோட்டமாகப் பார்த்தால் இது நியாயமான வாதம் போலத் தோன்றலாம்.
ஆனால், *இஸ்லாம் என்பது வெறும் தொழுகை மட்டுமல்ல; அது மனித உரிமைகள், குடும்பக் கடமைகள், உடல் நலம் என அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான வாழ்க்கை முறை*.
ஃபஜர் தொழுதுவிடுவதால் மட்டும் ‘நைட் ஸ்டே’ மார்க்க ரீதியாகச் சரியாகிவிடுமா? வாருங்கள், அதை அலசிப் பார்ப்போம்.
*குடும்பத்தின் உரிமையை யார் நிறைவேற்றுவது?*
நாம் ஃபஜர் தொழுதுவிடலாம். ஆனால், இரவு நேரத்தில் *உங்கள் மனைவி மக்களுடன் தங்கி, அவர்களுக்குப் பாதுகாப்பையும் மன ஆறுதலையும் தர வேண்டியது கணவனின் கடமை*. அவர்களைத் தனியே தவிக்க விட்டுவிட்டுச் செல்வது, அந்தக் குடும்பக் கடமையிலிருந்து மீறுவதாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: *உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே. உங்களின் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி (மறுமையில்) நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.* (முஸ்லிம் 3733)
தொழுகை எனும் கடமையை நிறைவேற்றிவிட்டு, குடும்பப் பொறுப்பு எனும் மற்றொரு கடமையை ‘நைட் ஸ்டே’வில் பாழாக்குவதை இஸ்லாம் ஒருபோதும் ஏற்காது.
*உடலுக்குச் செய்ய வேண்டிய கடமையை புறக்கணித்தல்*
*நாங்கள் ஃபஜர் தொழுதுவிடுகிறோம்* என்று சொல்லும் நாம் , அல்லாஹ் வழங்கிய உடல் எனும் அமானிதத்தை மறந்துவிடுகிறோம். சல்மான் (ரலி) அவர்கள், *உன் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உனக்கு உள்ளன* என்று கூறினார்கள்.
அல்லாஹ் குர்ஆனில், *இரவை உங்களுக்கு ஆடையாகவும், உறக்கத்தை ஓய்வாகவும்… அமைத்தான்* (25:47) என்கிறான்.
இயற்கைக்கு முரணாக இரவு முழுவதும் விழித்திருந்து உடலைக் கெடுத்துவிட்டு, *நாம் தொழுதுவிட்டோமே* என்று நமக்கு நாமே சமாதானம் சொல்வது, உடலுக்குச் செய்யும் அநீதி என்பதை உணர மறுக்கிறோம்.
பொன்னான நேரத்தை வீணடித்த குற்றம் இரவு முழுவதும் விழித்திருக்கும் பெரும்பாலும் *அரட்டையிலும், சிரிப்பிலுமே நேரத்தைக் கழிக்கிறோம்*. ஆனால் அந்த நேரம் எதற்கானது?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நம் இறைவன் ஒவ்வோர் இரவிலும் இரவின் இறுதிப் பகுதியில் கீழ்வானிற்கு இறங்கி வந்து, *என்னிடம் யாரேனும் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் யாரேனும் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்* என்று கூறுகின்றான். (புகாரி 7494)
பாவமன்னிப்புத் தேட வேண்டிய நாம் அந்த நேரத்தில், கேளிக்கைகளில் ஈடுபட்டுவிட்டு, கடைசியில் ஃபஜ்ர் தொழுதுவிட்டால் மட்டும், இழந்த அந்த மகத்தான பாக்கியம் நமக்கு கிடைத்துவிடுமா?
நாம் *சினிமா பார்க்க செல்லவில்லை, இசையை கேட்டு ஆடி பாடி மகிழவில்லை, வெறும் பேசி மகிழத்தான் சென்றோம்?*
என்ற வாதம் மிகவும் பலவீனமானது. இதை முறியடிக்க, *பாவம் செய்யாதது மட்டுமே ஒரு முஸ்லிமின் இலக்கு அல்ல, நேரத்தை வீணடிக்காமல் இருப்பதும், கடமைகளைப் பேணுவதும் தான் முக்கியம்* என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்
நபிகளார் இஷாவுக்குப் பின் நடக்கும் *வெறும் பேச்சையும்* வெறுத்தார்கள்.
அபூ பர்ஸா (ரலி) அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகைக்கு முன் உறங்குவதையும், *இஷாத் தொழுகைக்குப் பின் (உறங்காமல்) பேசிக்கொண்டிருப்பதையும் வெறுப்பவர்களாக இருந்தார்கள்.* (புகாரி 568)
நபிகளார் வெறுத்த ஒரு காரியத்தை (இரவு நேரப் பேச்சு), நாம் எப்படி *பரவாயில்லை* என்று நியாயப்படுத்த முடியும்? அது ஹலால் பேச்சாக இருந்தாலும், அது ஃபஜ்ர் தொழுகையையும், இரவு வணக்கத்தையும் பாதிக்கும் என்பதால் தான்
அந்த இரவில் பேசுவது மார்க்க விஷயமா? அல்லது உலக விஷயமா? இரவு முழுவதும் 5 அல்லது 6 மணி நேரம் பேசும்போது, அதில் கண்டிப்பாக:
புறம் பேசுதல், பிறரைப் பற்றிய விமர்சனம் வராமல் இருக்காது.
அல்லாஹ் முஃமின்களின் பண்பாகச் சொல்வது
*இன்னும் அவர்கள், வீணானவற்றைப் புறக்கணிப்பார்கள்.* (23:3)
கூத்தாட்டம் போடுவது மட்டும் பாவம் அல்ல; வாழ்க்கைக்குப் பயனில்லாத பேச்சுகளும் பாவத்தின் வாசலே.
நண்பர்களுடன் பேசுவது தவறல்ல. ஆனால் அதை எப்போது செய்கிறோம் என்பதுதான் முக்கியம்.
*மாற்று வழி*
நண்பர்களுடன் மகிழ்வாக இருப்பதை இஸ்லாம் தடுக்கவில்லை. ஆனால் அது நம் மார்க்கக் கடமைகளையும், குடும்பப் பொறுப்புகளையும் சிதைப்பதாக இருக்கக்கூடாது.
சிறந்த மாற்று வழி, நண்பர்களுடன் நேரத்தைச் செலவிட விரும்பும் நாம், விடுமுறை நாட்களில் மதிய உணவுக்குப் பிறகு (லுஹர்) தொடங்கி இஷா தொழுகை வரை அதே பண்ணை வீடுகளிலோ, தோட்டங்களிலோ, கடற்கரை ஒட்டிய பகுதிகளிலோ கூடலாம்.
இதில் பகல் நேரமானதால் பாதுகாப்பு அதிகம்.
குடும்பத்தை இரவில் தனியே விட வேண்டியதில்லை.
ஃபஜ்ர் தொழுகை தவறும் என்ற அச்சமில்லை.
உடல்நலமும் கெடாது.
எனவே, *சல்மான் உண்மையே சொன்னார்* என்ற நபிமொழியை மனதில் நிறுத்தி, நம் உடலுக்கும், குடும்பத்திற்கும், இறைவனுக்கும் செய்ய வேண்டிய கடமைகளைச் சரியாக நிறைவேற்றுவோமாக!
ஏகத்துவம்
_______________
அன்புச் சகோதரர்களே! இவை அனைத்தையும் நான் சுட்டிக்காட்டுவதற்குக் காரணம், *உங்கள் மீதுள்ள அக்கறையும், நாம் அனைவரும் மறுமையில் வெற்றிபெற வேண்டும்* என்ற ஆசையும் தானே தவிர, வேறில்லை.
*உங்கள் மகிழ்ச்சியைத் தடுப்பதோ, என் கருத்தை உங்கள் மீது திணிப்பதோ என் நோக்கமல்ல.*
உங்கள் மீது எனக்கு எந்தக் காழ்ப்புணர்ச்சியும் இல்லை. *மார்க்கம் என்பது நல் உபதேசம்’ ( الدِّينُ النَّصِيحَةُ* )என்ற நபிமொழியின் அடிப்படையில், ஒரு சகோதரனாக உங்களுக்கு நினைவுபடுத்தினேன்.
இதை ஒரு விமர்சனமாகப் பார்க்காமல், ஓர் ஆக்கப்பூர்வமான ஆலோசனையாக எடுத்துக்கொண்டு சிந்திக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
