இஸ்லாத்தின் பார்வையில் பண்டிகை கால வியாபாரமும் பரிமாற்றங்களும்
பல்வேறு மதங்களும் கலாச்சாரங்களும் சங்கமிக்கும் சமூகங்களில் வாழும் முஸ்லிம்கள், அன்றாட வாழ்விலும் குறிப்பாக வணிகத்திலும் பலவிதமான சூழல்களை எதிர்கொள்கின்றனர்.
தீபாவளி போன்ற பிற மதத்தினரின் பண்டிகைக் காலங்களில், வணிகர்களும் வாடிக்கையாளர்களும் தங்களுக்குள் வாழ்த்துக்களையும், இனிப்புகளையும், பரிசுப் பொருட்களையும் பரிமாறிக்கொள்வது ஒரு வாடிக்கையாக உள்ளது.
இந்தச் சூழலை ஒரு முஸ்லிம் எவ்வாறு இஸ்லாமிய வழிகாட்டுதலின் அடிப்படையில் அணுக வேண்டும் என்பது மிக முக்கியமானது.
இஸ்லாம், பிற மதத்தவருடன் நல்லிணக்கத்துடனும், நீதியுடனும், சிறந்த முறையிலும் நடந்துகொள்ளவே வழிகாட்டுகிறது.
வணிகத்தில் நேர்மையையும், சிறந்த குணத்தையும் பேணுவது ஒரு முஸ்லிமின் அடையாளமாகும். இந்த அடிப்படையில், பண்டிகைக் கால பரிமாற்றங்களை இஸ்லாம் பிரித்து நோக்குகிறது.
முதலாவதாக, வாழ்த்து கூறுவது. பிற மதத்தினரின் பண்டிகைகளுக்காக நேரடியாக “தீபாவளி வாழ்த்துக்கள்” என்பது போன்று வாழ்த்து கூறுவது, அவர்களின் மதநம்பிக்கைகளையும், வழிபாட்டு முறைகளையும் ஏற்று அங்கீகரிப்பதாக அமையும்.
இஸ்லாத்தின் அடிப்படையான ஓரிறைக் கொள்கைக்கு (தவ்ஹீத்) இது முரணாக அமைவதால், இதனைத் எவ்வாறு தவிர்க்க வேண்டும் என்பதை பார்ப்போம்
வணிக உறவைப் பேண வேண்டிய சூழலில், நேரடியாக வாழ்த்தாமல், “உங்களுக்கு இந்த நாள் சிறந்த நாளாக அமைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்” என்பது போன்ற பொதுவான நல்லாசை வார்த்தைகளைக் கூறி நல்லெண்ணத்தை வெளிப்படுத்தலாம்.
இரண்டாவதாக, பரிசுப் பொருட்களை வழங்குவது. ஒரு முஸ்லிம் வணிகர், தீபாவளிப் பண்டிகைக்காக என பிரத்யேகமாக பரிசுப் பெட்டிகளையோ அல்லது இனிப்புகளையோ தயாரித்து வழங்குவது, அப்பண்டிகையைக் கொண்டாடுவதில் தானும் பங்கு பெறுவது போன்றதாகும்.
இஸ்லாம், பிற மதத்தினரின் கொண்டாட்டங்களில் பங்கேற்பதை அனுமதிக்காததால், இச்செயலை முஸ்லிம்கள் தவிர்க்க வேண்டும்.
மூன்றாவதாக, பிறர் தரும் பரிசுப் பொருட்களை ஏற்றுக்கொள்வது. மாற்று மத வணிகரோ, வாடிக்கையாளரோ அன்பளிப்பாக இனிப்புகளையோ, பரிசுப் பொருட்களையோ வழங்கினால், அதை ஏற்றுக்கொள்வதில் தவறில்லை.
இது அவர்களின் வழிபாட்டில் கலந்துகொள்வதாக ஆகாது. மாறாக, சமூக மற்றும் வணிக நல்லுறவைப் பேணும் ஒரு செயலாகவே இது பார்க்கப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே, பிற மதத்தினர் வழங்கிய அன்பளிப்புகளை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அன்பளிப்பை நிராகரிப்பது மனக்கசப்பை ஏற்படுத்தி, இஸ்லாத்தின் மீதான தவறான பிம்பத்தை உருவாக்கக்கூடும்.
வழங்கப்படும் உணவுப் பொருள் ஹலாலாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே இங்கு கவனிக்கப்பட வேண்டிய நிபந்தனையாகும்.
இஸ்லாம் சமூக உறவுகளைப் பேணுவதற்கு அதிக முக்கியத்துவம் தருகிறது. அதேவேளை, தவ்ஹீத் கொள்கைகளில் எவ்வித சமரசத்தையும் அது ஏற்பதில்லை.
எனவே, ஒரு முஸ்லிம் தனது மார்க்க வரம்புகளைப் பேணி, பிற மதத்தவரின் பண்டிகைக் கொண்டாட்டங்களில் நேரடியாகப் பங்கேற்காமல், அதே சமயம் அவர்களுடனான சமூக மற்றும் வணிக உறவுகளில் விரிசல் விழாமல் ஹிக்மத்தாக, அன்பாகவும் நடந்துகொள்வதே சிறந்த வழியாகும்.
*الله اعلم*