இஸ்லாத்தின் அடிப்படையை உணர்த்திய நபித்தோழி பரீரா(ரலி) 

பரீராவின் கணவர் அடிமையாக இருந்தார். அவர் முஃகீஸ் என்று அழைக்கப்படுவார். (பரீரா தம்மைப் பிரிந்து விட நினைக்கிறார் என்பதை அறிந்த போது) அவர் தமது தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்ததை இப்போதும் நான் காண்பது போன்றுள்ளது.

அப்போது நபி (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் “அப்பாஸ் அவர்களே! முஃகீஸ் பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும் பரீரா முஃகீஸின் மீது கொண்டுள்ள  கோபத்தையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா?” என்று கேட்டார்கள். (முஃகீஸீடமிருந்து பரீரா பிரிந்து விட்ட போது) நபி (ஸல்) அவர்கள், “முஃகீஸிடம் நீ திரும்பிச் செல்லக் கூடாதா?” என்று (பரீராவிடம்) கேட்டார்கள்.

அதற்கு பரீரா, அல்லாஹ்வின் தூதரே! எனக்குத் தாங்கள் கட்டளை யிடுகின்றீர்களா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “(இல்லை) நான் பரிந்துரைக்கவே செய்கின்றேன்” என்றார்கள். அப்போது பரீரா, “(அப்படியானால்) அவர் எனக்குத் தேவையில்லை” என்று கூறி விட்டார்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி); நூல்: புகாரீ 5283

மார்க்கத்தின் அடிப்படை ஆதாரங்கள் என்ன? என்பதை மிகத் தெளிவாக விளக்கும் ஹதீஸ் இது! மார்க்க விஷயத்தில் படைத்தவன் மட்டுமே கட்டளையிட முடியும்; வேறு எவரும் கட்டளையிட முடியாது; அப்படி கட்டளையிட்டால் அதை ஏற்கத் தேவையில்லை என்பதையும் இச்சம்பவம் நமக்கு மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது. முதலில் இந்தச் சம்பவத்தின் பின்னணி என்ன என்பதைக் காண்போம்.

பரீரா (ரலி) ஆரம்பத்தில் அடிமையாக இருந்தார். அப்போது அவர் முஃகீஸ் என்ற நபித்தோழரைத் திருமணம் செய்திருந்தார். அவரும் அடிமையாகவே இருந்தார். இந்நிலையில் பரீரா (ரலி) அவர்களை அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் விலைக்கு வாங்கி விடுதலை செய்தார்கள். இதனால் பரீரா (ரலி) அடிமையிலிருந்து விடுதலை அடைந்தார். இஸ்லாத்தின் சட்டப்படி ஒருவர் அடிமையிலிருந்து விடுதலையானால் அவர் விரும்பினால் முந்தைய கணவருடன் வாழலாம்; விரும்பினால் அவரை விட்டு விடவும் செய்யலாம். இதன் அடிப்படையில் பரீரா (ரலி) அவர்கள், முஃகீஸ் (ரலி) அவர்களுடன் வாழ விரும்பவில்லை. ஆனால் முஃகீஸ் (ரலி) அவர்களோ பரீரா (ரலி) மீது அளவு கடந்த அன்பை வைத்திருந்தார். அவருடன் வாழ விரும்பினார். ஆனால் பரீரா (ரலி) தொடர்ந்து மறுத்து வந்தார். எனவே பரீரா (ரலி) அவர்கள் பின்னால் அழுது கொண்டே சென்று தன்னுடன் வாழுமாறு கோரினார். ஆனாலும் பரீரா (ரலி) அதை ஏற்கவில்லை.

முஃகீஸ் (ரலி) அவர்கள், பரீரா (ரலி) மீது வைத்திருந்த அன்பைக் கண்டு இரக்கமுற்ற நபி (ஸல்) அவர்கள், “சேர்ந்து வாழ்ந்தால் என்ன?” என்று பரீரா (ரலி) அவர்களிடம் கூறினார்கள். இதைக் கேட்ட பரீரா (ரலி), “இது அல்லாஹ்வின் கட்டளையா? அல்லது உங்கள் சொந்த விருப்பமா?” என்று கேட்கிறார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இது என் சொந்த விருப்பம் தான், நான் பரிந்துரை தான் செய்கிறேன். இது மார்க்கச் சட்டம் அல்ல!” என்று தெளிவு படுத்திய போது, முஃகீஸ் எனக்குத் தேவையில்லை என்று திட்ட வட்டமாகக் கூறி விட்டார்கள். இதைத் தான் மேற்கூறிய ஹதீஸ் எடுத்துரைக்கிறது.

மார்க்கத்தில் கட்டளையிட அதிகாரம் உள்ளவன் நம்மைப் படைத்த இறைவன் மட்டுமே! அவனுக்கே முழு அதிகாரமும் உள்ளது என்ற கருத்தையே இந்தச் சம்பவம் நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

அதிகாரம் அல்லாஹ்வுக்கே தவிர (வேறு எவருக்கும்) இல்லை. அவன் உண்மையை உரைக்கிறான். அவன் தீர்ப்பளிப்போரில் மிகச் சிறந்தவன் என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 6:57)

படைத்தவனின் கட்டளைகளைக் கொண்டே மார்க்க விஷயத்தில் நாம் எந்த முடிவையும் எடுக்க வேண்டும். அவன் இறக்கியதை விட்டு விட்டு மனிதக் கூற்றுகளையும் யூகங்களையும் உலக நடைமுறை களையும் பின்பற்றினால் நாம் நஷ்டவாளிகளே என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் (ஏக இறைவனை) மறுப்பவர்கள். (அல்குர்ஆன் 5:44)

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள். (அல்குர்ஆன் 5:45)

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோரே குற்றவாளிகள். (அல்குர்ஆன் 5:47)

படைத்தவன் இறக்கியது என்று கூறும் போது திருக்குர்ஆன் மட்டுமல்ல! அத்துடன் அதை விளக்குவதற்கு நபி (ஸல்) அவர்களையும் அனுப்பியுள்ளான். அவர்கள் கூறிய சட்டத்தையும் நாம் பின்பற்ற வேண்டும்.

மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம். (அல்குர்ஆன் 16:44)

இந்த வசனத்தின் படி நபி (ஸல்) அவர்களின் விளகத்தையும் நாம் ஏற்க வேண்டும். மேலும் திருக்குர்ஆன் அல்லாத வஹீயையும் (சுன்னாவையும்) அல்லாஹ் இறக்கியுள்ளான்.

நம்பிக்கை கொண்டோருக்கு அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பியதன் மூலம் அவர்களுக்கு அல்லாஹ் பேருபகாரம் செய்தான். அவர்களுக்கு அவனது வசனங் களை அவர் கூறுவார். அவர்களைத் தூய்மைப்படுத்துவார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார். இதற்கு முன் அவர்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருந்தனர். (அல்குர்ஆன் 3:164)

இவ்வசனத்தில் இறைத்தூதர் ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார் என்று கூறப்பட்டுள்ளது. இங்கு ஞானம் என்று கூறப்பட்டுள்ளது ஹதீஸைத் தான். எனவே திருக்குர்ஆனோடு ஆதாரப்பூர்வமான ஹதீஸையும் பின்பற்றுவது கட்டாயமாகும். நபி (ஸல்) அவர்களின் கூற்றை ஏற்று நடப்பது அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று நடப்பதைப் போன்றதாகும்.

இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டார். யாரேனும் புறக்கணித்தால் உம்மை அவர்களின் காப்பாளராக நாம் அனுப்பவில்லை. (அல்குர்ஆன் 4:80)

மேற்கூறிய ஆதாரங்களின் அடிப்படையில் இஸ்லாமிய மார்க்கத்தின் மூல ஆதாரங்கள் இரண்டே இரண்டுதான்! இந்த இரண்டு மட்டுமே பின்பற்றப்படுவதற்கு தகுதியானதாகும். எவ்வளவு பெரிய மனிதரின் கூற்றாக இருந்தாலும் அந்த கூற்றை ஏற்று நடப்பது யாருக்கு கட்டாயம் இல்லை.

இதற்கு சிறந்த உதாரணம் தான் பரீரா (ரலி) அவர்களின் சம்பவம். முஃகீஸ் (ரலி) அவர்களுடன் சேர்ந்து வாழுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறிய யோசனையை பரீரா (ரலி) அவர்கள், இது மார்க்கச் சட்டமா? அல்லது உங்கள் சொந்தக் கருத்தா? என்று வினவி, நபி (ஸல்) அவர்களின் சொந்தக் கருத்து என்று கூறப்பட்ட போது, நபிகளாரின் கூற்றையே அவர்கள் ஏற்கவில்லை. காரணம், அதைப் படைத்தவனின் கட்டளையாக நபிகளார் கூறாதது தான்.

இவ்வுலகத்தில் மிகச் சிறந்த மாமனிதர் நபி (ஸல்) அவர்களைத் தவிர வேறு எவரும் இருக்க முடியாது. அவ்வாறு இருந்தும் அவர்களின் சொந்தக் கூற்றைக் கூட ஏற்று நடக்க வேண்டிய அவசியம் இல்லை என்றால் இவ்வுலகத்தில் வாழும் மற்றவர்களின் கூற்று எவ்வளவு மதிப்புடையதாக இருக்கும்?

ஆனால் இன்று ஷைகு, முரீது என்ற பெயரில் மனிதனை பக்குவப் படுத்துகிறோம் என சில போலி ஷைகுமார்கள் உலா வருகின்றனர். அவரிடம் பைஅத் (உடன்படிக்கை) எடுத்து விட்டால் அவர் சொன்ன அடிப்படையில் தான் நாம் நடக்க வேண்டுமாம். திருமணம் மற்றும் ஏனைய அனைத்துக் காரியங்களையும் அவரிடம் கேட்டுத் தான் செய்ய வேண்டுமாம். இப்படிப் பலர் மக்களை ஏமாற்றுகின்றனர்.

ஆனால் பரீரா (ரலி) அவர்கள் நபிகளார் சொந்தக் கூற்றாக சொன்ன விஷயத்தை ஏற்க மறுத்தார்கள். அதற்காக நபிகளார் கோபப் படவில்லை. நபிகளாரின் கூற்றுக்கே இந்த நிலை என்றால் ஷைகுமார்கள் எம்மாத்திரம்? சிந்தித்துப் பாருங்கள்.

மார்க்க விஷயத்தில் பரீரா (ரலி) அவர்களைப் போன்று இன்றைய பெண்களும் ஆண்களும் திகழ்ந்தால் மொத்த மூட நம்பிக்கைகளையும் உடைத்தெறிந்து திருக்குர்ஆன், நபிமொழிகளின் அடிப்படையில் வாழ்ந்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றியடையலாம்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *