இஸ்ராயீல் என்னும் பெயரில் மலக்கு உண்டா?
இவர்தான் மனிதர்களின் உயிர்களை கைப்பற்றுபவரா?
மலக்குமார்களை நம்புவது இஸ்லாத்தில் ஈமானின் ஒரு பகுதியாகும். எனவே நாம் ஈமான் கொள்வதாக இருந்தால் அந்த ஈமானை அல்லாஹ் தன் திருமறையின் வாயிலாக அறிவித்திருக்க வேண்டும் அல்லது நபிகளார் (ஸல்) அறிவித்திருக்க வேண்டும்.
மனிதர்களின் உயிர்களைக் கைப்பற்ற இஸ்ராயீல் என்ற வானவரை அல்லாஹ் நியமித்திருக்கிறான் என்று பரவலாக தமிழக முஸ்லிம்கள் நம்புகின்றனர்.
குர்ஆன் ஹதீஸ் வாயிலாக பார்த்தால் ஜிப்ரீல், மீக்காயீல், இஸ்ராஃபீல், மாலிக், முன்கர், நகீர் போன்ற வானவர்கள் உள்ளதாக நாம் அறியலாம். ஆனால் இஸ்ராயீல் என்ற பெயரில் ஒரு வானவர் இருக்கிறார் என்று திருக்குர்ஆனிலோ, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளிலோ எந்தக் குறிப்பும் இல்லை. ஒரே ஒரு வானவர் தான் அனைவருடைய உயிரையும் கைப்பற்றுகிறார் என்று கூறுவதற்கும் எந்தச் சான்றும் இல்லை.
திருக்குர்ஆனை நாம் ஆய்வு செய்து பார்த்தால் ஒவ்வொரு மனிதனின் உயிரைக் கைப்பற்றுவதற்கும் தனித்தனியான வானவர்கள் இருப்பதாக 32:11 வசனம் கூறுகிறது.
அதிகமான மக்களைப் பற்றி பன்மையாகப் பேசும்போது அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றுவார்கள் என்று பன்மையாகவே கூறப்படுகிறது. நம்முடைய தூதர்கள் அவர்களின் உயிர்களைக் கைப்பற்றுவார்கள் என பன்மையாகக் கூறப்படுவதைக் காணலாம்.
அனைவருடைய உயிரையும் கைப்பற்றுவதற்கு ஒரே ஒரு வானவர் தான் இருக்கிறார் என்ற நம்பிக்கை தவறானது இவையாவும் தெளிவுபடுத்துகின்றன.
ஒவ்வொரு மனிதனின் உயிரைக் கைப்பற்றுவதற்கும் ஒரு வானவரை அல்லாஹ் நியமித்திருக்கிறான். எப்போது கைப்பற்ற வேண்டும் என்ற உத்தரவு வருகிறதோ அந்த உத்தரவுக்காக ஒவ்வொரு வினாடி நேரமும் அவர் காத்துக் கொண்டிருக்கிறார். இதுதான் திருக்குர்ஆனிலிருந்தும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கவுரையிலிருந்தும் கிடைக்கின்ற முடிவாகும்.
இஸ்ராயீல் என்னும் பெயரில் வானவர் உள்ளார் என்பதற்கும், அவர்தான் மனிதர்களின் உயிர்களை கைப்பற்றுவார் என்பதற்கும் எந்த சான்றும் இல்லை..
ஆதாரங்கள்:
உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள் என்று கூறுவீராக!
(திருக்குர்ஆன் 32:11)
நல்லோராக இருக்கும் நிலையில் அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றி, உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! நீங்கள் செய்தவற்றின் காரணமாக சொர்க்கத்தில் நுழையுங்கள்! என்று கூறுவார்கள்.
(திருக்குர்ஆன் 16:32)
(ஏகஇறைவனை) மறுப்போரின் முகங்களிலும், முதுகுகளிலும் வானவர்கள் அடித்து அவர்களைக் கைப்பற்றும் போது, சுட்டெரிக்கும் வேதனையை அனுபவியுங்கள்! என்று கூறுவதை நீர் பார்க்க வேண்டுமே!
(திருக்குர்ஆன் 8:50)
அல்லாஹ்வுக்கும், அவனது வானவர்களுக்கும், அவனது தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீகாயீலுக்கும் யார் எதிரியாக இருக்கிறாரோ, அத்தகைய மறுப்போருக்கு அல்லாஹ்வும் எதிரியாக இருக்கிறான்.
(திருக்குர்ஆன் 2:98)
(நரகக் காவலரான) மாலிக்கே! உமது இறைவன் எங்களுக்கு எதிராக (மரணத்தை)த் தீர்ப்பளிக்கட்டும்” எனக் கேட்பார்கள். “நீங்கள் (இங்கேயே) இருப்பீர்கள் என்று அவர் கூறுவார்.
(திருக்குர்ஆன் 43:77)
அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையைத் துவக்கியதும் முதலில் என்ன கூறுவார்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையைத் துவக்கியதும் அல்லாஹும்ம ரப்ப ஜப்ராயீல வ மீக்காயீல வ இஸ்ராஃபீல, ஃபாத்திரஸ் ஸமாவாத்தி வல்அர்ளி, ஆலிமல் ஃகைபி வஷ்ஷஹாதத்தி, அன்த தஹ்குமு பய்ன இபாதிக ஃபீமா கானூ ஃபீஹி யக்தலிஃபூன். இஹ்தினீ லிமக்துலிஃப ஃபீஹி மினல் ஹக்கி பி இத்னிக, இன்னக தஹ்தீ மன் தஷாஉ இலா ஸிராதிம் முஸ்தகீம் என்று கூறுவார்கள் என்று பதிலளித்தார்கள்.
(பொருள்: இறைவா! (வானவர்களாகிய) ஜிப்ராயீல், மீக்காயீல், இஸ்ராஃபீல் ஆகியோரின் அதிபதியே! வானங்கள் மற்றும் பூமியை முன்மாதிரியின்றிப் படைத்தவனே! மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்தவனே! நீ உன் அடியார்களிடையே அவர்கள் கொண்டிருந்த கருத்துவேறுபாடுகள் குறித்து (மறுமையில்) தீர்ப்பு வழங்குவாய். (பிற மக்களால்) மாற்றுக் கருத்து கொள்ளப்பட்டாலும் சத்திய (மார்க்க)த்திலேயே உன் தயவால் என்னை நிலைத்திருக்கச் செய்வாயாக! நீ நாடியவர்களை நேரான வழியில் நீயே செலுத்துகிறாய்
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் 1418.
உங்களில் ஒருவர் மரணித்து அடக்கம் செய்யப்பட்டால் அவரிடம் கரு நிறமான நீல நிறக் கண்களுடைய இரண்டு மலக்குகள் வருவார்கள். அவர்கள் முன்கர் என்றும் நகீர் என்றும் சொல்லப்படுவார்கள் அவர்கள் நபீ (ஸல்) அவர்களைக் குறித்து அவனிடத்தில் ‘இந்த மனிதரைப் பற்றி நீ என்ன சொல்கிறாய்’ என்று கேட்பார்கள். அவன் (மூமினாக இருந்தால்) ‘அவர்கள் அல்லாஹ்வுடைய அடியாரும் அவனுடைய தூதருமாவார்கள் என்று சாட்சி கூறுகிறேன்’ என்று கூறுவான். அப்பொழுது அந்த மலக்குகள் அவனை நோக்கி நீ இவ்வாறு கூறுவாய் என்பதை ஏற்கெனவே நாம் அறிந்திருந்தோம் என்று கூறுவார்கள். அதனைத் தொடர்ந்து அவனுடைய கப்ரு எழுபது முழங்கள் விசாலமாக்கப்படும். பின்னர் அந்த கப்ரு ஒளியேற்றப்பட்டு பிரகாசமாக்கப்படும்.
அவனை நோக்கி ‘நீ உறங்குவாயாக!’ என்று கூறுவார்கள்.
அவனோ அவர்களை நோக்கி என்னுடைய குடும்பத்திடம் நான் சென்று (எனக்குக் கிடைத்துள்ள இந்த நற்பாக்கியத்தை) அறிவித்து விட்டு வர என்னை விட்டு விடுங்கள் என்ற கூறுவான். அப்பொழுது அந்த மலக்குகள் ‘மிக விருப்பத்துக்குரிய ஒருவரேயன்றி வேறெவரும் எழுப்பாதவுள்ள மணமகனின் உறக்கமாக நீ உறங்குவாயாக!’ என்று கூறுவார்கள்.
அன்று முதல் மறுமை நாள் வரை அவன் உறங்கிக் கொண்டே இருப்பான். (அந்த இரு வானவர்கள்) முனாபிக் ஒருவனிடம் கேள்வி கேட்கும் போது, ‘மக்கள் ஏதேதோ சொல்ல நான் கேட்டிருக்கிறேன். ஆனால் (இப்பொழுது எதுவும்) எனக்குத் தெரியாது’ என்று கூறுவான். அப்பொழுது அந்த மலக்குகள் அவனை நோக்கி ‘நீ இவ்வாறே பதிலளிப்பாய் என்பதை ஏற்கனவே நாம் அறிந்து வைத்திருந்தோம்’ என்று கூறுவார்கள்.
அதனைத் தொடர்ந்து அவனை நெருக்குமாறு பூமிக்கு உத்தரவிடப்படும். அவனுடைய (வலது இடது) விலா எலும்புகள் ஒன்றோடொன்று பின்னிக்கொள்ளுமளவு அது அவனை நெருக்கும். அவனை அந்த இடத்திலிருந்து அல்லாஹ் எழுப்புகின்ற நாள்வரை அவன் வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருப்பான் என்று நபீ (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
ஆதாரம்: திர்மிதி: 991