இறை நினைவினால் கிடைக்கும் வெற்றி
இவ்வுலகத்தில் நாம் செய்யும் வணக்க வழிபாடுகளாயினும், இதர விஷயங்களாயினும், நமக்கு ஏற்படும் கஷ்டங்களைச் சகித்துக் கொள்வதாயினும் இவை அனைத்துமே மறுமையில் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே! இதில் முஸ்லிம்களில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. மறுமையில் திருப்தியான வாழ்வு அமைய வேண்டும் என்றால் நன்மையின் எடை கனமானதாக இருக்க வேண்டும்.
மேலும் இறைவனை நினைவுகூரும் நல்லடியார்களே வெற்றியாளர்கள் என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா செல்லும் சாலையில் பயணம் மேற்கொண்டபோது ஜும்தான் எனப்படும் மலையொன்றைக் கடந்து சென்றார்கள். அப்போது, “செல்லுங்கள்: இது ஜும்தான் மலை ஆகும்.
தனித்துவிட்டவர்கள் வெற்றி பெற்றனர் என்று சொன்னார்கள்.
மக்கள், தனித்துவிட்டவர்கள் என்போர் யார், அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூரும் ஆண்களும் நினைவுகூரும் பெண்களும் ஆவர்’ என்று பதிலளித்தார்கள்.
நூல்: முஸ்லிம் 5197
நம்மிடம் அரிதாகிப் போன திக்ர் என்ற நல் அமலை நாள்தோறும் செய்வதன் மூலம் நன்மையின் எடையை அதிகரித்து, மறுமையில் வெற்றி பெறும் பாக்கியத்தைத் தந்தருள்வானாக!
————————-
ஏகத்துவம்