இவ்வசனத்தில் (24:35) அல்லாஹ் தன்னை ஒளி எனக் கூறி விட்டு தனது ஒளிக்கு உதாரணமாக ஒரு விளக்கைக் கூறுகிறான்.
இந்த விளக்கு உதாரணம் அல்லாஹ்வின் ஒளியோடு ஒப்பிடும்போது ஏற்புடையதாக இல்லை.
ஏனென்றால் ஒளி வீசுகின்ற எண்ணெய்யை விளக்கில் ஊற்றி எரித்தாலும், அதற்குக் கண்ணாடியால் மூடி ஏற்படுத்தினாலும் அந்த ஒளி, அல்லாஹ்வின் ஒளியோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியாதது என்பதை அனைவரும் அறிவோம். இது எவ்வாறு அல்லாஹ்வின் ஒளிக்கு உதாரணமாக அமையும் என்ற கேள்வி இதில் எழுகிறது.
ஆனால் இங்கே அல்லாஹ் தனது ஒளிக்கு உதாரணம் என்று குறிப்பிடுவதை தனது மார்க்கத்திற்கும், தான் காட்டுகின்ற நேர்வழிக்கும் உதாரணம் என்றே கொள்ள வேண்டும்.
ஏனென்றால் இந்த வசனத்தை நிறைவு செய்யும்போது “தனது ஒளியை நோக்கி நாடியவர்களுக்கு அல்லாஹ் வழிகாட்டுவான்” என்று கூறப்படுகிறது.
நாடியவர்களுக்கு அல்லாஹ் வழிகாட்டுவான் என்பது தனது மார்க்கத்திற்கு வழிகாட்டுவான் என்ற கருத்தில் தான் பயன்படுத்தப்படுகிறது.
அல்லாஹ்வை அதாவது அவனது ஒளியை யாரும் பார்க்க முடியாது என்று 2:55, 4:153, 6:103, 7:143, 25:21 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
எனவே இவ்வசனத்தில் (24:35) உதாரணமாகக் கூறப்படுகின்ற ஒளி, அவனுடைய மார்க்கத்திற்கும், நேர்வழிக்கும் உதாரணமே தவிர அல்லாஹ்வின் ஒளிக்கு உதாரணம் அல்ல.
அல்லாஹ்வுக்கு நிகராக எதுவும் இல்லை என்று 42:11, 112:4 ஆகிய வசனங்கள் கூறுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.