இறைவனுக்கு மிகவும் வெருப்புக்குரியது விவாகரத்தா?
அனுமதிக்கப்பட்டவைகளில் அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பானது விவாகரத்தாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),
நூல் : அபூதாவூத் (1863)
இதே செய்தி இப்னுமாஜா (2008), பைஹகீ (14671), ஹாகிம் (2794), முஸன்னப் இப்னு அபீஷைபா (19194), முஸ்னத் அப்தல்லாஹ் பின் உமர் (14) ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியை அறிவிக்கும் மூன்றாவது அறிவிப்பாளர் முஅர்ரிஃப் பின் வாஸில் என்பவராவார். இவரிடமிருந்து நான்கு அறிவிப்பாளர் இந்த செய்தியை அறிவித்துள்ளனர்.
முஹம்மத் பின் காலித்,
அஹ்மத் பின் யூனுஸ்,
வகீஃ பின் அல்ஜர்ராஹ்,
யஹ்யா பின் புகைர்
ஆகிய நான்கு அறிவிப்பளர்களும் முஅர்ரிஃப் பின் வாஸில் என்பவரிடமிருந்து அறிவித்துள்ளனர்.
இதில் முஹம்மத் பின் காலித் என்பவர் மட்டும்தான் நபி (ஸல்), இப்னு உமர் (ரலி), முஹாரிப் பின் திஸார், முஅர்ரிஃப் பின் வாஸில் என்ற வரிசையில் கூறியுள்ளார். ஆனால் மற்ற மூன்று நபர்கள் நபி (ஸல்), முஹாரிப் பின் திஸார், முஅர்ரிஃப் பின் வாஸில் என்ற வரிசையில் கூறியுள்ளார்கள்.
அதாவது நபித்தோழர் இப்னு உமர் (ரலி) அவர்கள் இல்லாமல் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக (முர்ஸலாக) அறிவித்துள்ளார்கள்.
இதன் அறிவிப்பாளர் வரிசை அனைத்தையும் இமாம் பைஹகீ அவர்கள் தமது ஸுனனுல் குப்ரா என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள்.
ஆனால் இந்த செய்தியில் நபித்தோழர் விடுபட்டுள்ளதால் இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.