இறைநேசர்களைக் கண்டறிய முடியுமா
மறுமையில் வெற்றி பெறவேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி, அவனது கட்டளைகளை ஏற்றுச் செயல்பட்ட நல்லவர்கள் இறைநேசர்கள் எனப்படுகின்றனர். இறைநேசர்கள் என்பதற்கான இந்த இலக்கணத்தை அனைவரும் அறிந்து கொள்ள முடியும்.
ஆனால் தனிப்பட்ட மனிதர்களை இறைநேசர்கள் என்று கூறமுடியுமா? அறிந்து கொள்ள முடியுமா?
இறைநேசர்கள் என்பதற்கு, இறைவனை நேசிப்பவர்கள் என்றும் பொருள் கொள்ளலாம். இறைவனால் நேசிக்கப்பட்டவர்கள் என்றும் பொருள் கொள்ளலாம். ஒருவரை இறைநேசர் என்று யாரும் முடிவு செய்ய முடியாது என்பதை இந்த இரண்டு அர்த்தங்களுமே தாங்கி நிற்கின்றன.
இறைவனை நேசிப்பவர் என்று பொருள் கொண்டால் அந்த நேசம் அவரது உள்ளத்தில் தான் இருக்கும். அவர் இறைவனை நேசிக்கிறாரா? அல்லது நடிக்கிறாரா? என்று மற்றவர்களால் கண்டுபிடிக்க முடியாது.
இறவனால் நேசிக்கப்பட்டவர் என்று பொருள் கொண்டால் அது இறைவனுக்கு மட்டும் தான் தெரியும். இறைவனின் உள்ளத்தில் உள்ளதை இறைவனைத் தவிர யாரும் அறிய முடியாது என்பதால் இதையும் யாரும் கண்டுபிடிக்க முடியாது.
இறைவனின் உள்ளத்தில் இருப்பதை அறிந்து கொள்வது இருக்கட்டும். ஒரு மனிதனை இன்னொரு மனிதன் மெய்யாக நேசிக்கிறான் என்பதைக் கூட அறிய முடியாது. கணவன் மனைவிக்கு இடையே எவ்வளவு நெருக்கம் இருந்தாலும் கணவன் மெய்யாக நேசிக்கிறானா என்று மனைவியால் கண்டுபிடிக்க முடியாது. மனைவி மெய்யாக நேசிக்கிறாளா என்று கணவனால் கண்டுபிடிக்க முடியாது.
இரு நண்பர்களுக்கிடையே உள்ள நட்பாகட்டும்; இரு உறவினர்களுக்கிடையே உள்ள உறவாகட்டும்; தலைவன் தொண்டனுக்கு இடையே உள்ள நேசமாகட்டும் இவை மெய்யானதுதானா என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது.
🗣வெளிப்படையான செயல்களை வைத்துத் தான் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை அறிய முடியும். ஆனால் அந்த அறிவு முற்றிலும் சரியாக இருப்பதில்லை.
💵இவனை நம்பி கடன் கொடுத்தேன்; என்னை ஏமாற்றி விட்டான் என்று பலரும் புலம்புவதைக் கான்கிறோம். அவனது உள்ளத்தில் உள்ளதை அறிய முடியாததால் தான் கடன் கொடுத்து ஏமாந்து போகின்றனர்.
ஒருவனை நம்பி நாம் கடையில் சேர்க்கிறோம். அவன் அனைத்தையும் சுருட்டிக்கொண்டு ஓடி விடுகிறான். அவன் ஓடிப் போன பின்பு தான் அவனுடைய உள்ளத்தில் தவறான எண்ணம் இருந்தது தெரிகிறது.
ஓடுவதற்கு முன்னால் அவன் நல்லவனாகத்தான் தெரிந்தான். என் மனைவி என்னை மெய்யாக நேசிக்கிறாள் என்று நம்பி என் சொத்துக்கள் அனைத்தையும் அவள் பெயரில் மாற்றிக் கொடுத்தேன் என்று புலம்பும் கணவர்களைப் பார்க்கிறோம். ஓருடல் ஈருயிராக இணைந்திருந்த மனைவி தன்னை நேசிக்கிறாளா என்று கணவனால் அறிய முடியவில்லை என்றால் அல்லாஹ்வை ஒருவர் நேசிக்கிறார் என்று எப்படி அறிய முடியும்? அப்படி முடிவு செய்தால் அல்லாஹ் நினைப்பதைக் கண்டுபிடிக்கும் ஆற்றலுக்கு நாம் உரிமை கொண்டாடியதாக ஆகும்.
எனவே இவர் அவ்லியா, அவர் அவ்லியா என்று பட்டம் கொடுப்பதில் இருந்து முஸ்லிம்கள் விலகிக் கொள்ள வேண்டும் என்பதற்கு இதுவே போதுமான ஆதாரமாகும்.
ஒருவரை இறைநேசர் என்று யாரும் முடிவு செய்ய முடியாது என்பதற்கு நேரடியான பல ஆதாரங்கள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
ஒருவரை இறைநேசர் என்று யாரும் முடிவு செய்ய முடியாது என்பதற்கு நேரடியான பல ஆதாரங்கள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அவர்கள் (இறைவனை) நம்புவார்கள். (அவனை) அஞ்சுவோராக இருப்பார்கள்.
📖திருக்குர்ஆன் 10:62, 63
இறைநேசர்களுக்கு அச்சமும் இல்லை; கவலையும் இல்லை என இறைவன் கூறிவிட்டு, யார் இறைநேசர்கள் என்பதையும் சொல்லித் தருகிறான்.
நம்ப வேண்டியவைகளைச் சரியான முறையில் நம்புவதும், அல்லாஹ்வை அஞ்சுவதுமே இறைநேசர்களுக்கான இலக்கணம் என்று அல்லாஹ் கூறுகிறான்.
அல்லாஹ்வின் மீதும், வானவர்கள் மீதும், நபிமார்கள் மீதும், வேதங்கள் மீதும், மறுமையின் மீதும், விதியின் மீதும் சரியான நம்பிக்கை யாருடைய உள்ளத்தில் இருக்கிறதோ அவர்களும், யாருடைய உள்ளத்தில் இறைவனைப் பற்றிய அச்சம் இருக்கிறதோ அவர்களுமே இறைநேசர்கள் என்று இறநேசர்களின் இலக்கணத்தை அல்லாஹ் சொல்கிறான்.
ஜுப்பா அணிந்திருப்பவர், பெரிய தலைப்பாகை கட்டியவர், பெரிய தாடி வைத்திருப்பவர், பள்ளிவாசலிலேயே அமர்ந்து தவம் செய்பவர், வருடா வருடம் ஹஜ் செய்பவர், எல்லா நேரமும் வணக்கத்தில் மூழ்கியிருப்பவர், பொருளாதாரத்தை வாரி வாரி வழங்குபவர் போன்ற அடையாளங்களை அல்லாஹ் கூறி இருந்தால் இறைநேசர்களை நாம் கண்டுபிடித்து விடலாம். ஆனால் இறைநேசர்களுக்கு அடையாளமாக அல்லாஹ் கூறியவை உள்ளம் சம்மந்தப்பட்டவை.
நம்ப வேண்டியவைகளை ஒருவர் உண்மையாகவே நம்பி இருக்கிறாரா என்பதும், அல்லாஹ்வை ஒருவர் அஞ்சுகிறாரா என்பதும் அவரது உள்ளத்தில் உள்ளவையாகும். இதை யாரும் கண்டுபிடிக்க முடியாது என்பதால் இன்னார் இறைநேசர் என்பதையும் கண்டுபிடிக்க முடியாது என்பது இதிலிருந்து உறுதியாகின்றது.
இறைநேசர்கள் யார் என்பது மறுமையில்தான் தெரிய வரும். சொர்க்கவாசிகள் என்று எடுத்த எடுப்பிலேயே யாருக்கு அல்லாஹ் தீர்ப்பளிக்கின்றானோ அவர்கள்இறைநேசர்கள் என்று அப்போது தான் அறிய முடியும். அல்லாஹ் தீர்ப்பளிப்பதற்கு முன்னர் இறைநேசர் பட்டம் கொடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை.