இறைநெருக்கத்தைப் பெற்றுத்தரும் இரவுத்தொழுகை
அல்லாஹ் இந்த உலகத்தில் மனிதர்களைப் படைத்து, படைக்கப்பட்ட மனிதர்கள் நன்றி செலுத்த வேண்டும் என்பதற்காக ஏராளமான வழிமுறைகளையும், அமல்களையும் கற்றுத் தருகின்றான். இறைவனால் வழங்கப்பட்டிருக்கின்ற அமல்களில் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்தது தொழுகை.
முஸ்லிம்களாக வாழ்கின்ற ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் கடமையான தொழுகையை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் என்பது இறைவனின் கட்டளை. கடமையான தொழுகையை தொழாமல் விடுபவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என இஸ்லாம் கூறுகின்றது. என்றாலும், கடமையான தொழுகைக்கு அடுத்தபடியாக இருக்கின்ற உபரியான தொழுகைகளின் மூலமாகவும் இறைவனின் அன்பையும், நெருக்கத்தையும், வெகுமதியையும் நம்மால் அதிகம் பெற முடியும்.
கடமையான தொழுகையைப் பொறுத்தவரை அதைக் குறித்துத்தான் மறுமையில் முதன் முதலாக இறைவனிடத்தில் விசாரணை நடைபெறும் என்பதாலும், தொழுகையை நிறைவேற்றாமல் விடுவது நரகத்தில் கொண்டு போய்ச் சேர்த்துவிடும் என்பதாலும் நம்மால் இயன்றவரை கடமையான தொழுகைகளை நிறைவேற்றி வருகின்றோம்.
ஆனால் சுன்னத்தான, நஃபிலான தொழுகைகளைப் பொறுத்தவரை அவைகள் குறித்து மறுமையில் விசாரிக்கப்படாது என்பதாலும், சுன்னத்தான தொழுகைகளை விட்டுவிட்டால் பாவங்கள் எதுவும் எழுதப்படாது என்ற காரணத்தினாலும் அவற்றை நிறைவேற்றுவதில் அலட்சியமாகவும், பொடும்போக்காகவும் இருந்து வருகின்றோம்.
எனவே, உபரியான வணக்கங்களுக்குக் குர்ஆன் ஹதீஸில் சொல்லப்பட்ட சிறப்புகளையும், மாண்புகளையும், முக்கியத்துவத்தையும் தெரிந்து கொண்டால் அவற்றை நிறைவேற்றுவதில் அலட்சியம் காட்ட மாட்டோம். அப்படிப்பட்ட உபரியான வணக்கங்களில் அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் வழிகாட்டியதில் சிலவற்றை இந்த உரையில் காண்போம்…
நல்லடியார்களின் நற்பண்புகளில் ஒன்று
நல்லடியார்களிடம் இருக்க வேண்டிய நற்பண்புகளைப் பற்றி வர்ணனை செய்யும் இறைவன், இரவில் நின்றும் ஸஜ்தா செய்தும் இரவை வணக்கத்தில் கழிப்பதைக் குறிப்பிட்டு இரவுத் தொழுகையின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறான். இதன் காரணத்தினால் மனிதர்களுக்கு மென்மேலும் பல நன்மைகளும் கிடைக்கின்றது.
அவர்கள் தமது இறைவனுக்காக ஸஜ்தாச் செய்தும், நின்றும் இரவைக் கழிப்பார்கள்.
(அல்குர்ஆன்:25:63)
அந்த அடிப்படையில் இறைவனின் நேசத்திற்குரியவர்களாக மாற, மனிதர்கள் உறங்கிக் கொண்டிருக்கின்ற இரவு நேரங்களில் இறைவனை நினைத்துத் தொழ வேண்டும்.
இறைநெருக்கத்தைப் பெற்றுத்தரும் உபரியான வணக்கங்கள்
உபரியான வணக்கங்களை, அதிலும் குறிப்பாக இரவின் கடைசி நேரத்தில் தொழுகின்ற இரவுத் தொழுகை உட்பட சரிவர நிறைவேற்றி வந்தால் இறைவனின் நெருக்கத்தைப் பெறுகின்ற மனிதர்களாகவும், இறையுதவி அதிகம் கிடைக்கின்ற மனிதர்களாகவும் நாம் மாறலாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் கூறினான்:
எவன் என் நேசரைப் பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்துகொண்டேயிருப்பான்.
இறுதியில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறு நான் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன்.
என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எந்தச் செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.
ஆதாரம்: புகாரி 6502
உபரியான வணக்கங்களைச் சரியாக நிறைவேற்றினால் இறைவனின் பக்கம் நாம் நெருங்கிக் கொண்டே இருப்போம் என்றும், இறைவனின் நேசம் கிடைக்கும் என்றும், இறுதியாக இறைவனிடத்தில் நாம் என்ன கோரிக்கை வைத்தாலும் அதை அல்லாஹ் கட்டாயம் வழங்குவான் என்றும் இறைவன் கூறுகின்றான். எனவே உபரியான வணக்கங்களை அலட்சியப்படுத்தாமல் பேணுதலாக இருக்க முயற்சி செய்ய வேண்டும்.
இரவு நேரக் கனவும், பெற வேண்டிய படிப்பினையும்
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த ஒரு நபித்தோழரின் கனவில் வந்து வானவர் உபதேசம் செய்கின்றார்; நற்செய்தி கூறுகின்றார். அதற்குக் காரணம் என்ன? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொன்ன உபதேசங்களை கீழ்க்கண்ட ஹதீஸ் மூலமாக நாம் விளங்கிக் கொள்ள முடிகின்றது.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஒருவர் கனவு கண்டால் அதை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைப்பது வழக்கம். ஆகவே, நானும் ஒரு கனவு கண்டு அதை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அப்போது நான் (மணமாகாத) இளைஞனாக இருந்தேன். நபி (ஸல்) அவர்களது காலத்தில் நான் பள்ளிவாசலில் உறங்கக் கூடியவனாக இருந்தேன். (ஒருநாள்) நான் கனவில் இவ்வாறு கண்டேன்:
இரு வானவர்கள் என்னைப் பிடித்து நரகத்திற்குக் கொண்டு சென்றார்கள். கிணறுக்குச் சுற்றுச் சுவர் இருப்பது போன்று அந்த நரகத்திற்கும் சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டிருந்தது. அந்த நரகத்திற்கு இரு தூண்களும் இருந்தன. அந்த நரகத்தில் எனக்குத் தெரிந்த சில மனிதர்களும் இருந்தனர். உடனே நான் “நரகத்திலிருந்து பாதுகாக்கும்படி அல்லாஹ்விடம் வேண்டுகிறேன்’’ என்று பிராத்திக்கலானேன். அப்போது எங்களை மற்றொரு வானவர் சந்தித்தார். அவர் என்னிடம் “இனி ஒருபோதும் நீர் பீதியடைய மாட்டீர்’’ என்று கூறினார்.
இதை நான் (என் சகோதரியும் நபி (ஸல்) அவர்களின் துணைவியாருமான) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் விவரித்தேன். ஹஃப்ஸா (ரலி) அவர்கள் அதை நபி (ஸல்) அவர்களிடம் விவரித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் “அப்துல்லாஹ் (பின் உமர்) அவர் ஒரு சிறந்த மனிதர். அவர் இரவின் ஒரு பகுதியில் தொழுபவராயிருந்தால் (நன்றாயிருக்கும்)’’ என்று கூறினார்கள். அதன் பின்னர் இரவில் குறைந்த நேரமே தவிர நான் உறங்குவதில்லை.
(இதை அறிவித்த அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களின் புதல்வரான) சாலிம் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
(நபி (ஸல்) அவர்கள் இப்படிச் சொன்னதிலிருந்து) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் இரவில் சிறிது நேரம் மட்டுமே உறங்குபவராயிருந்தார்கள்.
ஆதாரம்: புகாரி 1121, 1122
இரவின் ஒரு பகுதியில் நின்று வணங்குகின்ற, தொழக்கூடிய ஒரு மனிதராக இருக்கின்ற காரணத்தினால் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுக்கு வானவர் கனவிலே வந்து நற்செய்தி கூறுகின்றார். அந்தக் கனவுக்கு அற்புதமான ஒரு விளக்கத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வழங்குகின்றார்கள்.
இறையருளைப் பெற்றுத்தரும் இரவுத் தொழுகை
இரவுத் தொழுகையை இரவின் கடைசி நேரத்தில் நிறைவேற்றினால் இறையருள் இறங்கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
சுபிட்சமும் உயர்வும் மிக்க நம் இறைவன் ஒவ்வோர் இரவும் பூமியின் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றிலொரு பகுதி நீடிக்கும்போது, “என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரது பிரார்த்தனையை நான் அங்கீகரிக்கிறேன். என்னிடம் யாரேனும் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் யாரேனும் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்’ என்று கூறுகிறான்.
ஆதாரம்: புகாரி 1145
ஒவ்வொரு இரவின் கடைசிப் பகுதியிலும் இறைவன் மனிதர்களை அழைத்து, என்னிடம் பாவமன்னிப்புத் தேட மாட்டீர்களா! என்னிடம் கேட்க மாட்டீர்களா! என்னிடம் பிராத்தனை செய்ய மாட்டீர்களா! என்று கேட்கிறான்.
எனது பேரருள் இரவின் கடைசிப் பகுதியில் அதிகமதிகம் இறங்குகின்றது. என்னை அதிகமதிகம் நினையுங்கள்! என்று இறைவன் அறிவுரை கூறுகின்றான்.
படிப்பினை தரும் ஃபாத்திமா (ரலி) சம்பவம்
அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என்னிடமும் தம் புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்களிடமும் ஒரு இரவு நேரத்தில் வந்தார்கள். எங்களிடம், “நீங்கள் (தஹஜ்ஜுத்) தொழவில்லையா?’’ என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! எங்கள் உயிர்களெல்லாம் அல்லாஹ்வின் கரத்தில் தானே இருக்கின்றன! அவன் எங்களை (தூக்கத்திலிருந்து) எழுப்ப நாடினால் எங்களை எழுப்பிவிடுவான்’’ என்று சொன்னேன்.
நான் இப்படிச் சொன்னபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு எந்த மறுமொழியும் கூறாமல் திரும்பிச் சென்றுவிட்டார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் திரும்பிச் சென்றபடி தமது தொடையில் தட்டிக்கொண்டே “மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாக இருக்கின்றான்’’ என்று சொல்லிக் கொண்டிருந்ததை நான் கேட்டேன்.
ஆதாரம்: புகாரி 7347
இரவு நேரத் தொழுகையில் அலட்சியம் காட்டக்கூடாது என்றும், அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் மேற்கண்ட இந்தச் செய்தி நமக்கு உணர்த்துகின்றது.
ரமளானிலும், ரமலான் அல்லாத காலங்களிலும்
இன்றைக்கு நம்மில் பெரும்பாலானோர் இரவுத் தொழுகை என்று சொன்னாலே அது ரமலான் மாதத்தில் மட்டும்தான் என்ற ஒரு எண்ண ஓட்டத்தில் ரமளானில் மட்டும் நம்மால் இயன்ற அளவு இரவுத் தொழுகையை முழுமையாகவும், ஆர்வத்துடனும் கடைப்பிடித்து வருகின்றோம். ஆனால், நபி (ஸல்) அவர்கள் ரமளானிலும், ரமலான் அல்லாத காலங்களிலும் இரவுத் தொழுகையைத் தொழுதிருக்கின்றார்கள் என்பதை நம்மால் பார்க்க முடிகின்றது.
அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “ரமளான் மாதத்தி(ன் இரவுகளி)ல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை எப்படியிருந்தது?’’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ரமளானிலும் மற்ற மாதங்களிலும் அவர்கள் பதினொரு ரக்அத்துகளுக்கு அதிகமாகத் தொழுததில்லை. (முதல்) நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே.
பிறகு நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே. பிறகு மூன்று ரக்அத்துகள் தொழுவார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் வித்ரு (மூன்று ரக்அத்கள்) தொழுவதற்கு முன்னால் உறங்குவீர்களா?’’ என்று கேட்டேன். அவர்கள், “என் கண் தான் உறங்குகின்றது; என் உள்ளம் உறங்குவதில்லை’ என்று பதிலளித்தார்கள்’’ என்று கூறினார்கள்.
ஆதாரம்: புகாரி 3569
கடமையான தொழுகைக்குப் பிறகு மிகச் சிறந்த தொழுகை
கடமையான தொழுகைக்குப் பிறகு மிகவும் சிறப்பு வாய்ந்த, அதிக நன்மையைப் பெற்றுத் தரக் கூடிய தொழுகை, இரவுத் தொழுகையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் ஆர்வப்படுத்துவதைப் பார்க்கின்றோம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளான் மாத நோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு யாதெனில், அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதநோன்பாகும். கடமையாக்கப்பட்ட தொழுகைக்கு அடுத்தபடியாகச் சிறந்த தொழுகை, இரவுத் தொழுகை (தஹஜ்ஜுத்) ஆகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: முஸ்லிம் 2157
இன்றைக்கு நம்மில் பெரும்பாலானோர் கடமையான தொழுகையைக் கூட முறையாகத் தொழாமல் சோம்பேறிகளாக இருப்பதைப் பார்க்கின்றோம். அதேவேளையில் கடமையான தொழுகைக்கு அடுத்த படித்தரத்தில் இரவுத் தொழுகையை இறைவன் வைத்திருக்கின்றான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
நபித்தோழர்களின் இரவுத் தொழுகை
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த தோழர்களும் இரவுத் தொழுகை தொழுதிருக்கின்றார்கள் என்பதற்கு கீழ்க்கண்ட செய்திகள் ஆதாரமாக இருக்கின்றது.
ஏற்கனவே மேலே நாம் சுட்டிக் காட்டிய செய்தியில் இப்னு உமர் (ரலி) அவர்கள் இரவுத் தொழுகையைத் தொழுதிருக்கின்றார்கள். இதன் காரணத்தினால் அவர்களுக்கு சிறப்புகள் கிடைத்திருப்பதைப் பார்க்கின்றோம்.
(புகாரி 1121, 1122)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஓர் இரவு நான் நபி(ஸல்) அவர்களின் இடப்புறம் நின்று தொழுதேன். அவர்கள் பின்புறமாக என்னுடைய கையைப் பிடித்து தம் வலப்புறத்தில் என்னை நிறுத்தினார்கள்.
ஆதாரம்: புகாரி 728
ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
.
நான் நபி (ஸல்) அவர்களுடன் ஓர் இரவில் (தஹஜ்ஜுத்) தொழுதேன். அதில் அவர்கள் ‘அல்பகரா’ எனும் (இரண்டாவது) அத்தியாயத்தை ஓத ஆரம்பித்தார்கள். நான் ‘அவர்கள் நூறு வசனம் முடிந்ததும் ருகூஉச் செய்து விடுவார்கள்’ என்று எண்ணினேன். ஆனால், அவர்கள் (நூறு வசனம் முடிந்த பின்னும்) தொடர்ந்து ஓதினார்கள். நான் ‘அ(ந்த அத்தியாயத்)தை (இரண்டாகப் பிரித்து ஓதி இரண்டாவது) ரக்அத்தில் முடித்து விடுவார்கள்’ என்று எண்ணினேன்.
ஆனால் (அதை முதல் ரக்அத்திலேயே) தொடர்ந்து ஓதினார்கள். நான் ‘அவர்கள் அந்த அத்தியாயம் முடிந்ததும் ருகூஉச் செய்து விடுவார்கள்’ என்று எண்ணினேன். அவர்கள் (அந்த அத்தியாயம் முடிந்ததும்) “அந்நிசா’ எனும் (4ஆவது) அத்தியாயத்தை ஆரம்பித்து ஓதினார்கள்; பிறகு ஆலு இம்ரான் எனும் (3ஆவது) அத்தியாயத்தை ஆரம்பித்து நிறுத்தி நிதானமாக ஓதினார்கள்.
அவற்றில் இறைவனைத் துதிப்பது பற்றிக் கூறும் வசனத்தை ஓதிச் செல்லும்போது (சுப்ஹானல்லாஹ் – அல்லாஹ் தூயவன் என) இறைவனைத் துதித்தார்கள்; (இறையருளை) வேண்டுவது பற்றிக் கூறும் வசனத்தைக் கடந்து செல்லும் போது (இறையருளை) வேண்டினார்கள். (இறைத் தண்டனையிலிருந்து) பாதுகாப்புக் கோருவது பற்றிக் கூறும் வசனத்தை ஓதிச் செல்லும்போது (ஓதுவதை நிறுத்திவிட்டு, இறைவனிடம்) பாதுகாப்புக் கோரினார்கள்.
பிறகு ருகூஉச் செய்தார்கள். அவர்கள் ருகூவில் ‘சுப்ஹான ரப்பியல் அழீம்’ (மகத்துவமிக்க என் இறைவன் தூயவன்) என்று கூறலானார்கள். அவர்கள் நிலையில் நின்ற அளவுக்கு ருகூஉ செய்தார்கள். பின்னர் (ருகூவிலிருந்து நிமிரும் போது) ‘சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்கிறான்) என்று கூறிவிட்டுக் கிட்டத்தட்ட ருகூஉ செய்த அளவுக்கு நீண்ட நேரம் நிலையில் நின்றிருந்தார்கள். பிறகு சஜ்தாச் செய்தார்கள். அதில் ‘சுப்ஹான ரப்பியல் அஃலா’ (மிக்க மேலான என் இறைவன் தூயவன்) என்று கூறினார்கள். அவர்கள் நிலையில் நின்றிருந்த அளவுக்கு சஜ்தாச் செய்தார்கள்.
ஆதாரம்: முஸ்லிம் 1421
நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையைத் தொழுது கொண்டிருக்கும்போது, ஹுதைஃபா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழுதிருக்கின்றார்கள். அந்த வேளையில் நபி (ஸல்) அவர்கள் குர்ஆனில் ஆறில் ஒரு பகுதியை (அல்பகரா, ஆலுஇம்ரான், அந்நிஸா) ஓதி மிக நீண்ட நேரம் தொழுதிருக்கின்றார்கள். இந்தச் செய்தியும் இரவுத் தொழுகையின் முக்கியத்துவத்தை விளக்குகின்றது.
இரவில் தொழுவோருக்கு மறுமைப் பரிசு
இரவு நேரங்களில் கண்விழித்து, படுக்கையிலிருந்து விலகி, இறைவனை வணங்கினால் இறைவன் நம்மை சிலாகித்தும், நமக்குக் கிடைக்க இருக்கின்ற பரிசுகளையும் விளக்குகின்றான்.
நமது வசனங்கள் மூலம் அறிவுரை கூறப்படும்போது ஸஜ்தாவில் விழுவோரும், தமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவோரும், பெருமையடிக்காமல் இருப்போருமே அவற்றை நம்புபவர்கள்.
அச்சத்துடனும், எதிர்பார்ப்புடனும் தமது இறைவனைப் பிரார்த்திக்க அவர்களின் விலாப்புறங்கள் படுக்கைகளிலிருந்து விலகும். நாம் வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள்.
அவர்கள் செய்து கொண்டிருந்ததற்குப் பரிசாக அவர்களுக்காகக் கண்குளிரும் வகையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதை எவரும் அறிய மாட்டார்.
(அல்குர்ஆன்:32:15-17)
தனது அடியார்களின் செயல்பாடுகளைப் பற்றி இறைவன் குறிப்பிடும் போது, படுக்கைகளிலிருந்து எழுந்து இறைவனைப் பிரார்த்திப்பார்கள் என்றும், அவர்களுக்குக் கூலியாக, மறைத்து வைக்கப்பட்ட பரிசு இருக்கின்றது என்றும் இறைவன் கூறுகின்றான்.
இரவுத்தொழுகை விடுபட்டுவிட்டால்…
இரவு நேரத்தில் தொழும் தொழுகை விடுபட்டு விட்டால் கூட அதற்கு ஈடு செய்யும் விதமாக நபி (ஸல்) அவர்கள் சில வழிமுறைகளைக் கற்றுத் தந்திருக்கின்றார்கள்.
இரவுத் தொழுகையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடாமல் தொழுது வந்தனர் என்றாலும் சில நேரங்களில் அவர்கள் இரவுத் தொழுகையை விட்டதற்கும் ஆதாரம் உள்ளது.
நபி (ஸல்) அவர்களுக்கு உடல் நலம் குன்றிய போது ஒரு இரவு அல்லது இரண்டு இரவுகள் அவர்கள் தொழவில்லை.
அறிவிப்பவர்: ஜுன்துப் (ரலி),
நூல்: புகாரி 1124, 4983
ஏதேனும் ஒரு காரணத்தால் இரவுத் தொழுகை விடுபட்டு விட்டால் பகலில் பன்னிரண்டு ரக்அத்கள் தொழலாம்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நற்செயலைச் செய்தால் அதை நிலையாகச் செய்வார்கள். அவர்கள் இரவில் உறங்கி விட்டாலோ, அல்லது நோய்வாய்ப்பட்டுவிட்டாலோ பகலில் பன்னிரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.
நூல்: முஸ்லிம் 1359
இரவுத் தொழுகை தவறி விட்டால் கூட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதற்குப் பகரமாக பகலில் பன்னிரண்டு ரக்அத்கள் தொழுதிருக்கின்றார்கள் என்றால் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றார்கள் என்பதை நம்மால் பார்க்க முடிகின்றது.
இரவுத்தொழுகைக்கு நபியே முன்மாதிரி!
நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையை எவ்வாறு தொழ வேண்டும் என்று வழிகாட்டித் தந்தார்களோ அதனடிப்படையில் தான் நாம் தொழ வேண்டும்.
எனவே நபி (ஸல்) அவர்கள் இந்த இரவுத் தொழுகையை தமது வாழ்நாளில் ஓரிரு தினங்கள் தவிர மற்ற நாட்களில் தொடர்ந்து தொழுது வந்திருப்பதாலும், ஸஹாபாக்களில் பலரும் இந்த இரவுத் தொழுகையைத் தொழுதிருப்பதாலும், நாம் கடமையான தொழுகையை நிறைவேற்றுவதுடன் மேற்கூறப்பட்ட பல்வேறு சிறப்புகள் கொண்ட இரவுத் தொழுகையையும் தவறாமல் கடைப்பிடித்து அந்தச் சிறப்புகளை அடைகின்ற நன்மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்குவானாக!!
வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.
———————
ஏகத்துவம்