இறைத்தூதர்கள் துன்பப்பட்டது ஏன்?
நபிமார்கள் பட்ட துன்பங்களை திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது.
- நபிமார்கள் வறுமையில் வாடியுள்ளனர்.
- சமுதாயத்திலிருந்து நீக்கி வைக்கப்பட்டனர்.
- அடித்துச் சித்திரவதை செய்யப்பட்டனர்.
- நாட்டை விட்டு விரட்டப்பட்டனர்.
திருக்குர்ஆனில் ஏராளமான இடங்களில் இது பற்றிக் கூறப்பட்டுள்ளது.
உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு வறுமையும், துன்பமும் ஏற்பட்டன. ‘அல்லாஹ்வின் உதவி எப்போது?’ என்று (இறைத்) தூதரும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது.
(திருக்குர்ஆன்:2:214)
முடிவில் தூதர்கள் நம்பிக்கை இழந்து, தாங்கள் நிராகரிக்கப்பட்டு விட்டோம் என்று எண்ணிய போது நமது உதவி அவர்களிடம் வந்தது. நாம் நாடியோர் காப்பாற்றப்பட்டனர். குற்றம் புரிந்த கூட்டத்தை விட்டும் நமது வேதனை நீக்கப்படாது.
(திருக்குர்ஆன்:12:110)
‘அல்லாஹ்வையே சாராதிருக்க எங்களுக்கு என்ன நேர்ந்தது? அவன் எங்களுக்கு எங்களின் பாதைகளைக் காட்டி விட்டான். நீங்கள் எங்களுக்கு அளிக்கும் துன்பங்களைச் சகித்துக் கொள்வோம். உறுதியான நம்பிக்கை வைப்போர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்’ (என்றும் கூறினர்.)
(திருக்குர்ஆன்:14:12)
நமது அடியார் அய்யூபை நினைவூட்டுவீராக! ஷைத்தான் வேதனையாலும், துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான் என்று தமது இறைவனிடம் அவர் பிரார்த்தித்த போது, உமது காலால் மிதிப்பீராக! இதோ குளிர்ந்த குளிக்குமிடம்! பானம்! (எனக் கூறினோம்).
(திருக்குர்ஆன்:38:41,42)
(முஹம்மதே!) அவர்கள் கூறுவது உம்மைக் கவலையில் ஆழ்த்துவதை அறிவோம். அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கூறவில்லை. மாறாக அநீதி இழைத்தோர் அல்லாஹ்வின் வசனங்களையே மறுக்கின்றனர்.
(திருக்குர்ஆன்:6:33)
(முஹம்மதே!) உமக்கு முன் சென்ற தூதர்கள் பொய்யரெனக் கருதப்பட்டுள்ளனர். அவர்கள் பொய்யரெனக் கருதப்பட்டதையும், தொல்லைப்படுத்தப்பட்டதையும் சகித்துக் கொண்டனர். முடிவில் அவர்களுக்கு நமது உதவி வந்தது. அல்லாஹ்வின் வார்த்தைகளை மாற்றுபவன் யாருமில்லை. தூதர்கள் பற்றிய செய்தி உமக்கு (ஏற்கனவே) வந்துள்ளது.
(திருக்குர்ஆன்:6:34)
அப்படியல்ல! உங்கள் உள்ளங்கள் ஒரு காரியத்தைச் செய்யத் தூண்டி விட்டன. எனவே அழகிய பொறுமையைக் கடைப்பிடிக்கிறேன். அவர்கள் அனைவரையும் அல்லாஹ் என்னிடம் சேர்க்கக் கூடும். அவன் அறிந்தவன்; ஞானமிக்கவன்’ என்று அவர் (யஃகூப்) கூறினார். அவர்களை விட்டும் அவர் ஒதுங்கிக் கொண்டார்! யூஸுஃபுக்கு ஏற்பட்ட துக்கமே’ என்றார். கவலையால் அவரது கண்கள் வெளுத்தன. அவர் (துக்கத்தை) அடக்கிக் கொள்பவராக இருந்தார். ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! உமது உடல் மெலியும் வரை, அல்லது இறக்கும் வரை நீர் யூஸுஃபை நினைத்துக் கொண்டேயிருப்பீர் (போலும்)’ என்று அவர்கள் கூறினர். ‘எனது துக்கத்தையும், கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகிறேன். நீங்கள் அறியாததை அல்லாஹ்விடமிருந்து அறிகிறேன்’ என்று அவர் கூறினார்.
(திருக்குர்ஆன்:12:83-86)
அல்லாஹ் உமக்குத் துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன் உமக்கு நன்மையை ஏற்படுத்தி விட்டால் அவன் அனைத்துப் பொருட்களின் மீது ஆற்றலுடையவன்.
(திருக்குர்ஆன்:6:17)
‘அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்’ என்று (முஹம்மதே!) கூறுவீராக!
(திருக்குர்ஆன்:7:188)
நபிமார்களுக்கு அவர்கள் விரும்பியவாறு அற்புதம் நிகழ்த்தும் ஆற்றல் இருந்தால் காலமெல்லாம் அவர்கள் துன்பத்திற்கு ஆளானது ஏன்? அற்புதம் செய்யும் ஆற்றல் நபிமார்களுக்கு வழங்கப்பட்டிருந்தால் கட்டாயம் அந்த ஆற்றலை அவர்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும். அற்புதங்கள் அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளது என்பதை இதிலிருந்தும் புரிந்து கொள்ளலாம்.
எத்தனையோ நபிமார்கள் பல்வேறு போர்க்களங்களைச் சந்தித்தனர். அதில் எத்தனையோ உற்ற தோழர்களை இழந்தனர். அற்புதம் செய்யும் ஆற்றல் அவர்களிடம் இருந்தால் இதெல்லாம் தேவையில்லை. எந்தச் சேதமும் இல்லாமல் எதிரிகளை அழித்திருக்க முடியும்.