இறைத்தூதர்களுக்கு அற்புதங்கள் வழங்கப்பட்டது ஏன்?
இறைத்தூதர்களாக அனுப்பப்படுவோர் மனிதர்களிலிருந்து தான் தேர்வு செய்யப்பட்டனர். எல்லா வகையிலும் அவர்கள் மனிதர்களாகவே இருந்தார்கள். எல்லா வகையிலும் தங்களைப் போலவே இருக்கும் ஒருவர் தன்னை இறைவனின் தூதர் என்று வாதிடுவதை மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இதைத் திருக்குர்ஆனும் சொல்லிக்காட்டுகிறது.
மனிதரையா தூதராக அல்லாஹ் அனுப்பினான்? என்று அவர்கள் கூறுவது தான், மனிதர்களிடம் நேர்வழி வந்தபோது அவர்கள் நம்புவதற்குத் தடையாக இருந்தது
(திருக்குர்ஆன்:17:94)
இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. நீங்கள் உண்பதையே இவரும் உண்ணுகிறார். நீங்கள் அருந்துவதையே இவரும் அருந்துகிறார்” என்று அவரது சமுதாயத்தில் யார் (ஏகஇறைவனை) மறுத்து, மறுமையின் சந்திப்பைப் பொய்யெனக் கருதினார்களோ, இவ்வுலக வாழ்வில் யாருக்கு சொகுசான வாழ்வை வழங்கினோமோ அந்தப் பிரமுகர்கள் கூறினர்.
(திருக்குர்ஆன்:23:33)
இத்தூதருக்கு என்ன நேர்ந்தது? இவர் உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடமாடுகிறார்; இவரோடு ஒரு வானவர் இறக்கப்பட்டு இவருடன் (சேர்ந்து) அவர் எச்சரிப்பவராக இருக்கக் கூடாதா?” என்று கேட்கின்றனர்.
(திருக்குர்ஆன்:25:7)
நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்கள் தவிர வேறில்லை. அளவற்ற அருளாளன் எதையும் அருளவில்லை. நீங்கள் பொய் சொல்வோராகவே இருக்கிறீர்கள் என்று (அவ்வூரார்) கூறினர்.
(திருக்குர்ஆன்:36:15)
இவ்வசனங்களிலும், 21:3, 23:47, 26:154, 26:186 ஆகிய வசனங்களிலும் இதை அல்லாஹ் தெளிவாக எடுத்துக் காட்டுகிறான். மனிதனால் நியமிக்கப்படும் தூதர் மனிதனாக இருக்கலாம். இறைவனால் நியமிக்கப்படும் தூதர் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவராகத்தான் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்கள் கருதினார்கள்.
மக்கள் இவ்வாறு எண்ணியதிலும் நியாயங்கள் இருந்தன. இறைத்தூதர் என்று ஒருவர் கூறியவுடனே அவரை ஏற்றுக் கொள்வது என்றால் இறைத்தூதர்கள் என்று பொய்யாக வாதிட்டவர்களையும் ஏற்க வேண்டிய நிலைமை ஏற்படும்.
மற்ற மனிதர்களிலிருந்து எந்த வகையிலாவது இறைத்தூதர்கள் வேறுபட்டிருக்க வேண்டும் என்ற அவர்களின் விருப்பத்தை ஓரளவு இறைவன் ஏற்றுக் கொள்கிறான். தனது தூதராக யாரை அனுப்பினாலும் அவர் இறைத்தூதர் தான் என்பதை நிரூபித்துக் காட்டும் வகையில் சில அற்புதங்களை அவர்களுக்குக் கொடுத்து அனுப்புகிறான்.
மற்ற மனிதர்களால் செய்ய முடியாத அந்த அற்புதங்களைக் காணும்போது அவர் இறைவனின் தூதர்தான் என்று நம்புவதற்கு நன்மக்களுக்கு எந்தத் தயக்கமும் ஏற்படாது. தாங்கள் இறைத்தூதர்கள் தான் என்பதை நிரூபிக்க நபிமார்களுக்கு அல்லாஹ் அற்புதங்களை வழங்கினான் என்பதையும், அற்புதம் வழங்கப்படாமல் எந்தத் தூதரும் அனுப்பப்படவில்லை என்பதையும் திருக்குர்ஆன் தெளிவாக கூறுகிறது.
அவர்களிடம் அவர்களது தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வருவோராக இருந்தும், ஒரு மனிதர் எங்களுக்கு வழிகாட்டுவதா? என்று அவர்கள் கூறி (ஏகஇறைவனை) மறுத்துப் புறக்கணித்ததே இதற்குக் காரணம். அல்லாஹ் அவர்களைப் புறக்கணித்தான். அல்லாஹ் தேவைகளற்றவன்; புகழுக்குரியவன்.
(திருக்குர்ஆன்:64:6)
இக்கருத்தை 3:184, 7:101, 9:70, 10:13, 10:74, 35:25, 40:22, 40:50, 57:25 ஆகிய வசனங்களும் கூறுகின்றன.
மனிதர்கள் நேர்வழி பெற வேண்டும் என்பதற்காக அனுப்பப்படும் இறைத்தூதர்களை, இறைத்தூதர்கள் தான் என்று நம்புவதற்கான ஆதாரமாகவே அல்லாஹ் அற்புதங்களை வழங்கினான். அப்படியானால் அல்லாஹ்வைப் போல் செயல்படும் ஆற்றல் இறைத்தூதர்களுக்கும் இருக்கிறதே என்று சிலருக்குச் சந்தேகம் ஏற்படலாம். அந்தச் சந்தேகத்துக்கு இடமளிக்காத வகையில் தான் இறைத்தூதர்களுக்கு அல்லாஹ் அற்புதங்களை வழங்கினான்.
அது பற்றியும் விரிவாக அறிந்து கொள்வோம்.