*இறைதிருப்தியே மேலானது*
மனிதனின் திருப்தியை விடவும் ஏன், *உலகத்தில் உள்ள அனைத்தையும் விட சிறந்தது அல்லாஹ்வுடைய திருப்தி தான்.*
அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்!
*அல்லாஹ்வின் திருப்தியே அனைத்தையும் விட சிறந்தது*. (9:72)
இறை திருப்தியைப் பெறுவது என்பது பெரும் பாக்கியமாகும். இறை திருப்திக்கு எண்ணற்ற சிறப்புகளும் மகிமைகளும் உண்டு. ஆதலால் தான் இறை திருப்தியைப் பெற்றோரும் அதனை பெறாதோரும் சமமாக மாட்டார்கள் என அல்லாஹ் கூறுகிறான்.
*அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றவன்*, அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகி, நரகத்தை அடைந்தவனைப் போன்றவனா? (அது) சென்றடையும் இடங்களில் மிகவும் கெட்டது. 3:162
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுதினமும் பின்வரும் பிரார்த்தனையின் வாயிலாக இறை திருப்தியைக் கோருபவர்களாகவும் இறைக் கோபத்திலிருந்து பாதுகாவல் தேடக்கூடியவர்களாகவும் இருந்துள்ளார்கள்.
“*அல்லாஹும்ம, அஊது பி ரிளாக்க மின் சகதிக்க, வபி முஆஃபாத்திக்க மின் உகூபத்திக்க, வ அஊது பிக்க மின்க்க, லா உஹ்ஸீ ஸனாஅன் அலைக்க அன்த்த கமா அஸ்னய்த்த அலா நஃப்சிக்க”*
பொருள் : *இறைவா! உன் திருப்தியின் மூலம் உன் அதிருப்தியை விட்டு பாதுகாப்புத் தேடுகிறேன். உனது மன்னிப்பின் மூலம் உனது தண்டனையை விட்டு பாதுகாப்புத் தேடுகிறேன்*. உன்னை என்னால் முழுமையாகப் புகழ இயலாது. நீ உன்னை எவ்வாறு புகழ்ந்து கொண்டாயோ அவ்வாறு இருக்கிறாய்.( முஸ்லிம் 751)
மேலும் அல்லாஹ்வின் பொருத்தம் கிடைக்கப் பெற்றவர்கள் தான் மறுமை நாளில் மலக்குமார்களின் பரிந்துரைக்குத் தகுதி பெறுவார்கள் என திருக்குர்ஆன் எடுத்துரைக்கின்றது.
அவர்களுக்கு முன்னும், பின்னும் உள்ளதை அவன் அறிவான். *அவன் பொருந்திக் கொண்டோருக்காகவே தவிர* (மற்றவருக்கு) அவர்கள் பரிந்துரை செய்ய மாட்டார்கள். அவர்கள் அவனது அச்சத்தால் நடுங்குவார்கள். (21:28)
இப்படிப்பட்ட சிறப்புமிக்க அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுத் தரும் காரியங்கள் எவை என்பதை குர்ஆனும் ஹதீஸும் நமக்குக் கற்றுத் தருகின்றது. அவைகளை நமது வாழ்வில் கடைப்பிடித்து *அல்லாஹ்வின் மகத்தான திருப்தியை, இறை பொருத்தத்தைப் பெற முயற்சி செய்ய வேண்டும்.*