அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே!
ஸலாத்தும், ஸலாமும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மீதும், சஹாபாக்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும், குறிப்பாக நம் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக!
كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَجْوَدَ النَّاسِ وَأَجْوَدُ مَا يَكُونُ فِي رَمَضَانَ حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ ، وَكَانَ جِبْرِيلُ – عَلَيْهِ السَّلاَمُ – يَلْقَاهُ فِي كُلِّ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ فَيُدَارِسُهُ الْقُرْآنَ فَلَرَسُولُ اللهِ صلى الله عليه وسلم أَجْوَدُ بِالْخَيْرِ مِنَ الرِّيحِ الْمُرْسَلَة
“இக்ரஃ – நீர் ஓதுவீராக” என்று முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு ரமளானில் தொடங்கி வைத்த ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஒவ்வொரு ரமளானிலும் அந்தக் குர்ஆனை முழுமையாக ஓதிக் காட்டி மறு பதிவு செய்து கொள்வார்கள்.
كَانَ يَعْرِضُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم الْقُرْآنَ كُلَّ عَامٍ مَرَّةً فَعَرَضَ عَلَيْهِ مَرَّتَيْنِ فِي الْعَامِ الَّذِي قُبِضَ ، وَكَانَ يَعْتَكِفُ كُلَّ عَامٍ عَشْرًا فَاعْتَكَفَ عِشْرِينَ فِي الْعَامِ الَّذِي قُبِضَ { فِيهِ
ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு ரமளானில் திருக்குர்ஆனை இரு முறை மறு பதிவு செய்கின்றார்கள்.
நூல் : புகாரி 4998
அதாவது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்நாட்கள் எண்ணப்படத் துவங்கி விட்டது என்பதற்கு இது ஓர் அறிகுறியானது. இது வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வல்ல இறைவனால் கடமையாக்கப்பட்ட அனைத்து வணக்கங்களிலும் வழிகாட்டி விட்டிருந்தார்கள். எஞ்சியிருந்தது ஹஜ் என்ற இறுதிக் கடமை மட்டுமே!
அந்த ஹஜ் கடமையை அவர்கள் நிறைவேற்றிய பயணத்தின் ஊடே தான் அரபா நாளில், “இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப் படுத்தி விட்டேன்”என்ற (5:3) வசனம் அருளப்பட்டது.
“ஓதுவீராக’ என்று துவங்கிய திருக்குர்ஆன், ஓதி முடிக்கப்பட வேண்டிய இறுதிக் கட்டம் வந்து விட்டது என்பதை இந்த வசனம் தெளிவுபடுத்தியது.
அதற்கு ஏற்றது போன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், “உங்களுடைய ஹஜ் மற்றும் உம்ராவைத் தெரிந்து கொள்ளுங்கள்! ஏனெனில் இந்த ஹஜ்ஜுக்குப் பிறகு (வரும் ஆண்டு) நான் ஹஜ் செய்வேனா என்று எனக்குத் தெரியாது” என்று கூறி விட்டார்கள்.
இதனால் பிரியப் போகும் தந்தையிடம் பிள்ளைகள் எப்படி நடப்பார்களோ அது போல் நபித்தோழர்களும், பிள்ளைகளிடம் விடை பெறப் போகும் தந்தை எப்படி நடந்து கொள்வாரோ அது போன்று நபி (ஸல்) அவர்களும் நடந்து கொண்டார்கள். அதனால் நபி (ஸல்) அவர்களின் இந்த ஹஜ் பயணம் நபித்தோழர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
தோழர்கள் தங்கள் பார்வையில் இருந்து, நபி (ஸல்) அவர்களின் எந்தச் செயலும் தவறி விடாதவாறும், காதுகளில் விழாமல் எதுவும் தப்பி விடாதவாறும் பார்வைகளைக் கூர்மையாக்கி, காதுகளை நன்கு தீட்டிக் கொண்டு பதிவு செய்து கொண்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருபத்து மூன்று ஆண்டு காலத்தில் ஆற்றிய தூதுப் பணியின் மொத்தத் தொகுப்பை தனது ஹஜ்ஜின் இறுதிக் கட்ட ஐந்து நாட்கள் பயணத்தில் சத்தாக, சாறாகப் பிழிந்து தந்தார்கள்.அதனால் அது வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்தது.
“உங்களுடைய ஹஜ் மற்றும் உம்ராவைத் தெரிந்து கொள்ளுங்கள்! ஏனெனில் இந்த ஹஜ்ஜுக்குப் பிறகு (வரும் ஆண்டு) நான் ஹஜ் செய்வேனா என்று எனக்குத் தெரியாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِمِنًى أَتَدْرُونَ أَيُّ يَوْمٍ هَذَا قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ فَقَالَ فَإِنَّ هَذَا يَوْمٌ حَرَامٌ أَفَتَدْرُونَ أَيُّ بَلَدٍ هَذَا قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ بَلَدٌ حَرَامٌ أَفَتَدْرُونأَيُّ شَهْرٍ هَذَا قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ شَهْرٌ حَرَامٌ قَالَ : فَإِنَّ اللَّهَ حَرَّمَ عَلَيْكُمْ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ وَأَعْرَاضَكُمْ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِي شَهْرِكُمْ هَذَا فِي بَلَدِكُمْ هَذَا وَقَالَ هِشَامُ بْنُ الْغَازِ ، أَخْبَرَنِي نَافِعٌ ، عَنِ ابْنِ عُمَرَ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا وَقَفَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمَ النَّحْرِ بَيْنَ الْجَمَرَاتِ فِي الْحَجَّةِ الَّتِي حَجَّ بِهَذَا وَقَالَ هَذَا يَوْمُ الْحَجِّ الأَكْبَرِ فَطَفِقَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ اللَّهُمَّ اشْهَدْ وَوَدَّعَ النَّاسَ فَقَالُوا هَذِهِ حَجَّةُ الْوَدَاعِ
நபி (ஸல்) அவர்கள் மினாவில் இருந்த போது “இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா?” எனக் கேட்டார்கள். அதற்கு மக்கள், “அல்லாஹ்வும், அவன் தூதருமே நன்கறிவர்!” என்றனர்.
உடனே அவர்கள், “இது புனிதமிக்க தினமாகும்! இது எந்த நகரம் என்பதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்க மக்கள் “அல்லாஹ்வும் அவன் தூதருமே நன்கறிவர்!” என்றனர்.
அவர்கள் “(இது) புனிதமிக்க நகரமாகும்!” என்றனர். பிறகு நபி (ஸல்) அவர்கள், “இது எந்த மாதம் என்பதை அறிவீர்களா?” என்றதும் மக்கள், “அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிவர்” என்றனர்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் “இது புனிதமிக்க மாதமாகும்” எனக் கூறிவிட்டு, “உங்களுடைய இந்தப் புனித நகரத்தில், உங்களுடைய இந்தப் புனித மாதத்தில், உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அது போலவே அல்லாஹ் உங்கள் உயிர்களையும், உடைமைகளையும், உங்கள் மானம் மரியாதைகளையும் புனிதமாக்கியுள்ளான்!” எனக் கூறினார்கள்.
மற்றோர் அறிவிப்பில், “நபி (ஸல்) அவர்கள் தாம் ஹஜ் செய்த போது நஹ்ருடைய நாளில் ஜம்ராக்களுக்கு மத்தியில் நின்று கொண்டு, “இது மிகப் பெரிய ஹஜ்ஜின் தினமாகும்” என்று கூறினார்கள்.
மேலும், “இறைவா! நீயே சாட்சி!”என்று கூறி மக்களிடம் இறுதி விடை பெற்றார்கள். எனவே மக்களும் “இது (நபியவர்கள் உலகை விட்டு) விடை பெற்றுச் செல்கின்ற ஹஜ்ஜாகும்” என்று பேசிக் கொண்டார்கள்.
“என்னுடைய உயிர் யாருடைய கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! இது அவர்கள் தமது சமுதாயத்திற்கு வழங்கிய இறுதி உபதேசமாகும்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
“நீங்கள் (மறுமையில்) என்னைப் பற்றி விசாரிக்கப்படுவீர்கள். அப்போது நீங்கள் என்ன (பதில்) சொல்வீர்கள்?” என்று கேட்டார்கள். “உங்கள் தூதுச் செய்தியை எடுத்து வைத்து விட்டீர்கள். அதை நிறைவேற்றி விட்டீர்கள். உங்கள் சமுதாயத்திற்கு நன்மையை நாடினீர்கள். உங்கள் மீதுள்ள பொறுப்பை ஆற்றி விட்டீர்கள் என்று நாங்கள் சான்று பகர்வோம்”என்று நபித்தோழர்கள் பதிலளித்தனர்.
அப்போது அவர்கள் தமது ஆட்காட்டி விரலை வானத்தை நோக்கி உயர்த்தியும் பின்னர் அதை மக்களை நோக்கித் தாழ்த்தியும், “யா அல்லாஹ்! நீயே சாட்சி! யா அல்லாஹ்! நீயே சாட்சி!” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல் : முஸ்லிம் 2137
சகோதரத்துவம்
2442- حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ ، حَدَّثَنَا اللَّيْثُ ، عَنْ عُقَيْلٍ ، عَنِ ابْنِ شِهَابٍ أَنَّ سَالِمًا أَخْبَرَهُ أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ
“நீங்கள் மறுமையில் உங்கள் இறைவனைச் சந்திப்பீர்கள். அப்போது அவன் உங்களிடம் உங்கள் செயல்கள் குறித்து விசாரணை செய்வான். அறிந்து கொள்ளுங்கள். எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழி கெட்டவர்களாய் நீங்கள் மாறி விடாதீர்கள்”
“நிச்சயமாக உங்களுடைய இந்த மாதத்தில், உங்களுடைய இந்த நகரத்தில், உங்களுடைய இந்த நாள் எவ்வாறு புனிதம் பெற்று விளங்குகின்றதோ அவ்வாறே உங்களின் உயிர்களும் உடைமை களும் கண்ணியமும் உங்களுக்குப் புனிதமானவையாகும்” என்று பல தடவை கூறினார்கள்.
“அறிந்து கொள்ளுங்கள்! உங்களது இந்த நகரத்தில் உங்கள் இந்த மாதத்தில் உங்களது இந்த நாள் எப்படிப் புனிதமானதாக விளங்குகின்றதோ அவ்வாறே அல்லாஹ் உங்களுக்கு உங்கள் இரத்தங்களையும் உங்கள் செல்வங்களையும் புனிதமான வையாக ஆக்கியுள்ளான்”என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு,
“நான் (இறைச் செய்தியை உங்களிடம்) சேர்த்து விட்டேனா?” என்று கேட்டார்கள்.
மக்கள் ஆம் என்று பதிலளித்தனர். “இறைவா! நீ சாட்சியாக இரு!” என்று மூன்று முறை கூறினார்கள்.
பின்னர், “உங்களுக்கு என்ன நேரப் போகின்றதோ!”அல்லது “அந்தோ பரிதாபமே! கவனமாக இருங்கள். எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்வதன் மூலம் இறை மறுப்பாளர்களாய் நீங்கள் மாறி விடாதீர்கள்” என்று சொன்னார்கள்.
மனமுவந்து தராத, தன் சகோதர முஸ்லிமின் பொருள் எதுவும் அடுத்த முஸ்லிமுக்கு ஆகுமானது அல்ல.
அறிவிப்பவர்: அம்ர் பின் அல் அஹ்வல் (ரலி),
நூல்: திர்மிதீ 3012, ஹாகிம் 318
அண்டை வீட்டுக்காரனுக்குச் சொத்தில் பங்களித்து விடுவார்களோ என்று கூறுமளவுக்கு, அண்டை வீட்டுக்காரனைப் பற்றி அறிவுரை செய்கிறேன் என அதிகமாக வலியுறுத்தினார்கள்.
குழிக்குள் போகட்டும் பழியுணர்ச்சி அறியாமைக் காலத்து (கொலைக்காக இப்போது) பழி வாங்குதல் (இன்றுடன்) ரத்து செய்யப்படுகின்றது. (அவ்வாறு) முதன் முதலில் ரத்து செய்யப் படுவது எங்களது குடும்பத்தைச் சார்ந்த ரபீஆவுடைய குழந்தைக்காக வாங்க வேண்டிய பழியாகும்.
ரபீஆ, அப்துல் முத்தலிபுடைய பேரர் ஆவார். இந்த ரபீஆவின் குழந்தை ஸஃத் கிளையாரிடம் பால் குடித்துக் கொண்டிருக்கும் போது ஹுதைல் கிளையினர் கொன்று விட்டனர். (இதுவரை பழி தீர்க்கப்படாமல் இருக்கும் அந்த உயிருக்காக இனி பழி தீர்க்கப்படாது என்று இப்போது அறிவித்து விட்டேன்)
அறியாமைக் காலத்து வட்டி (இன்று) ரத்து செய்யப்படுகின்றது. (அவ்வாறு) முதன் முதலில் நான் ரத்து செய்யும் வட்டி (எனது பெரிய தந்தை) அப்பாசுக்கு வர வேண்டிய எங்களுடைய வட்டியாகும். (இன்று) அந்த வட்டி அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றது.
(தாய்) யாருடைய ஆதிக்கத்தில் இருக்கும் போது குழந்தை பிறக்கின்றதோ அவருக்கே அக்குழந்தை உரியது. விபச்சாரம் செய்தவருக்கு இழப்பு தான். அவர்களின் விசாரணை அல்லாஹ்விடம் உள்ளது.
தன் தந்தை அல்லாதவரை தந்தை என்று குறிப்பிடுபவர், தன் எஜமான் அல்லாதவருடன் தன்னை இணைத்துக் கொள்பவர் ஆகியோர் மீது இறுதி நாள் வரை தொடரும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக!
சொத்துரிமை உடைய ஒவ்வொருவருக்கும் அவரது சொத்துரிமையை (பாகப்பிரிவினை சட்டத்தின் மூலம்) அல்லாஹ் வழங்கி விட்டான். எனவே சொத்துரிமை பெறுபவருக்கு இனி மரண சாசனம் இல்லை.
தீங்கிழைப்பவன் தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொள்கிறான். தந்தை செய்யும் குற்றத்திற்கு மகன் பொறுப்பாளியாக மாட்டான். மகன் செய்யும் குற்றத்திற்குத் தந்தை பொறுப்பாளியாக மாட்டார்.
பெண்கள் விஷயத்தில் நீங்கள் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். நீங்கள் அவர்களை அமானிதமாகப் பெற்றுக் கொண்டிருக்கின்றீர்கள். (திருமணம் முடியுங்கள் என்ற) அல்லாஹ்வின் வார்த்தையின் அடிப்படையிலேயே அவர்களது கற்புகளை அனுபவிக்கின்றீர்கள்.
நீங்கள் வெறுக்கும் எவரையும் உங்கள் வீட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது. இது உங்கள் மனைவியர் உங்களுக்குச் செலுத்த வேண்டிய கடமையாகும். இதற்கு மாற்றமாக அவர்கள் நடந்தால் காயம் ஏற்படுத்தாத வகையில் அவர்களை அடியுங்கள். நீங்கள் நல்ல முறையில் உணவும், உடையும் உங்கள் மனைவியருக்கு வழங்க வேண்டும். இது நீங்கள் உங்கள் மனைவியருக்குச் செலுத்த வேண்டிய கடமையாகும்.
பெண்களிடம் நன்மைகளைப் போதியுங்கள். அவர்கள் உங்களிடம் அடைக்கலமாக (இருக்கிறார்கள்). இ(ல்லறத்)தைத் தவிர வேறு எதையும் நீங்கள் உரிமையாகப் பெறவில்லை. அவர்கள் தெளிவான மானக் கேட்டைச் செய்தாலே தவிர! அவர்கள் அவ்வாறு செய்தால் படுக்கையிலிருந்து ஒதுக்குங்கள்; காயமின்றி அடியுங்கள்; அவர்கள் கட்டுப்பட்டு விட்டால் வேறு எந்த வழியிலும் அவர்களிடம் வரம்பு மீறாதீர்கள்.
நீங்கள் உங்கள் மனைவியருக்குச் செய்ய வேண்டிய கடமை உங்கள் மீது இருக்கின்றது. உங்கள் மனைவியர் உங்களுக்குச் செய்ய வேண்டிய கடமையும் உண்டு. உங்கள் மனைவியர் உங்களுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகள், நீங்கள் வெறுக்கும் வகையில் அடுத்தவர்களுடன் உங்கள் படுக்கைகளைப் பகிர்ந்து விடக் கூடாது; உங்களுக்குப் பிடிக்காதவர்களை உங்கள் வீடுகளில் அனுமதிக்கக்கூடாது.
அறிந்து கொள்ளுங்கள்! அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய உடைகளிலும், உணவிலும் தாராளமான முறையில் நடந்து கொள்வதே நீங்கள் உங்கள் மனைவியருக்குச் செய்யும் கடமையாகும்.
4862 – أخبرنا محمد بن عبد الله بن الجنيد قال : أخبرنا عبد الوارث بن عبيد الله عن عبد الله قال : أخبرنا الليث بن سعد قال : حدثني أبو هانئ الخولاني عن عمرو بن مالك الجنبي قال : حدثني فضالة بن عبيد قال : قال رسول الله صلى الله عليه و سلم في حجة الوداع
ألا أخبركم بالمؤمن : من أمنه الناس على أموالهم وأنفسهم والمسلم من سلم الناس من لسانه ويده والمجاهد من جاهد نفسه في طاعة الله والمهاجر من هجر الخطايا والذنوب
قال شعيب الأرنؤوط : إسناده صحيح
குற்றங்களையும், தவறுகளையும் விட்டு ஒதுங்கிக் கொள்பவரே முஹாஜிர் (துறந்தவர்) ஆவார்.
நூல்: இப்னு ஹிப்பான் 4862 பாகம்:11, பக்:203
والمجاهد من جاهد نفسه في طاعة الله
அல்லாஹ்வுக்குக் கட்டுப் படுவதில் தனது உள்ளத்துடன் போராடியவரே தியாகி (ஷஹீத்) ஆவார்.
உங்களுடைய இறைவனை அஞ்சுங்கள். உங்கள் ஐந்து நேரத் தொழுகைகளைத் தொழுங்கள். உங்கள் நோன்பை நோற்றுக் கொள்ளுங்கள். உங்களின் பொருட்களில் ஜகாத்தை நிறைவேற்றுங்கள். உங்களில் அதிகாரம் உடையவருக்குக் கட்டுப்படுங்கள். உங்களது இறைவனின் சுவனத்தில் நீங்கள் நுழைந்து விடுவீர்கள்.
அல்லாஹ் கண்ணியப்படுத்திய உயிரை நியாயமின்றிக் கொலை செய்யாதீர்கள்;
திருடாதீர்கள்; விபச்சாரம் செய்யாதீர்கள்.
நூல்கள்: அஹ்மத் 18219, ஹாகிம் 8033, பைஹகீ 15620
சிறுசிறு வணக்கங்களில் அலட்சியம்
உங்களுடைய பூமியில் தான் வணங்கப்படுவதை விட்டும் ஷைத்தான் நிராசையாகி விட்டான். ஆயினும் அதைத் தவிர நீங்கள் சாதாரணமாகக் கருதி (விட்டு) விடும் உங்கள் வணக்கங்களில், தான் வழிபடப்படுவதை அவன் பொருந்திக் கொண்டான். (எனவே சிறிய அமல்களை விட்டு விடாமல் கவனமாக இருங்கள்)
அறிந்து கொள்ளுங்கள். உங்களுடைய இந்த ஊர்களில் ஒரு போதும் தான் வணங்கப்பட மாட்டோம் என்று ஷைத்தான் நிராசையடைந்து விட்டான். எனினும் நீங்கள் கேவலமாகக் கருதும் அமல்கள் மூலம் அவனுக்கு ஒரு வழிபாடு உருவாகும். அதன் மூலம் அவன் திருப்தியடைவான்.
நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றி, அல்மஸீஹுத் தஜ்ஜாலைப் பற்றிக் கூறத் தொடங்கினார்கள். நீண்ட நேரம் அவனைப் பற்றியே கூறினார்கள். அப்போது, “அல்லாஹ் அனுப்பிய எந்த இறைத்தூதரும் (அவனைப் பற்றி) தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. நூஹ் (அலை) அவர்கள் அவனைப் பற்றி எச்சரித்தார்கள். அவர்களுக்குப் பின்னால் வந்த இறைத்தூதர்களும் எச்சரித்தனர். மேலும் (என் சமுதாயமாகிய) உங்களிடையே தான் அவன் (இறுதிக் காலத்தில்) தோன்றுவான்.
அவனது (அடையாளத்) தன்மைகளில் ஏதேனும் சில உங்களுக்குப் புலப்படாமல் போனாலும் நிச்சயமாக உங்கள் இறைவன் உங்களுக்குத் தெரியாதவன் அல்லன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும் இதை மூன்று முறை கூறினார்கள் – உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். (தஜ்ஜால் எனும்) அவனோ வலது கண் குருடானவன். அவனது கண் துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்று இருக்கும்” என்று கூறினார்கள்.
“இங்கு வருகை தந்திருப்பவர், வராதவருக்கு இந்தச் செய்தியை எடுத்துக் கூறி விட வேண்டும். ஏனெனில் வருகை தந்திருப்பவர், தன்னை விட நன்கு புரிந்து கொள்ளும் ஒருவருக்கு அந்தச் செய்தியை எடுத்துச் சொல்லி விடக் கூடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி),
நூல்: புகாரி 67
நபியவர்கள் தனது 23 வருட வாழ்கையின் சொன்ன அனைத்தையும் சாறுபிழிந்து கொடுத்தைப் போன்று உள்ள இந்த ஹதீஸ்களின் படி நடந்து மரணிப்போம். மறுமையில் வெற்றியடைவோம்!
அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.
[அல்குர்ஆன் 112:1]