அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்கள் எனக் கூறாதீர்கள்! இறந்தவர்கள் என எண்ணாதீர்கள்!” என்று இவ்வசனங்கள் (2:154, 3:169) கூறுகின்றன. இதை முஸ்லிம்களில் சிலர் தவறாகப் புரிந்து வைத்துள்ளனர்.
மகான்களும், நல்லடியார்களும் இறந்த பின்பும் உயிரோடு உள்ளனர்; எனவே அவர்களை வழிபடலாம்; அவர்களை அழைக்கலாம்; பிரார்த்திக்கலாம் என்பதற்கு இவ்வசனங்கள் சான்றாக அமைந்துள்ளதாக அவர்கள் விளங்கிக் கொண்டுள்ளனர். இது பல காரணங்களால் தவறான விளக்கமாகும்.
ஒருவர் நல்லடியாரா? கெட்ட அடியாரா? என்பதை எந்த மனிதராலும் கண்டுபிடிக்க முடியாது. இது பற்றி 215வது குறிப்பில் தெளிவுபடுத்தியுள்ளோம்.
நல்லடியார் என்று அல்லாஹ்வும், அவனது தூதரும் அடையாளம் காட்டிய நல்லடியார்களை நாமும் நல்லடியார் என்று அறிந்து கொள்ள முடியும். ஆனால் அவர்களைக் கொண்டாடவும், வழிபடவும் இந்த வசனம் ஆதாரமாக ஆகாது.
இவ்வசனங்கள் நல்லடியார்களையும் மகான்களையும் கொண்டாடவோ, அவர்களுக்கு வழிபாடு நடத்துவதை அனுமதிக்கவோ அருளப்படவில்லை. அல்லாஹ்வின் பாதையில் உயிர்த் தியாகம் செய்ய ஒருவர் தயங்கக் கூடாது என்பதை வலியுறுத்துவதற்காகவே அருளப்பட்டன.
இவ்வசனங்கள் அருளப்பட்ட பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ, நபித்தோழர்களோ, அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை அழைக்கவோ, பிரார்த்திக்கவோ இல்லை என்பதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இவ்வசனங்களைக் கவனமாக ஆய்வு செய்தால் இவர்களின் விளக்கம் தவறு என்பதை அறியலாம்.
2:154 வசனத்தில் “அவர்கள் உயிருடன் உள்ளனர்” என்பதுடன் “எனினும் நீங்கள் உணர மாட்டீர்கள்” என்று சேர்த்துக் கூறப்பட்டுள்ளது.
அவர்கள் உயிருடன் இருப்பது நாம் உணர்ந்துள்ள கருத்தில் அல்ல. நம்மால் உணர்ந்து கொள்ள முடியாத வேறு வகையில் உயிருடன் உள்ளனர் என்ற கருத்தையே இது தரும்.
3:169 வசனமும் அதைத் தொடர்ந்து வரும் நான்கு வசனங்களும் இதை இன்னும் தெளிவாகக் கூறுகின்றன.
3:169 வசனம் “தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்” எனக் கூறுகிறது. நம்மைப் பொறுத்த வரை அவர்கள் மரணித்து விட்டாலும் இறைவனைப் பொறுத்த வரை அவர்கள் உயிருடன் உள்ளனர் எனக் கூறப்படுகிறது.
இவ்வசனத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அளித்த விளக்கமும் முக்கியமானது.
அல்லாஹ்வின் பாதையில் உயிர்த் தியாகம் செய்தவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்றால் எப்படி? என்று நாங்கள் கேட்டபோது “அவர்களின் உயிர்கள் பச்சை நிறத்துப் பறவைகளின் கூடுகளுக்குள் இருக்கும். அவை சொர்க்கத்தில் விரும்பியவாறு சுற்றித் திரியும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்தனர் அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி) நூல்: முஸ்லிம் 3834
நியாயத் தீர்ப்புக்குப் பிறகுதான் நல்லோர் சொர்க்கம் செல்வார்கள். எனவேதான் மனித வடிவில் இல்லாமல் பச்சை நிறப் பறவைகளாக சொர்க்கத்தில் சுற்றி வருவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வளவு தெளிவாக இதை விளக்கிய பிறகும் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் உயிருடன் உள்ளனர் என்பதற்கு சிலர் நேரடிப்பொருள் செய்து வழிகேட்டைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர்.
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் உயிருடன் உள்ளனர் என்பதற்கு அல்லாஹ்வின் தூதர் கொடுத்த அர்த்தம் தவிர வேறு அர்த்தம் இல்லை. அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் சாகாமல் நம்மைப்போல் உயிருடன் உள்ளனர் என்று யாரேனும் இதற்குப் பொருள் செய்தால் அவர்கள் கீழ்க்காணும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவரின் சொத்துக்களை அவரது வாரிசுகள் எடுத்துக் கொள்ளலாமா? அவரது மனைவி மறுமணம் செய்து கொள்ளலாமா? என்று இவர்களிடம் கேட்டால் செய்யலாம் என்று தான் பதிலளிக்கிறார்கள்.
நம்மைப் பொறுத்த வரை அவர்கள் இறந்து விட்டார்கள் என்று இவர்களும் ஒப்புக் கொள்வதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
நம்மைப் போலவே உயிருடன் உள்ளனர் என்று ஒரு வாதத்துக்காக வைத்துக் கொள்வோம். ஒருவர் உயிருடன் இருப்பதால் அவரிடம் பிரார்த்திக்கலாமா? அவருக்குக் கடவுள் தன்மை வந்து விடுமா? நாம் கூட உயிருடன் தான் இருக்கிறோம். நம்மில் ஒருவர் மற்றவரிடம் பிரார்த்தனை செய்யலாமா?
ஈஸா நபியவர்கள் இன்று வரை உயிருடன் தான் உள்ளனர். இதை 4:157-159, 5:75, 43:61 ஆகிய வசனங்கள் கூறுகின்றன
ஈஸா நபியவர்கள் இவ்வுலகில் ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தினார்கள். அவர்களை அழைத்துப் பிரார்த்திக்கும் கிறித்தவர்களின் நடவடிக்கை தவறானது என்று நம்புகின்ற முஸ்லிம்கள், ஈஸா நபிக்குச் சமமாக இல்லாதவர்களிடம் பிரார்த்திப்பது எந்த வகையில் சரியானதாகும்?
அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் அனைத்து ஆற்றலும் உள்ளவனிடம் தான் பிரார்த்திக்க வேண்டும். ஒருவர் உயிருடன் இருப்பதால் மட்டும் அவரிடம் பிரார்த்திக்க முடியாது.
அல்லாஹ்வின் பாதையில் ஒருவர் கொல்லப்பட்டாரா? அல்லது பெருமைக்காகப் போருக்குச் சென்று கொல்லப்பட்டாரா? என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த விஷயம். ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் தான் கொல்லப்பட்டார் என்று நாம் முடிவு செய்ய முடியாது. இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவை தவிர “அல்லாஹ்வைத் தவிர யாரிடமும் பிரார்த்தனை செய்யக் கூடாது” என்று கூறும் நூற்றுக்கணக்கான வசனங்கள் உள்ளன. அந்த வசனங்கள் இதோ:
2:186, 3:38, 7:29, 7:55, 7:56, 7:180, 7:194, 7:197, 10:12, 10:106, 13:14, 14:39, 14:40, 16:20, 17:56, 17:110, 19:4, 21:90, 22:12, 22:13, 22:62, 22:73, 23:117, 27:62, 31:30, 35:13, 35:14, 35:40, 39:38, 40:12, 40:20, 40:60, 40:66, 46:4, 46:5