இறந்தோரை அவுலியா (இறைநேசர்) என நாம் தீர்மானிக்க இயலுமா?
கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அவர்கள் (இறைவனை) நம்புவார்கள். (அவனை) அஞ்சுவோராக இருப்பார்கள். இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் அவர்களுக்கு நற்செய்தி உண்டு. அல்லாஹ்வின் வார்த்தைகளுக்கு மாற்றுதல் என்பது இல்லை. அதுவே மகத்தான வெற்றி.
(அல்குர்ஆன் 10 : 62, 63, 64)
இவ்வசனத்தைச் சிலர் தவறாக விளங்கிக் கொண்டு மகான்களை வழிபடலாம் என்று நினைக்கின்றனர். ஒவ்வொருவரும் இறை நேசராக வாழ முயல வேண்டும் என்பதைத் தான் இவ்வசனம் கூறுகிறது. மகான்களை வழிபடுமாறு கூறவில்லை.
மேலும் அடுத்த வசனத்தில் இறை நேசர்கள் யார் என்ற இலக்கணமும் கூறப்படுகிறது. நம்பிக்கை கொள்வதும், இறைவனை அஞ்சுவதுமே அந்த இலக்கணம்.
ஒருவர் இறைவனை உண்மையாகவே நம்புகிறாரா? இறைவனை அஞ்சுகிறாரா? என்பதை யாராலும் அறிய முடியாது. ஏனெனில் இவ்விரு தன்மைகளும் வெளியில் தெரிபவை அல்ல. உள்ளங்களில் இருப்பவையாகும்.
யார் இறை நேசர்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடியாது என்பதைத் தான் இவ்வசனங்கள் கூறுகின்றன. எனவே மகான்களைக் கொண்டாடும் பேச்சுக்கே இடமில்லை.
மேலும் நம்முடைய வெளிப்படையான பார்வைக்கு ஒருவர் எவ்வளவு நல்லவராகத் தெரிந்தாலும் அவர் நம்முடைய பார்வைக்குத்தான் நல்லவரே தவிர இறைவனுடைய பார்வையிலும் அவர் நல்லவர்தான் என்பதை நாம் தீர்மானிக்க இயலாது. இதற்கு நாம் பல்வேறு சான்றுகளைப் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் பார்க்கவிருக்கிறோம்.
உஸ்மான் பின் மள்வூன் (ரலி) அவர்களின் மரணம்
நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழிப் பிரமாணம் (பைஅத்) செய்திருந்த அன்சாரிப் பெண்மணியான உம்முல் அலா (ரலி) அவர்கள் கூறியதாவது:
‘(மதீனாவுக்கு வந்த) முஹாஜிர்களில் யார் எவர் வீட்டில் தங்குவது என்பதையறிய சீட்டுக் குலுக்கிப் போட்டுக்கொண்டிருந்தபோது உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்கள் எங்கள் வீட்டில் தங்குவது என முடிவானது. அதன்படி அவரை எங்கள் வீட்டில் தங்க வைத்தோம். பிறகு அவர் நோயுற்று மரணமடைந்தார். அவரது உடல் நீராட்டப்பட்டு அவரது ஆடையிலேயே கஃபனிப்பட்டதும் நபி (ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். நான் (உஸ்மானை நோக்கி), ”’ஸாயிபின் தந்தையே! உம் மீது இறையருள் உண்டாகட்டும்! அல்லாஹ் உம்மைக் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சியம் கூறுகிறேன்” எனக் கூறினேன்.
உடனே நபி (ஸல்) அவர்கள் ”அவரை அல்லாஹ் கண்ணியப் படுத்தியுள்ளான் என்பது, உனக்கெப்படித் தெரியும்?” என்று கேட்டார்கள். ”’ அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். பின் யாரைத்தான் அல்லாஹ் கண்ணியப்படுத்துவான்? ” என நான் கேட்டேன். அதற்கு, நபி (ஸல்) அவர்கள், ”’இவர் இறந்துவிட்டார். எனவே அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் விஷயத்தில் நன்மையையே நான் விரும்புகின்றேன். ஆயினும் நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் எனது நிலைமை (நாளை) என்னவாகும் என்பது எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அதற்குப் பிறகு நான் யார் விஷயத்திலும் (அவ்வாறு) பாராட்டிக் கூறுவதேயில்லை.’ (நூல் : புகாரி 1243)
உஸ்மான் பின் மள்வூன் (ரலி) மிக நல்லவராகவும், வணக்கசாலியாகவும் வாழ்ந்தார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் எனும் தியாகப் பயணத்தையும் மேற்கொண்டவர்கள். அன்னார் மரணித்த போது அவர்களோடு பலகாலம் நட்பு கொண்ட, அவர்களுடைய நல்லொழுக்கங்களை அவர்களோடு இருந்து அறிந்து கொண்ட உம்மு அலா அவர்கள் அல்லாஹ் உம்மைக் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சியம் கூறுகிறேன்” எனக் கூறும் போது நபியவர்கள் அதைக் கடுமையாக கண்டிக்கிறார்கள்.
நம்முடைய பார்வைக்கு நல்லவராக இருந்தாலும் அவர் நிலை என்னவென்று நாம் தீர்மானிக்க இயலாது என்பதை நபியவர்கள் தெளிவு படுத்துகிறார்கள். நபியவர்கள் கூட ஒரு ஸஹாபி இறந்த பிறகு அவர்களின் நிலையை அவர்களாக அறிய முடியாது என்று சொன்னால் இன்று நாம் யார் யாருக்கெல்லாமோ அவுலியாக்கள் என்று பட்டம் சூட்டுகின்றோமே இது எந்த வகையில் சரியானது?
உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்கள் மிகச் சிறந்த சஹாபி. ஹிஜ்ரத் செய்தவர். அவர் மரணித்த பிறகு அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்திவிட்டான் என்று தீர்மானிப்பதை நபியவர்கள் கண்டிக்கிறார்கள். ஒருவன் எவ்வளவு நல்லவனாக வாழ்ந்தாலும் அவன் மரணித்த பிறகு அவன் நிலை என்னவென்பதை அல்லாஹ் ஒருவன்தான் அறிந்தவன். அவனைத் தவிர வேறு யாரும் அறியமுடியாது.
நம்முடைய பார்வைக்கு ஒருவன் நல்லவனாக வாழ்ந்தாலும் அவன் மரணித்த பிறகு அவன் நல்லவன்தான் என நாம் தீர்மானிக்க முடியாது என்பதை மேற்கண்ட ஹதீஸ்கள் தெளிவாக விளக்குகின்றன. பின்வரும் ஹதீஸ் இதனை நூறு சதவிகிதம் உறுதிப்படுத்துகிறது.
ஸஹாபாக்களின் பார்வையில் நல்லவராகப் பட்டவர் நரகவாசி
சஹ்ல் பின் சஅத் அஸ் ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களும் இணை வைப்போரும் (கைபர் போர்க்களத்தில்) சந்தித்துப் போரிட்டுக் கொண்டனர். நபியவர்கள் தம் படையின் பக்கம் சென்று விட மற்றவர்களும் தம் படையின் பக்கம் சென்றுவிட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்களி ன் தோழர்களுக்கிடையே ஒருவர் இருந்தார். அவர் (எதிரிகளில்) போரில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நிற்பவர், படையிலிருந்து விலகிப் போய் தனியே சென்றவர் (அதாவது எதிர்த்து நிற்பவர், பணிந்து செல்பவர் என்று) எவரையும் நபித் தோழர்களுக்கு விட்டு வைக்காமல் அனைவரையும் தம் வாளால் வெட்டியபடி துரத்திச் சென்று (மூர்க்கமாகப் போரிட்டுக்) கொண்டிருந்தார். (அவரது துணிச்சலான போரைக் கண்ட) நபித் தோழர்கள், ”இந்த மனிதர் போரிட்டதைப் போல் இன்று நம்மில் வேறெவரும் தேவை தீரப் போரிடவில்லை” என்று (வியந்து) கூறினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ”அவரோ நரகவாசியாவார்” என்று கூறினார்கள்.
அப்போது கூட்டத்திலிருந்து ஒரு மனிதர், ”நான் அவருடன் இருக்கிறேன் (அவர் என்ன செய்கிறார் என்று பார்ப்பதற்கு)” என்று சொல்லிவிட்டு அந்த மனிதருடன் புறப்பட்டார். அவர் நின்ற போதெல்லாம் இவரும் நின்றார். அவர் விரைந்தால் இவரும் விரைந்தார். (ஒரு கட்டத்தில்) அவர் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். அதனால் சீக்கிரமாக மரணித்து விட விரும்பி, தன் வாளி ன் (கைப்பிடியுள்ள) முனையை பூமியில் ஊன்றி, அதன் கூரான முனையைத் தன் இரு மார்புகளுக்கு இடையே வைத்து, அந்த வாளின் மீது தன் உடலை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். (இதை உடனிருந்து கண்காணித்துவிட்டு) அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, ”தாங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்பதற்கு நான் சாட்சியம் அளிக்கிறேன்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், ”என்ன விஷயம்?” என்று கேட்டார்கள். அவர், ”சற்று முன்பு தாங்கள் ஒருவரைப் பற்றி ‘அவர் நரகவாசி’ என்று கூறினீர்கள் அல்லவா? அதைக் கண்டு மக்கள் வியப் படைந்தனர். நான் (மக்களி டம்), ”உங்களுக்காக (அவரது நிலைகளை அறிந்துவர) நான் அவருடன் போய் வருகிறேன்” என்று கூறிவிட்டு, அவரைத் தேடிப் புறப் பட்டேன். அவர் கடுமையாக காயப் படுத்தப்பட்டார்.
உடனே, அவர் சீக்கிரமாக மரணமடைய விரும்பி, வாளின் பிடிமுனையை பூமியில் நட்டு, அதன் கூர்முனையைத் தன் இரு மார்புகளுக்கிடையே வைத்து, அதன் மீது தன்னை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்” என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”மக்களின் வெளிப் பார்வைக்கு ஒரு மனிதர் சொர்க்கத்திற்குரிய (நற்) செயலைச் செய்து வருவார். ஆனால், அவர் (உண்மையில்) நரகவாசியாக இருப்பார். மக்களின் வெளிப்பார்வைக்கு ஒரு மனிதர் நரகத்திற்குரிய செயலைச் செய்துவருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசியாக இருப்பார்” என்று சொன்னார்கள். (நூல் : புகாரி 2898)
ஸஹாபாக்கள் ஒரு மனிதரை நல்லவர் என்று தீர்மானிக்கின்றார்கள் . ஆனால் அவர்தான் இறைவனின் பார்வையில் கெட்டவராக் இருக்கின்றார்.
”மக்களின் வெளிப் பார்வைக்கு ஒரு மனிதர் சொர்க்கத்திற்குரிய (நற்) செயலைச் செய்து வருவார். ஆனால், அவர் (உண்மையில்) நரகவாசியாக இருப்பார். மக்களின் வெளிப்பார்வைக்கு ஒரு மனிதர் நரகத்திற்குரிய செயலைச் செய்துவருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசியாக இருப்பார்” என்று சொன்னார்கள்.
என்ற நபியவர்களின் கூற்று நாம் யாரையும் இவர் நல்லவர்தான் இறைநேசர்தான் என்ற தீர்மானிக்க இயலாது என்பதற்குச் தெளிவான சான்றாகும்.
மக்களின் பார்வையில் நல்லவர்கள் இறைவனின் பார்வையில் நரகவாசிகள்
மறுமை நாளில் மக்களில் முதல் முதரில் தீர்ப்பு வழங்கப்படுபவர் யாரெனில், இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவரே ஆவார். அவர் இறைவனிடம் கொண்டுவரப் படும்போது, அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார். பிறகு, ”அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?” என்று இறைவன் கேட்பான். அவர், ”(இறைவா!) உனக்காக நான் அறப்போரில் ஈடுபட்டு என் உயிரையே தியாகம் செய்தேன்” என்று பதிலளிப்பார்.
இறைவன், ”(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (நீ எனக்காக உயிர்த் தியாகம் செய்யவில்லை.) மாறாக, ‘மாவீரன்’ என்று (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ போரிட்டாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது. (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது)” என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.
பிறகு கல்வியைத் தாமும் கற்று அதைப் பிறருக்கும் கற்பித்தவரும் குர்ஆனைக் கற்றுணர்ந்தவருமான (மார்க்க அறிஞர்) ஒருவர் (இறைவனிடம்) கொண்டுவரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்து கொள்வார். பிறகு ”அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?” என்று இறைவன் கேட்பான். அவர், ”(இறைவா!) கல்வியை நானும் கற்று, பிறருக்கும் அதை நான் கற்பித்தேன். உனக்காகவே குர்ஆனை ஓதினேன்” என்று பதிலளிப்பார்.
அதற்கு இறைவன், ”(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (எனக்காக நீ கல்வியைக் கற்கவுமில்லை; கற்பிக்கவுமில்லை.) ‘அறிஞர்’ என்று சொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே நீ கல்வி கற்றாய்; ‘குர்ஆன் அறிஞர்’ என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ குர்ஆனை ஓதினாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது)” என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.
பிறகு இறைவன் தாராளமான வாழ்க்கை வசதிகளும் அனைத்து விதமான செல்வங்களும் வழங்கியிருந்த பெரிய செல்வர் ஒருவர் இறைவனிடம் கொண்டுவரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார். பிறகு, ”அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?” என்று இறைவன் கேட்பான். அதற்கு அவர், ”நீ எந்தெந்த வழிகளில் எல்லாம் பொருள் செலவழிக்கப்படுவதை விரும்புகிறாயோ, அந்த வழிகளில் எதையும் விட்டுவிடாமல் அனைத்திலும் நான் உனக்காக எனது பொருளைச் செலவிட்டேன்” என்று பதிலளிப்பார்.
அதற்கு இறைவன், ”(இல்லை) நீ பொய் சொல்கிறாய் ‘இவர் ஒரு புரவலர்’ என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ இவ்வாறு (செலவு) செய்தாய். (உன் எண்ணப் படி) அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது. (உனது எண்ணம் நிறைவேறிவிட்டது)” என்று கூறிவிடுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார். அறிவிப்பவர் : அபூ ஹ‚ரைரா (ரலி) நூல் : முஸ்லிம் (3865)
மக்களால் மிகப் பெரும் தியாகி என்றும், இறைவனின் பாதையில் வாரிவழங்கிய வள்ளல் என்றும், மாபெரும் அறிஞர் என்றும் பாராட்டப்பெற்றவர்கள் இறைவனின் பார்வையில் நரகவாசிகளாகக் காட்சியளிக்கின்றனர் என்றால் இன்றைக்கு யார் யாரையெல்லாமோ நாம் எப்படி இவர்கள் அவுலியாக்கள் என்று தீர்மானிக்க இயலும் என்பதை முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும்.
ஒன்று மறியா குழந்தையின் நிலையைக் கூட நாம் தீர்மானிக்க இயலாது
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் அன்சாரிகளில் ஒரு குழந்தை இறந்த போது, அதன் பிரேத நல்லடக்கத்திற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைக்கப்பட்டார்கள். அப்போது நான், ”அல்லாஹ்வின் தூதரே! அக்குழந்தைக்கு நல் வாழ்த்துகள்! அது சொர்க்கத்தின் சிட்டுக் குருவிகளில் ஒரு சிட்டுக்குருவி. அது எந்தத் தீமையையும் செய்யவில்லை. அதற்கான பருவத்தையும் அது அடையவில்லை” என்று சொன்னேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”வேறு ஏதேனும் உண்டா, ஆயிஷா? அல்லாஹ் சொர்க்கத்திற்கென்றே சிலரைப் படைத்துள்ளான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத்தண்டுகளில் இருந்தபோதே அதற்காகவே அவர்களை அவன் படைத்துவிட்டான்; நரகத்திற்கென்றே சிலரைப் படைத்தான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத்தண்டுகளில் இருந்தபோதே அதற்காகவே அவர்களைப் படைத்துவிட்டான்” என்று கூறினார்கள்
(நூல் : முஸ்லிம் 5175)
நாம் ஒருவரை நல்லவர் என்று தீர்மானிக்கலாமா
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உண்மையாளர்களுடன் ஆகுங்கள்! (9 : 19)
وَلَا تَنْكِحُوا الْمُشْرِكٰتِ حَتّٰى يُؤْمِنَّؕ وَلَاَمَةٌ مُّؤْمِنَةٌ خَيْرٌ مِّنْ مُّشْرِكَةٍ وَّلَوْ اَعْجَبَتْكُمْۚ وَلَا تُنْكِحُوا الْمُشْرِكِيْنَ حَتّٰى يُؤْمِنُوْا ؕ وَلَعَبْدٌ مُّؤْمِنٌ خَيْرٌ مِّنْ مُّشْرِكٍ وَّلَوْ اَعْجَبَكُمْؕ اُولٰٓٮِٕكَ يَدْعُوْنَ اِلَى النَّارِ ۖۚ وَاللّٰهُ يَدْعُوْٓا اِلَى الْجَـنَّةِ وَالْمَغْفِرَةِ بِاِذْنِهٖۚ وَيُبَيِّنُ اٰيٰتِهٖ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ
இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்ப வள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக் கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக் கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக் கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன் தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான் (அல்குர்ஆன் 2 : 221)
مَا كَانَ لِلنَّبِىِّ وَالَّذِيْنَ اٰمَنُوْاۤ اَنْ يَّسْتَغْفِرُوْا لِلْمُشْرِكِيْنَ وَ لَوْ كَانُوْۤا اُولِىْ قُرْبٰى مِنْۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمْ اَنَّهُمْ اَصْحٰبُ الْجَحِيْمِ
இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது. (9 : 113)
மேற்கண்ட வசனங்களில் நாம் உண்மையான முஃமின்களுடன் வாழவேண்டும் என்றும், இணைவைக்கும் பெண்களை திருமணம் செய்யக் கூடாது என்றும், முஃமினான இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்குத்தான் நம்முடைய பெண்களை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் , இணைகற்பித்தவர்களுக்கு பாவமன்னிப்பு தேடக்கூடாது என்றும் அல்லாஹ் கட்டளையிடுகிறான். இது போன்று பல்வேறு கட்டளைகள் குர்ஆன் மற்றும நபிமொழிகளில் காணப்படுகின்றன.
ஒருவர் நல்லவர் என்றும் கெட்டவர் என்றும் நாம் தீர்மானித்தால்தானே மேற்கண்ட கட்டளைகளை நாம் பின்பற்ற இயலும் என்ற எண்ணம் நம்மில் தோன்றலாம்.
நம்முடைய பார்வையில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வாழ்பவர்களை நாம் நல்லவர்கள் என்றே தீர்மானிக்க வேண்டும். அதே நேரத்தில் நம்முடைய பார்வையில் நல்லவர்களாக இருப்பதால் இறந்தபிறகும், இறைவனிடத்திலும் அவர்கள் நல்லவர்கள்தான் என்பதை நாம் தீர்மானிக்க இயலாது என்பதே இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். அதைத்தான் நாம் மேலே விரிவாகக் கண்டோம். நம்முடைய பார்வையில் யார் முஃமினாகத் தெரிகிறாரோ அத்தகைய உண்மையாளருடன் நாம் வாழவேண்டும். அதே நேரத்தில் அவர் நம்முடைய பார்வைக்குத்தான் நல்லவரே தவிர அவருடைய உண்மையான நிலையை இறைவனே அறிந்தவன் என்பதையும் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். இறைவனும் இவ்வாறுதான் தீர்மானிக்கச் சொல்கிறான்.
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا جَآءَكُمُ الْمُؤْمِنٰتُ مُهٰجِرٰتٍ فَامْتَحِنُوْهُنَّ ؕ اَللّٰهُ اَعْلَمُ بِاِيْمَانِهِنَّ ۚ فَاِنْ عَلِمْتُمُوْهُنَّ مُؤْمِنٰتٍ فَلَا تَرْجِعُوْهُنَّ اِلَى الْكُفَّارِ ؕ لَا هُنَّ حِلٌّ لَّهُمْ وَلَا هُمْ يَحِلُّوْنَ لَهُنَّ ۚ وَاٰ تُوْهُمْ مَّاۤ اَنْفَقُوْا ؕ وَلَا جُنَاحَ عَلَيْكُمْ اَنْ تَنْكِحُوْهُنَّ اِذَاۤ اٰ تَيْتُمُوْهُنَّ اُجُوْرَهُنَّ ؕ وَلَا تُمْسِكُوْا بِعِصَمِ الْكَوَافِرِ وَسْــَٔـلُوْا مَاۤ اَنْفَقْتُمْ وَلْيَسْــَٔـلُوْا مَاۤ اَنْفَقُوْا ؕ ذٰ لِكُمْ حُكْمُ اللّٰهِ ؕ يَحْكُمُ بَيْنَكُمْ ؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ
நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் என்று நீங்கள் அறிந் தால் அவர்களை (ஏக இறைவனை) மறுப்போரிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள்! இவர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோர் அல்லர். அவர்கள் இவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோரும் அல்லர்.
(அல்குர்ஆன் 60 : 10)
மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் நம்பிக்கை கொண்டு ஹிஜ்ரத் செய்து வந்த பெண்களின் ஈமானை சோதித்துபார்க்குமாறு அல்லாஹ் கூறுகிறான். ஒருவருடைய உண்மையான இறைநம்பிக்கையை அல்லாஹ்தான் அறிந்தவன் . நாம் அதை அறிய முடியாது. நாம் வெளிப்படையான செயல்களை வைத்துதான் தீர்மானிக்க முடியும் . இதன்காணரமாகத்தான் இறைவன் அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன்.
அவர்கள் நம்பிக்கை கொண்டோர் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை (ஏக இறைவனை) மறுப்போரிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள்! என்று கட்டளையிடுகிறான். இதிருந்தே நாம் வெளிப்படையில் இணைகற்பிக்கும் காரியங்களைச் செய்யாமலும் இஸ்லாமிய ஒழுங்களைப் பேணிவாழ்பவர்களை நல்லவர்கள் என்றும் இதற்கு மாற்றமாக வாழ்பவர்களை கெட்டவர்கள் என்றும் நாம் தீர்மானித்து நல்லவர்களுடன் எவ்வாறு வாழவேண்டும் என்றும் கெட்டவர்களுடன் இறைவன் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்றும் இறைவன் கட்டளையிடுகிறானோ அவ்வாறு நாம் நடந்து கொள்ளவேண்டும்.
அவுலியாக்களைத் தீர்மானிக்கும் கப்ரு வணங்கிகள்
நீங்கள் முஃமின்களோடு வாழுங்கள், உண்மையாளர்களோடு இருங்கள் என்று குர்ஆனிலும் ஹதீஸிலும் வரும் கட்டளைகள் நம்முடைய பார்வையில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வாழ்பவர்களை நாம் நல்லவர்கள் என்றே தீர்மானிக்க வேண்டும். என்றும் அதே நேரத்தில் நம்முடைய பார்வையில் நல்லவர்களாக இருப்பதால் இறந்தபிறகும், இறைவனிடத்திலும் அவர்கள் நல்லவர்கள்தான் என்பதை நாம் தீர்மானிக்க இயலாது என்பதையும் நம்முடைய பார்வையில் இஸ்லாமிய அடிப்படைகளுக்கு மாற்றமாக வாழ்பவர்கள் கெட்டவர்கள் என்றும் அதே நேரத்தில் அவர்கள் இறந்த பிறகும் இறைவனுடைய பார்வையிலும் கெட்டவர்கள்தான் என்று நாம் தீர்மானிக்க இயாலாது என்பதையும் தான் குறிக்கும் என்பதை நாம் மேலே தெளிவாகக் கண்டோம்.
ஆனால் இந்த அடிப்படையை உணராத கப்ருவணங்கிகள் மேற்கண்ட வசனங்களை ஆதாரம் காட்டி நம்முடைய பார்வைக்கு நல்லவர்களாகத் தெரிபவர்களை நாம் அவர்கள் இறந்த பிறகும் நல்லவர்கள் என தீர்மானிக்கலாம் எனக் கூறுகின்றனர். இது அவர்களின் மார்க்க அறிமையையே காட்டுகிறது.
மேலும் ஒருவரை அவர் இறந்த பிறகு அவரை நல்லவர்தான் என்று மக்கள் தீர்மானிக்க இயலும் என்பதற்கு பின்வரும் ஹதீஸை ஆதாரம் காட்டுகின்றனர். அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருமுறை, மக்கள் ஒரு ஜனாஸாவைக் கடந்து சென்றபோது, இறந்தவரின் நற்பண்புகளைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”உறுதியாகிவிட்டது” என்றார்கள். மற்றொரு முறை வேறொரு (ஜனாஸாவைக்)கடந்து சென்றபோது மக்கள் அதன் தீய பண்புகளைப் பற்றி இகழ்ந்து பேசலாயினர். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், ”உறுதியாகி விட்டது” எனக் கூறினார்கள். உமர் (ரரி) ”எது உறுதியாகி விட்டது?” எனக் கேட்டதும் நபி (ஸல்) அவர்கள், ”இவர் விஷயத்தில் நல்லதைக் கூறிப் புகழ்ந்தீர்கள்; எனவே அவருக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது. இவர் விஷயத்தில் தீயதைக் கூறினீர்கள்; எனவே இவருக்கு நரகம் உறுதியாகிவிட்டது. ஆக நீங்களே பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகளாவீர்கள்” எனக் கூறினார்கள். நூல் : புகாரி (1367)
மேற்கண்ட ஹதீஸில் மக்கள் ஒருவரை நல்லவர் என்று புகழ்ந்தால் அவர் சொர்க்க வாசி என்றும் மக்கள் ஒருவரை கெட்வர் என்று புகழ்ந்தால் அவர் நரகவாசியென்றும் தீர்மானிக்கலாம் என்பது போல் தெரிகிறது.
மேற்கண்ட ஹதீஸில் நபியவர்கள் கூறிய முழுமையான சில வாசகங்கள் விடுபட்டுள்ளன. இதன்காரணமாகத்தான் மக்கள் தீர்மானிக்கலாம் என்பது போன்ற கருத்து வருகிறது. நபியவர்கள் கூறிய முழுமையான வாசகங்கள் மற்ற ஹதீஸ்களில் வந்துள்ளன.
المستدرك – (ج 1 / ص 533)
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நான் ஒரு தடவை நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது ஒரு ஜனாஷா கடந்து சென்றது. அப்போது நபியவர்கள் இது யார்? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் இது இன்னாருடைய ஜனாஷா என்றும் அவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிப்பவராக இருந்தார் என்றும் அல்லாஹ்விற்கு வழிப்பட்டு நல்லமல்கள் செய்பவராகவும் அதற்கு முயற்சிப்பவராகவும் இருந்தார் என்று கூறினார்கள். உடனே நபியவர்கள் உறுதியாகிவிட்டது உறுதியாகிவிட்டது உறுதியாகிவிட்டது என்று கூறினார்கள். பிறகு மற்றொரு ஜனாஷா கடந்து கொண்டு செல்லப்பட்டது. அப்போது மக்கள் இது இன்னாருடைய ஜனாஷா என்றும் அவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் வெறுப்பவராக இருந்தார் என்றும் இறைவனுக்கு மாறுசெய்யும் காரியங்களைச் செய்பவராகவும் அதற்கு முயற்சிப்பவராகவும் இருந்தார் என்று கூறினார்கள். உடனே நபியவர்கள் உறுதியாகிவிட்டது உறுதியாகிவிட்டது உறுதியாகிவிட்டது என்று கூறினார்கள் அப்போது மக்கள் அல்லாஹ்வின் தூதரே முதலாவது ஜனாஸாவை மக்கள் புகழ்ந்போதும் உறுதியாகிவிட்டது என்றீர்கள் மற்றொன்றை மக்கள் இகழ்ந்போது உறுதியாகிவிட்டது என்றீர்கள் (அதன்விளக்கம் என்ன?) என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் : பூமியில் அல்லாஹ்விற்கென்று மலக்கு மார்கள் இருக்கின்றார்கள். அவர்கள் ஒரு மனிதன் நல்லவனா கெட்டவனா என்பதில் மக்களின் நாவுகளில் பேசுகிறார்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : ஹாகிம் பாகம் : 1 பக்கம் : 533
மக்கள் தாமாக பேசுவதில்லை. மாறாக மலக்குமார்கள்தான் மக்களின் நாவுகளில் ஒருவன் நல்லவனா கெட்டவனா என்று பேசுகிறார்கள். மக்கள் ஒருவரை நல்லவர் எனும் போது அவர்கள் நாவில் பேசியது மலக்கா? என்பதை நாம் கண்டறிய இயலாது. நபியவர்கள் இறைத்தூதர் என்பதினால்தான் மக்கள் நாவில் பேசியது மலக்குகள் என்பதை அல்லாஹ் அவர்களுக்குச் சொல் க் குடுத்தான். இதன்காரணமாக மக்கள் புகழ்நதரை சொர்க்கவாசி என்றும் மக்கள் இகழ்ந்தவரை நரகவாசி என்றும் நபியவர்கள் தீர்ப்பளித்தார்கள். இன்றைக்கு மக்கள் ஒருவரைப் பற்றி கூறும் வார்த்தைகள் மலக்குமார்கள் பேசியதா,என்பதை நம்மில் யாரும் தீர்மானிக்க இயலாது. என்வே மக்கள் ஒருவரைப் புகழ்ந்து பேசினால் அவர் நல்லவர்தான், இறைநேசர்தான் என்று தீர்மானித்தால் அவர் இணைகற்பிக்கும் காரியத்தைச் செய்தவராவார்.
மக்கள் புகழ்ந்து பேசிய தியாகியும், வள்ளலும், மார்க்க அறிஞரும் நரகவாசியானார்கள் என்கின்ற ஹதீசும் மக்களின் வார்த்தைகளால் ஒருவரை அவர் இறந்த பிறகு நல்லவர்தான் என்று நாம் தீர்மானிக்க இயலாது என்பதற்கு தெளிவான சான்றாகும்.,
கே.எம். அப்துந் நாஸிர் , கடையநல்லூர்.