இறந்தவர் செவியுற முடியுமா?
‘நீர் இறந்தோரைச் செவியுறச் செய்ய முடியாது! செவிடர்கள் பின்வாங்கி ஓடினால் அழைப்பை அவர்களுக்குச் செவியேற்கச் செய்ய உம்மால் முடியாது’ என்று திருக்குர்ஆனில் 30:52 வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான். இதற்கு ஒருவர் விளக்கம் கூறும் போது, நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை எத்தி வைக்கும் போது, இறைவன் தான் நாடினால் தான் அவர்களை இஸ்லாத்தின் பக்கம் அழைக்க முடியும் என்பதை எடுத்துக் காட்டவே இந்த வசனத்தை அருளினான். இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்பதை இந்த வசனம் கூறவில்லை. எனவே இறந்தவர்களிடம் பிரார்த்திக்கலாம் என்று கூறுகின்றார். இது சரியா?
இறந்தவர்கள் என்று இவ்வசனத்தில் காஃபிர்களைத் தான் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
இறந்தவர்களுக்கு எவ்வாறு காது கேட்காதோ அது போன்ற நிலையில் காஃபிர்களும் உள்ளனர். எனவே தான் இறந்தவ்ர்களின் நிலையுடன் இவர்களின் நிலையை ஒப்பிட்டு அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்.
காஃபிகளை இறந்தவர்களுடன் ஒப்ப்பிட்டுக் கூறி இருப்பதில் இறந்தவர்கள் கேட்க மாட்டார்கள் என்ற கருத்து இன்னும் அழுத்தமாகச் சொல்லப்படுகிறது.
ஷேக் அப்துல்லாஹ்வுக்குப் புரிய வைப்பது முடியைக் கட்டி மலையை இழுப்பது போல்… என்று ஒருவர் உதாரணம் கூறுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். முடியைக் கட்டி மலையை இழுக்க முடியாது; அது போல் ஷேக் அப்துல்லாஹ்வுக்கும் புரிய வைக்க முடியாது என்று தான் அர்த்தம்.
இன்னும் சொல்லப் போனால், சொல்லப்படும் செய்தியை விட உதாரணத்தில் குறிப்பிடப்படும் விஷயம் தான் வலிமையானதாகக் கருதப்படும். அதாவது, ஷேக் அப்துல்லாஹ்வுக்குப் புரிய வைப்பது கூட ஒரு வேளை சாத்தியமாகலாம்; ஆனால் உதாரணமாகக் கூறப்படும் விஷயம் ஒருக்காலும் சாத்தியப்படாது.
‘இது உதாரணம் தான்; எனவே இதை ஏற்றுக் கொள்ள முடியாது; இறந்தவர்கள் செவியேற்பார்கள்’ என்று கூறினால், அல்லாஹ் இந்த உதாரணத்தைத் தவறாகக் கூறி விட்டான் என்று சொல்ல வருகின்றார்களா?
இந்த வசனத்தில் உதாரணமாக அல்லாஹ் கூறினாலும் இதுவல்லாத எத்தனையோ வசனங்களில் இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்று நேரடியாகவே கூறப்பட்டுள்ளது.
அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். ‘எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள்’ என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.
(அல்குர்ஆன் 16:21)
இந்த வசனத்தில், இறந்தவர்கள் என்பதை உவமையாகக் கூறாமல் நேரடியாகவே அல்லாஹ் கூறுகின்றான். இறந்தவர்கள் என்று மட்டும் கூறாமல், உயிருடன் இருப்பவர்கள் அல்லர் என்றும் சேர்த்துக் கூறுகின்றான். இதற்கு வேற்றுப் பொருள் கொடுக்கவே முடியாது.
இறந்தவரின் சொத்துக்களை வாரிசுகள் எடுத்துக் கொள்ளலாமா? அவரது மனைவி மற்றவரை மணந்து கொள்ளலாமா? என்று இவர்களிடம், கேட்டால் செய்யலாம் என்று தான் பதிலளிப்பார்கள். உயிருடன் இருந்தால் இந்தக் காரியங்களைச் செய்யக் கூடாது அல்லவா? எனவே இறந்தவர்கள் உயிருடன் தான் இருக்கின்றார்கள் என்பது ஒரு போலியான வாதம் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
உயிருடன் உள்ளனர் என்றே ஒரு வாதத்துக்காக வைத்துக் கொள்வோம். ஒருவர் உயிருடன் இருப்பதால் அவரிடம் பிரார்த்திக்கலாமா? அவருக்குக் கடவுள் தன்மை வந்து விடுமா? நாம் கூட உயிருடன் தான் இருக்கிறோம். நம்மில் ஒருவர் மற்றவரிடம் பிரார்த்தனை செய்யலாமா?
ஈஸா நபியவர்கள் இன்று வரை உயிருடன் தான் உள்ளனர்.
(பார்க்க திருக்குர்ஆன் 4:157-159, 5:75, 43:61)
ஈஸா நபியவர்கள் இவ்வுலகில் ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தினார்கள். அவர்களை அழைத்துப் பிரார்த்திக்கும் கிறித்தவர்களின் நடவடிக்கை தவறானது என்று நம்புகின்ற முஸ்லிம்கள், ஈஸா நபியை விட அந்தஸ்தில் குறைந்த, சாதாரண மனிதர்களிடம் பிரார்த்திப்பது எப்படிச் சரியாகும்?
அனைத்தையும் படைத்துப் பரிபாலித்து, அனைத்துக்கும் ஆற்றல் உள்ளவனிடம் தான் பிரார்த்திக்க வேண்டும். உயிருடன் இருப்பதால் மட்டும் ஒருவரைப் பிரார்த்திக்க முடியாது.
உண்மையான பிரார்த்தனை அவனுக்கே உரியது. அவனன்றி இவர்கள் யாரைப் பிரார்த்திக்கிறார்களோ அவர்கள் சிறிதளவும் இவர்களுக்குப் பதிலளிக்க மாட்டார்கள். தண்ணீர் (தானாக) வாய்க்குள் செல்ல வேண்டும் என்பதற்காக இரு கைகளையும் அதை நோக்கி விரித்து வைத்துக் கொள்பவனைப் போலவே அவர்கள் உள்ளனர். அது (தானாக) அவனது வாய்க்குள் செல்லாது. (ஏக இறைவனை) மறுப்போரின் பிரார்த்தனை வீணாகவே இருக்கும்.
(அல்குர்ஆன் 13:14)
நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.
(அல்குர்ஆன் 35:14)
கியாமத் நாள் வரை தமக்குப் பதில் தராத, அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழி கெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர்.
(அல்குர்ஆன் 46:5)
இந்த வசனங்களும் இது போன்ற எண்ணற்ற வசனங்களும் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் பிரார்த்தனை செய்யக் கூடாது என்பதைத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.
2:186, 3:38, 7:29, 7:55, 7:56, 7:180, 7:194, 7:197, 10:12, 10:106, 14:39, 14:40, 16:20, 17:56, 17:110, 19:4, 21:90, 22:12, 22:13, 22:62, 22:73, 23:117, 27:62, 31:30, 35:13, 35:40, 39:38, 40:12, 40:20, 40:60, 40:66, 46:4 ஆகிய வசனங்களைப் பார்வையிடவும்