இறந்தவர் உடலை கிப்லா திசை நோக்கித் திருப்பி வைக்க வேண்டும் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவை பலவீனமாக உள்ளன.
‘பெரும் பாவங்கள் யாவை?’ என்று ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவை ஒன்பது என்று கூறிவிட்டு, ‘முஸ்லிமான பெற்றோருக்கு நோவினை அளிப்பது, உயிருள்ளவருக்கும் இறந்தவர்களுக்கும் கிப்லாவாக இருக்கும் கஃபாவின் புனிதத்தை மறுத்தல்’ என்பதை அதில் குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: உமைர் (ரலி)
நூல்கள்: அபூ தாவூத் 2490, பைஹகீ 3/408, 10/186, தப்ரானீ 17/47, ஹாகிம் 1/127
மேற்கண்ட நான்கு நூல்களிலும் அறிவிப்பாளர் தொடரில் அப்துல் ஹமீத் பின் ஸினான் என்பவர் இடம் பெறுகிறார். இவர் யாரென்று தெரியாதவர். எனவே இது பலவீனமான செய்தியாகும்.
பைஹகியின் மற்றொரு அறிவிப்பில் (3/409) அய்யூப் பின் உத்பா என்பார் இடம் பெறுகிறார். இவர் நினைவாற்றல் குறைந்தவர் என்பதால் இவர் அறிவிக்கும் ஹதீஸ்களும் பலவீனமானவை.
இந்தக் கருத்தில் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஏதும் இல்லாததால் கிப்லாவை நோக்கி உடலைத் திருப்பி வைக்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல.
மேலும் மேற்கண்ட ஹதீஸின் கருத்திலும் குழப்பம் உள்ளது.
உயிருள்ளவருக்கும், இறந்தவர்களுக்கும் கிப்லா என்று கூறப்பட்டுள்ளது. உயிருள்ளவருக்கு கிப்லா என்றால் 24 மணி நேரமும் அதை நோக்கியே இருக்க வேண்டும் என்று யாரும் கூற மாட்டார்கள். தொழும் போது கிப்லாவை நோக்க வேண்டும் என்றே புரிந்து கொள்வார்கள்.
அது போல் இறந்தவர்களுக்கு கிப்லா என்றால் இறந்தவர் தொழும் போது அதை நோக்க வேண்டும் என்ற கருத்து வரும். இறந்தவருக்கு தொழுகை இல்லை. தொழ முடியாது எனும் போது இறந்தவர்களுக்கு கிப்லா என்பதும் பொருளற்றதாகி விடுகிறது.
எனவே நமது வசதிக்கு ஏற்ப உடலை எந்தப் பக்கம் வேண்டுமானாலும் வைக்கலாம்.