இறந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய இஸ்லாம் அனுமதிக்கிறதா?

இறந்தவரின் உறுப்புகளைக் கொண்டே தவிர வேறு எந்த சிகிச்சையாலும் மனித உயிரைக் காப்பாற்ற முடியாது என்ற இக்கட்டான நிலை வரும் போது இறந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய இஸ்லாமிய ஷரீஅத் அனுமதிக்கிறதா? கூடுமா?

ஏனெனில், அல்லாஹ் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய உடல் உறுப்புகளை அமானிதமாக வழங்கியுள்ளான். அந்த அமானிதத்தை முழுமையாக அவனிடத்தில் சேர்ப்பது மனிதனின் கடமையாகும்.

மறுமையில் அல்லாஹ்வுடைய சந்நிதானத்தில் நாம் முழுமையான உடலுறுப்புகளுடன் நிறுத்தப்பட்டு கேள்வி கணக்கு கேட்கப்படுவோம் என்பதற்கு குர்ஆனுடைய வசனங்கள் சான்று பகர்கின்றன.
ஹாமீம் ஸஜ்தா என்ற அத்தியாயத்தில் 20, 21, 22 வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்.

இறுதியாக நரகமாகிய அதன் பால் அவர்கள் வந்தடைந்து விடுவார்கள். பாவம் செய்த அவர்களுக்கு விரோதமாக அவர்களுடைய செவியும், அவர்களுடைய பார்வையும், அவர்களுடைய தோல்களும் அவர்கள் செய்து கொண்டிருந்ததைப் பற்றி சாட்சி கூறும்…

மேலும், தாஹா என்ற அத்தியாயத்தில் 125, 126 ஆயத்துக்களில் அல்லாஹ் கூறுகிறான்.

அந்த மனிதன் என் ரட்சகனே! ஏன் என்னை குருடனாக நீ எழுப்பினாய்? நான் திட்டமாக (உலகத்தில்) பார்வையுடையவ னாக இருந்தேனே என்று கேட்பான். (அதற்கு) அவ்வாறே! நம் வசனங்கள் உன்னிடம் வந்தன. நீ அவைகளை மறந்து விட்டாய். (நீ மறந்த) அவ்வாறே இன்றைய தினம் நீயும் (நம் அருளிருந்து) மறக்கப்படுகிறாய் என்று (அல்லாஹ்) கூறுவான்.

மேலும், மார்க்கச் சட்ட மேதைகள் ஒருவன் குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிப்பதற்கு முன்னால் அவனுடைய நகங்களையோ, மீசை போன்ற முடிகளையோ அகற்றக் கூடாது. அவ்வாறு செய்தால் மறுமையில் அந்த நகங்களும், முடிகளும் தீட்டுடன் அவன் முன் கொண்டு வந்து வைக்கப்படும் என்று கூறியுள்ளார்கள்.

உடல் உறுப்புக்கள் பற்றி மறுமையில் அவற்றின் நிலை பற்றி தெளிவாகக் கூறியிருக்கும் போது, அதை உலகிலே எப்படி தானம் செய்யலாம்?

 

நீங்கள் சுட்டிக்காட்டியுள்ள திருக்குர்ஆன் வசனங்கள் எடுத்துக் கொண்ட தலைப்புடன் சம்பந்தப்பட்டவை அல்ல.

மறுமையில் இறைவன் நம்மை எழுப்புவது குறித்துக் கூறும் வசனங்களாகும். நமது உடல் உறுப்புகளைத் தானம் செய்யக் கூடாது என்றோ, அவ்வாறு செய்தால் அவ்வுறுப்புக்கள் இல்லாமல் எழுப்பப்படுவார்கள் என்றோ அவ்வசனங்கள் கூறவில்லை. மறைமுகமாகவும் அந்தக் கருத்து அவ்வசனத்திற்குள் அடங்கியிருக்கவில்லை.

நீங்கள் சுட்டிக்காட்டிய தாஹா 125, 126 வசனங்களை எடுத்துக் கொண்டால் அது உங்களது வாதத்துக்கு எதிராக அமைந்துள்ளதைக் காணலாம்.

கண் பார்வையுடன் இவ்வுலகில் வாழ்ந்தவன் இறைவனின் போதனையை மறுத்தால் குருடனாக எழுப்பப்படுவான் என அவ்வசனம் கூறுகிறது. குருடனாக எழுப்பப்படுவதற்குக் காரணம் அவன் நல்லவனாக வாழவில்லை என்பது தானே தவிர இவ்வுலகில் கண்ணை இழந்திருந்தான் என்பது அல்ல.

கண் இருந்தவனைக் குருடனாக எழுப்பிட அவனது நடத்தை தான் காரணம். அது போல் கண்ணற்றவன் இவ்வுலகில் நல்லவனாக வாழ்ந்தால் அவன் குருடனாக எழுப்பப்பட மாட்டான். அவனும் மற்ற நல்ல முஸ்லிம்களைப் போல இறைவனைக் காண்பான்.

எனவே நல்லவர் கெட்டவர் என்ற அடிப்படையில் இறைவன் செய்யும் ஏற்பாட்டை அதற்குத் தொடர்பு இல்லாத காரியத்துடன் பொருத்தக் கூடாது.

மேலும் மறுமையில் நாம் எழுப்பப்படும் போது அனைத்து ஆண்களும் சுன்னத் செய்யப்படாதவர்களாகவே எழுப்பப்படுவோம் – புகாரி 3349, 3447, 4635, 4740, 6524 சுன்னத் மூலம் நம்மிடமிருந்து அப்புறப்படுத்திய பகுதிகளையும் சேர்த்து இறைவன் எழுப்புவான் என்பது எதை உணர்த்துகிறது?

இவ்வுலகில் எந்த உறுப்புக்களை இழந்தான் என்பதற்கும் மறுமையில் எழுப்பப்படும் கோலத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை இது உணர்த்தவில்லையா?

சில முகங்கள் மறுமையில் கறுப்பாக இருக்கும். சில முகங்கள் வெண்மையாக இருக்கும் எனவும் திருக்குர்ஆன் கூறுகிறது.

அமெரிக்கர்களின் முகம் வெண்மையாகவும், ஆப்ரிக்கர்களின் முகம் கறுப்பாகவும் இருக்கும் என்று இதற்கு அர்த்தமில்லை.

மாறாக நல்லடியாராக வாழ்ந்த ஆப்ரிக்கர் வெண்மையான முகத்துடன் வருவார். ஜார்ஜ் புஷ் இப்படியே மரணித்தால் கறுத்த முகமுடையவராக வருவார் என்பதே இதன் கருத்தாகும்.

இவ்வுலகின் தோற்றத்துக்கும், மறுமைக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.

நவீனமான காரியங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளைப் பொருத்த வரை நேரடியாக திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் கூறப்பட்டிருக்காது. ஆயினும், மறைமுகமாக ஏதேனும் தடை இருக்கிறதா? எனப் பார்க்க வேண்டும். தடை காணப்பட்டால் அதைக் கூடாது என அறியலாம்.

கண்தானம், இரத்ததானம், கிட்னி தானம் போன்ற காரியங்கள் கூடாது என்பதை மறைமுகமாகக் கூறும் எந்த ஒரு ஆதாரமும் நாமறிந்த வரை கிடைக்கவில்லை.

சுட்டிக் காட்டப்படும் ஆதாரமும் ஏற்புடையதாக இல்லை.

மார்க்கம் தடை செய்யாத ஒன்றை தடை செய்ய நமக்கு எந்த அதிகாரமும் இல்லை.

அடுத்தது நமது உறுப்புக்கள் அமானிதம் என்று கூறுகிறீர்கள். அமானிதம் தான். ஆனால், இந்த அமானிதத்தின் பொருள் வேறாகும்.

நான் உங்களிடம் ஒரு பொருளை அமானிதமாகத் தந்தால் அதை நீங்கள் உபயோகிக்கக் கூடாது. அதை அப்படியே திருப்பித் தர வேண்டும்.

ஆனால், அல்லாஹ் அமானிதமாகத் தந்த கண்களால் நாம் பார்க்கிறோம். காதுகளால் கேட்கிறோம். இன்னும் மற்ற உறுப்புகளையும் பயன்படுத்துகிறோம். அமானிதம் என்பதற்கு மற்ற அமானிதம் போன்று பொருள் கொண்டால் இவையெல்லாம் கூடாது எனக் கூற வேண்டும்.

இறைவன் தடை செய்த காரியங்களில் பயன்படுத்தக் கூடாது என்ற ஒரு நிபந்தனையுடன் அதைப் பயன்படுத்தலாம். இந்த அடிப்படையில் தான் அது அமானிதமாகிறது.

நம்மிடம் அல்லாஹ் காசு பணத்தைத் தருகிறான் என்றால் அதுவும் அமானிதம் தான். அதாவது அதை நாமும் பயன்படுத்தலாம். மற்றவர்களுக்கும் கொடுக்கலாம். தவறான வழியில் மட்டும் செலவிடக் கூடாது.

அது போல் தான் நமது உறுப்புக்களை நாமும் பயன்படுத்தலாம். நமக்கு எந்தக் கேடும் வராது என்றால் பிறருக்கும் கொடுக்கலாம். தப்பான காரியங்களில் அவற்றைப் பஸ்ன்படுத்தக் கூடாது. இது தான் அமானிதத்தின் பொருள்.

குர்ஆனினும், ஹதீஸிலும் தடை செய்யப்படாதவற்றைத் தவறா? சரியா? எனக் கண்டுபிடிக்க நமது மனசாட்சியையே அளவுகோலாகக் கொள்ள நபி(ஸல்) அனுமதியளித்துள்ளனர். (அஹ்மத் 17320)

உங்களுக்கு மிக விருப்பமான ஒருவர் ஆபத்தான நிலையில் இருக்கிறார். அவருக்கு இன்னொருவரின் இரத்தமோ, கிட்னியோ வைக்கப்பட்டால் தான் பிழைப்பார். இந்த நிலையில் உங்களுக்கு நெருக்கமானவர் என்றால் உங்கள் மனசாட்சி அதைச் சரி காணும்.

பெற்றுக் கொள்வதை மட்டும் சரி கண்டு விட்டு கொடுப்பதைச் சரி காணாமல் இருந்தால் அது நேர்மையான பார்வை இல்லை.

மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட காரியத்துக்கு இந்த அளவுகோலைப் பயன்படுத்துமாறு நாம் கூறுவதாக நினைக்க வேண்டாம். மார்க்கத்தில் தடுக்கப்பட்ட ஒன்றை நமது மனசாட்சி சரி கண்டாலும் அது தவறு தான்.

மார்க்கத்தில் தடுக்கப்படாத ஒன்றை நமது மனசாட்சி சரி கண்டால் அது சரியான அளவுகோல் தான் என்பதே அந்த நபிமொழியின் கருத்தாகும்.

குளிப்புக் கடமையானவர்கள் முடியையோ, நகங்களையோ வெட்டக்கூடாது என்று சில அறிஞர்கள் கூறினாலும் அதற்கு குர்ஆனிலோ, ஹதீஸ்களிலோ எந்த ஆதாரமும் இல்லை. எனவே தான் வேறு சில அறிஞர்கள் ஆதாரமற்ற இக்கருத்தை நிராகரித்துள்ளனர்.

எனவே உறுப்புக்கள் தானம் பற்றி தடை செய்யும் ஏற்கத்தக்க ஆதாரங்கள் வேறு இருந்தால் தெரிவியுங்கள். நாம் பரிசீலிக்கத் தயாராகவுள்ளோம்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *