இரவில் பிரத்யேகமாக ஓத வேண்டிய சூராக்கள் எவை?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் தபாரகல்லதீ என்று துவங்கும் அல்முல்க் 67 ஆவது அத்தியாயத்தையும், அஸ்ஸஜ்தா என்ற 32 வது அத்தியாயத்தையும் ஓதாமல் உறங்க மாட்டார்கள் என்ற கருத்தில் ஒரு செய்தி ஹாகிம், அஸ்ஸுனனுல் குப்ரா மற்றும் ஷுஃபுல் ஈமான் ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அலிஃப் லாம் மீம் (என்று துவங்கும் 32 ஆவது) அத்தியாயத்தையும், தபாரகல்லதீ (என்று துவங்கும் 67 ஆவது) அத்தியாயத்தையும் ஓதாமல் உறங்க மாட்டார்கள்.
நூல் : அஸ்ஸுனனுல் குப்ரா
இந்த செய்தியில் நபித்தோழர் ஜாபிர் (ரலி) அவர்கள் உட்பட ஸஃப்வான், அபுஸ்ஸுபைர், ஸுஹைர், ஹசன் மற்றும் அபூதாvuuத் ஆக மொத்தம் ஆறு நபர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்பதால் இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானதாகும்.
எனவே இரவில் உறங்கச் செல்லும் முன் இவ்விரு அத்தியாயங்களை ஓதிக் கொள்வதற்கு நபிமொழியில் ஆதாரம் உள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது படுக்கைக்கு உறங்கச் சென்றால் ஒவ்வோர் இரவிலும் தமது உள்ளங்கைகளை இணைத்து அதில் குல் ஹுவல்லாஹு அஹது, குல்அவூது பிரப்பில் ஃபலக், குல்அவூது பிரப்பின்னாஸ் ஆகிய சூராக்களை ஓதி ஊதிக் கொள்வார்கள். பிறகு தம் இரு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தமது உடலில் இயன்ற அளவில் தடவிக் கொள்வார்கள். பிறகு தமது உடலின் முன் பகுதியில் கைகளால் தடவிக் கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி 5017
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது ஆயத்துல் குர்ஸியை ஓதுங்கள். (அவ்வாறு ஓதினால்) உங்களுடன் பாதுகாவலர் (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார். காலை நேரம் வரும் வரை ஷைத்தான் உங்களை நெருங்கவே மாட்டான்.
அறிவிப்பவர் : அபூஹீரைரா (ரலி)
நூல் : புகாரி 3275
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்பகரா அத்தியாயத்தின் இறுதி இரண்டு வசனங்களை யார் இரவு நேரத்தில் ஓதுகின்றாரோ அந்த இரண்டும் அவருக்கு போதுமானதாக ஆகிவிடும் ,
அறிவிப்பவர் : அபூ மஸ்வூத் (ரலி)
நூல் : புகாரி 4008