இயேசு கடவுளின் குமாரரா?
இவ்வசனங்கள் (3:49, 3:59, 4:171, 4:172, 5:17, 5:72, 5:73, 5:116, 9:31, 19:30, 43:59, 43:64) இயேசு கடவுளின் குமாரனல்லர்; கடவுளின் தூதர்தான் என்று கூறுகின்றன. இயேசுவைக் கடவுளின் குமாரன் என்றும் கடவுள் என்றும் கிறித்தவர்கள் கூறுவதை திருக்குர்ஆன் ஒப்புக் கொள்ளவில்லை.
இயேசு தன்னைக் கடவுள் என்று ஒருபோதும் கூறியதில்லை. தன்னைப் படைத்த இறைவனை வணங்க வேண்டும் என்றுதான் அவர் போதனை செய்தார். இயேசுவுக்குப் பின்னால் வந்தவர்கள் தான் இயேசு கடவுளின் குமாரன் என்ற கொள்கையை உருவாக்கி இயேசுவின் கொள்கைக்கு எதிராக நடந்து விட்டனர் என்பது இஸ்லாத்தின் நிலைபாடாகும்.
இந்தக் கருத்தை அழுத்தம் திருத்தமாகச் சொல்லும் வசனங்கள் பைபிளில் இன்றளவும் எஞ்சியிருக்கின்றன.
ஒரே கடவுளாகிய கர்த்தர் என்னையன்றி உனக்கு வேறு தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.
யாத்திராகமம் 20:3
கர்த்தரே தேவன். அவரையல்லாமல் வேறொருவரும் இல்லை என்பதை நீ அறியும்படிக்கு இது உனக்குக் காட்டப்பட்டது.
உபாகமம் 4:35
இஸ்ரவேலே கேள்! நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்மாவோடும் உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக! இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக் கடவது.
உபாகமம் 6:4-6
நானே தேவன்; வேறொருவரும் இல்லை; நானே தேவன்; எனக்குச் சமானமில்லை (என்று கர்த்தர் கூறினார்.)
ஏசாயா 46:9
ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன். பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன். நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்து முடித்தேன்.
யோவான் 17:3,4
போதகரே! நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானதென்று கேட்டான். இயேசு அவனை நோக்கி உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்மாவோடும் உன் முழு மனத்தோடும் அன்பு கூர்வாயாக. இது முதலாம் பிரதான கற்பனை என்றார்.
மத்தேயு 22:36-38
அவர் அவளை நோக்கி ‘உனக்கு என்ன வேண்டும்’ என்று கேட்டார். அதற்கு அவள் ‘உம்முடைய ராஜ்யத்தில் என் குமாரராகிய இவ்விரண்டு பேரில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும் ஒருவன் உமது இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி அருள் செய்ய வேண்டும்’ என்றாள்.
மத்தேயு 20:21
இதற்கு இயேசு கூறிய பதிலென்ன? நான் அவ்வாறு அருளுவேன்’ என்று கூறவில்லை.
அவர் கூறிய பதில் இது தான்:
அவர் அவர்களை நோக்கி ‘என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள். ஆனாலும் என் வலது பாரிசத்திலும், என் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல் மற்றொருவருக்கும் அதை அருள்வது என் காரியமல்ல’ என்றார்.
மத்தேயு 20:23
இயேசு தன்னை மனுஷகுமாரன் என்று அடிக்கடி குறிப்பிட்டு வந்துள்ளார்.
பார்க்க : மத்தேயு 8:20, 9:6, 9:8, 16:13, 17:22, 17:12, 17:9, 19:28, 20:18, 20:28, 24:27, 26:24, 26:45
இயேசு கடவுளின் மகன் அல்ல. மனிதனின் மகன் தான் என்று மேற்கண்ட பைபிள் வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன.
கர்த்தரின் குமாரன் என்று இயேசு சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளார். இதன் பொருள் கடவுளின் கட்டளைப்படி நடப்பவர் என்பது தான். கடவுளுக்குப் பிறந்தவர் என்பதல்ல. ஏனெனில் இயேசு மட்டுமின்றி இன்னும் பலர் கடவுளின் குமாரர்கள் என்று பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளனர். அந்த வசனங்களை இப்படித்தான் கிறித்தவர்கள் புரிந்து கொள்கின்றனர்.
இஸ்ரவேல் கடவுள் குமாரன் என்று யாத்திராகமம் 4:22,23 வசனங்களும் எரெமியா 31:9 வசனமும் கூறுகின்றன.
தாவீது கடவுள் குமாரன் என்று சங்கீதம் 2:7 வசனமும், முதலாம் நாளாகமம் 17:13 வசனமும் கூறுகின்றன.
சாலமோன் கடவுள் குமாரன் என்று முதலாம் நாளாகமம் 22:10 வசனம் கூறுகிறது.
எப்ராயீம் கடவுள் குமாரன் என்று எரேமியா 31:9 வசனமும், சாமுவேல் கடவுள் குமாரன் என்று இரண்டாம் சாமுவேல் 7:14 வசனமும் கூறுகின்றன.
எல்லா மனிதர்களுமே கடவுளின் குமாரர்கள் என்றும் பைபிளில் கூறப்படுகின்றனர். பார்க்க : உபாகமம் 14:1, சங்கீதம் 68:5, மத்தேயு 6:14,15, மத்தேயு 5:9, மத்தேயு 5:45, மத்தேயு 7:11, மத்தேயு 23:9, யோவான் 1:12, லூக்கா 6:35
எனவே இயேசு கடவுளுக்கு மகன் என்ற கொள்கை பைபிளின் போதனைக்கே எதிரானதாகும்.
‘இயேசு மற்ற மனிதர்களைப் போல் தந்தைக்குப் பிறக்கவில்லை; இதனால் அவர் கடவுளுக்கே பிறந்தவர்; எனவே அவரும் கடவுள் தாம்’ என்ற வாதமும் பைபிளுக்கு எதிரானது.
தந்தையின்றிப் பிறந்தார் என்ற சொல்லே இயேசு கடவுளில்லை; பிறந்தவர் தாம் – மனிதர் தாம் – என்பதை நன்கு விளக்குகிறது. ‘தந்தையின்றிப் பிறந்தார்’ என்ற கூற்றில் ‘தந்தையின்றி’ என்ற வார்த்தைக்குக் கூட உரிய அழுத்தத்தைக் கொடுத்தால் இயேசு கடவுள் கிடையாது என்பது கிறித்தவர்களுக்குத் தெரியவரும். ‘தாயின்றிப் பிறக்கவில்லை’ என்ற கருத்தையே ‘தந்தையின்றி’ என்ற வார்த்தை தருகிறது. அவர் ஒரு தாய்க்குப் பிறந்தார் என்று தெளிவாகவும் பைபிள் கூறுகிறது.
மேலும் தந்தையில்லாதவர்கள் ஏசு மட்டுமின்றி இன்னும் பலர் இருந்துள்ளதாகவும் பைபிள் கூறுகிறது.
ஆதாம் தாயும் தந்தையுமின்றி படைக்கப்பட்டதாக லூக்கா 3:38 வசனம் கூறுகிறது.
யோவாளும் அவ்வாறே தாயும் தந்தையும் இன்றி படைக்கப்பட்டதாக ஆதியாகமம் 2:21,22 கூறுகிறது.
மெல்கிசேதேக்கு என்பவர் தாயும் தந்தையுமில்லாமல் உருவானார் என்று எபிரேயர் 7:3 வசனம் கூறுகிறது.
அதுபோல் இயேசு சில அற்புதங்கள் செய்ததால் அவர் கடவுளின் குமாரராக மாட்டார். ஏனெனில் இன்னும் பலர் இவரை விடப் பெரிய அற்புதங்கள் செய்துள்ளதாக பைபிளில் காணலாம்.
இறந்தவரை எலியா உயிர்ப்பித்ததாக முதலாம் ராஜாக்கள் 17:22, எலிஷா உயிர்ப்பித்ததாக இரண்டாம் ராஜாக்கள் 4:34, 13:21 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
இன்னும் பலர் பல அற்புதங்கள் நிகழ்த்தியதாக முதலாம் ராஜாக்கள் 17:13-16, 17:6, இரண்டாம் ராஜாக்கள் 4:42-44, 4:2-6, 5:10, 5:14, 6:17, 6:20, 6:6, யாத்திராகமம் 14:22 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
ஏதோ சில சமயங்களில் கடவுள் அனுமதிக்கும்போது இயேசு அற்புதங்கள் நிகழ்த்தியுள்ளார். ஆயினும் அவர் முழுக்க முழுக்க மனிதராகவே இருந்திருக்கிறார். மனிதனுடைய பலவீனங்களான பசி, அறியாமை, ஏமாறுதல், அர்த்தமற்ற கோபம் ஆகிய பலவீனங்கள் நீங்கப் பெற்றவராக அவர் இருக்கவில்லை என்பதை பைபிளை வாசிக்கும் யாரும் அறிந்து கொள்ள முடியும்.
அற்புதங்கள் செய்வது கடவுளின் மகன் என்பதற்கான சான்றாகாது என்றும் இயேசுவே சொல்லி இருக்கிறார்.
அந்நாளில் அனேகர் என்னை நோக்கி, ‘கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினால் தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா?’ என்பார்கள். அப்பொழுது நான், ‘ஒருக்காலும் உங்களை நான் அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள்’ என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
மத்தேயு 7:22,23
ஏனெனில் கள்ளக்கிறிஸ்துகளும், கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும், அற்புதங்களையும் செய்வார்கள்.
மத்தேயு 24:24
எனவே இயேசு அவர்கள் செய்த பிரச்சாரமும், அவர்கள் கடைப்பிடித்த கொள்கையும் கடவுள் ஒருவரே அவருக்கு மகன் யாரும் இல்லை என்ற கொள்கை தான்.
மதகுருமார்கள் தமக்குக் கடவுளுக்கு நிகரான மரியாதை கிடைக்க வேண்டும் என்பதற்காகவே பிதா சுதன் என்று கூறி பின்னர் பரிசுத்த ஆவி என்று முக்கடவுள் கொள்கையை உண்டாக்கினார்கள். எங்கள் மேல் பரிசுத்த ஆவி இறங்கியுள்ளதால் நாங்களும் கடவுள்களே என்ற கொள்கையை இயேசுவுக்குப் பின் உருவாக்கிக் கொண்டனர்