இமாம்களின் துணையின்றி இஸ்லாத்தை அறிய முடியாதா?
திருக்குர்ஆனையும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளையும் மட்டுமே ஒரு முஸ்லிம் பின்பற்ற வேண்டும். நபித்தோழர்கள், இமாம்கள், பெரியார்கள் உள்ளிட்ட யாரையும் பின்பற்றக் கூடாது என்பதற்கான ஆதாரங்களை இந்தச் சிறப்பு மலரில் பல்வேறு தலைப்புகளில் பார்த்து வருகிறோம்.
ஆனால் சுன்னத் வல் ஜமாஅத்தினர் என்று தங்களைக் கூறிக் கொள்வோர், மத்ஹபுகளின் மூலமாகவே இஸ்லாத்தைப் புரிந்து கொள்ள முடியும் என்றும், மத்ஹபு இமாம்களின் துணையின்றி குர்ஆன் ஹதீஸிலிருந்து நேரடியாக நாம் ஆய்வு செய்து பின்பற்றக் கூடாது என்றும் கூறுகின்றனர்.
மத்ஹபுகளைப் பின்பற்றக் கூடாது என்று நாம் ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டும் போது சில எதிர்வாதங்களை மத்ஹபின் காவலர்கள் எடுத்து வைப்பது வழக்கம்.
அதில் ஒன்று தான், குர்ஆன், ஹதீஸை நாம் நேரடியாக ஆய்வு செய்ய முடியாது என்ற வாதமாகும்.
இந்த வாதம் பல காரணங்களால் தவறாகும்.
இப்படி வாதிடுவோர் தமது வாதத்தை தாமே மறுத்துக் கொள்கின்றனர் என்பது முதல் காரணமாகும்.
மத்ஹபை நம்பக் கூடியவர்கள் உலகில் ஒரே ஒரு மத்ஹப் தான் உள்ளது எனக் கூறுவதில்லை. நான்கு மத்ஹபுகள் உள்ளன என்பதுதான் அவர்களின் வாதம். இந்த நான்கு மத்ஹபுகளில் ஒன்றைப் பின்பற்ற வேண்டும் என்பது தான் இவர்களின் கொள்கை. இதன் கருத்து என்ன? இருக்கும் நான்கு மத்ஹபுகளையும் ஆய்வு செய்து அதில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதுதான் இதன் கருத்து.
நான்கில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும் என்று கூறும் போதே மத்ஹபுவாதிகளும் ஒரு வகையில் ஆய்வுதான் செய்கிறார்கள். நான்கு மத்ஹபுகளையும் சீர்தூக்கிப் பார்த்து அதில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும் என்றால், அதை அனைவரும் செய்யமுடியும் என்றால் ஹதீஸ்கள் அடிப்படையில் ஏன் ஆய்வு செய்ய முடியாது?
உலகில் ஒரே ஒரு மத்ஹப் இருந்து, அந்த ஒரு மத்ஹபிலும் கருத்து வேறுபாடு இல்லாமல் ஒரு விஷயத்தில் ஒரு ஃபத்வா மட்டும் இருக்குமானால் அப்போது தான் இவர்கள் ஆய்வு செய்யாமல் மத்ஹபைப் பின்பற்றுகிறார்கள் என்று ஆகும்.
ஆனால் நான்கு மத்ஹபுகள் உள்ளதாகவே மத்ஹப்வாதிகள் கூறுகின்றனர். ஒவ்வொரு மத்ஹபிலும் இமாம்கள் மத்தியில் மாறுபட்ட தீர்ப்புக்கள் உள்ளன எனவும் கூறுகிறார்கள்.
ஒரு மத்ஹபின் அறிஞர்கள் மத்தியில் அனேக முரண்பாடுகளும், மாறுபட்ட ஃபத்வாக்களும் உள்ளன. அந்த ஃபத்வாக்களில் ஒன்றைத் தேர்வு செய்து அபூஹனீபா சொன்னது சரியில்லை. அபூயூசுப் சொன்னது தான் சரி என்று ஒன்றை மறுத்து மற்றொன்றைத் தேர்வு செய்கின்றனர். இதிலும் ஆய்வு அடங்கியுள்ளது.
ஒரு ஊரில் ஒரு மத்ஹபைச் சேர்ந்த ஒரு இமாம் கொடுக்கும் ஃபத்வாவுக்கு மாற்றமாக அதே ஊரைச் சேர்ந்த அதே மத்ஹபைச் சேர்ந்த இன்னொரு இமாம் வேறு ஃபத்வா கொடுக்கிறார். அந்த ஊரைச் சேர்ந்த அந்த மத்ஹபைப் பின்பற்றும் மக்கள் அவ்விரண்டில் ஒன்றை ஏற்று மற்றொன்றை மறுக்கின்றனர்.
ஒரு மத்ஹபைச் சேர்ந்த இரு இமாம்கள் கூறுவதில் ஒன்றை ஏற்று மற்றொன்றை மறுக்கும் அளவுக்கு பொதுமக்களே ஆய்வு செய்கிறார்கள் என்பதற்கு இது ஆதாரமாகும்.
குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுவதை விட்டு விலகுவதற்கு இவர்கள் எடுத்துக் காட்டும் இந்தக் காரணம் மத்ஹபைப் பின்பற்றுவதால் நீங்கவில்லையே?
அப்படியானால் மத்ஹபைப் புறக்கணித்து விட்டு யார் சொல்வது குரான் ஹதீசுக்கு முரணில்லாமல் உள்ளது என்று ஆய்வு செய்ய முடியாதா?
ஒரு மார்க்க விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் குழம்ப வேண்டிய அவசியமில்லை. இறைவன் நமக்கு வழங்கிய அறிவைப் பயன்படுத்தி நடுநிலையோடு நம்மால் இயன்ற அளவு சிந்திக்க வேண்டும். எக்கருத்து ஏற்புடையதாக உள்ளதோ அதை ஏற்க வேண்டும்.
மனோ இச்சைக்கு இடம் கொடுக்காமல் நியாயமாகச் சிந்தித்தாலே பெரும்பாலும் சரியான முடிவை பாமர மக்களாலும் எடுக்க முடியும். இவ்வாறு செயல்படும் போது சில நேரங்களில் தவறான முடிவை சரி என்று கருதவும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு தவறிழைப்பது மனித இயல்பு என்பதால் இறைவன் இதற்குக் குற்றம் பிடிக்க மாட்டான். மாறாக மார்க்க விஷயத்தில் நாம் செய்த முயற்சிக்காக ஒரு நன்மையை வழங்குகின்றான். சரியான முடிவு எடுத்தால் இரண்டு நன்மைகள் வழங்குகின்றான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீதிபதி தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து சரியான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு. அவர் தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து தவறான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு ஒரு நன்மை உண்டு.
அறிவிப்பவர் : அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)
நூல் : புகாரி 7352
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நபியவர்களின் ஒரு கட்டளையைப் புரிந்து கொள்வதில் நபித்தோழர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இவ்வாறு கருத்து வேறுபாடு கொண்டதற்காக அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டிக்கவில்லை.
அகழ்ப் போர் (முடிந்து வந்த) தினம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “பனூ குறைழா குலத்தினர் வசிக்குமிடத்தை நீங்கள் அடையும் வரை (உங்களில்) எவரும் அஸ்ருத் தொழுகையைத் தொழ வேண்டாம்‘’ என்று கூறினார்கள். வழியிலேயே அஸ்ரு(த் தொழுகை) நேரத்தை அவர்கள் அடைந்தனர். அப்போது சிலர், “பனூ குறைழாக் குலத்தினரை அடையும் வரை நாம் அஸ்ருத் தொழ வேண்டாம்‘’ என்று கூறினர். வேறு சிலர், “(தொழுகை நேரம் தவறிப் போனாலும் தொழ வேண்டாம் என்ற) அந்த அர்த்தத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை; (“வேகமாக அங்கு போய்ச் சேருங்கள்’ என்ற கருத்தில் தான் இந்த வார்த்தையைக் கூறினார்கள்) எனவே, நாம் தொழுவோம்‘’ என்று கூறினர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இரு சாரார் குறித்தும் தெரிவிக்கப்பட்ட போது அவர்களில் எவரையும் அவர்கள் குறை கூறவில்லை.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி(
நூல் : புகாரி 4119
தூய எண்ணத்துடன் இருவர் ஒரு ஹதீஸை அணுகி அதைப் புரிந்து கொள்வதில் அவ்விருவரும் முரண்பட்டால் இருவருமே குற்றவாளிகளாக மாட்டார்கள் என்பதற்கு இந்த ஹதீஸ் ஆதாரமாக அமைந்துள்ளது.
திருக்குர்ஆனையோ, ஹதீஸ்களையோ ஆய்வு செய்யாமல் இரு இமாம்களைப் பின்பற்றி மத்ஹப் என்ற பெயரில் முரண்பட்டு நடப்பதற்கு இது ஆதாரமாகாது.
எல்லோருக்கும் அரபுமொழி தெரியாது!
அரபுமொழி தெரியாதவர்களுக்கு குர்ஆன் விளங்குமா? சாதாரணமானவர்களால் குர்ஆன், ஹதீஸை எப்படி விளங்க முடியும்? மொழி பெயர்ப்புகளைத்தானே நம்ப வேண்டியுள்ளது ?
மத்ஹபுகளை நியாயப்படுத்துவோர் எடுத்து வைக்கும் அர்த்தமற்ற வாதங்களில் இதுவும் ஒன்றாகும்.
திருக்குர்ஆனையும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையுடையவர்களுக்குக் கூட மயக்கத்தை ஏற்படுத்தும் பொய்யான வாதமாகும் இது.
திருக்குர்ஆனும், ஹதீஸ்களும் அரபு மொழியிலேயே அமைந்துள்ளன என்பது உண்மைதான். அரபு மொழி அறியாத மக்கள் மொழி பெயர்ப்புகளைத்தான் நம்பவேண்டியுள்ளது என்பதும் உண்மைதான்.
இந்தக் காரணங்களுக்காகத் தான் மத்ஹபுகள் அவசியம் என்றால் மத்ஹபுடைய இமாம்கள் தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ் மொழியில் தான் சட்டங்களை எழுதினார்களா?
அபூஹனீபா தவிர மூன்று இமாம்களும் அரபி மொழியைத் தமது தாய் மொழியாகக் கொண்டவர்களே! அவர்கள் எழுதிய அல்லது எழுதியதாகச் சொல்லப்படும் நூல்கள் யாவுமே அரபி மொழியில் அமைந்தவையே.
பொதுமக்களுக்கு அரபுமொழி தெரியாததால் அவர்களால் திருக்குர்ஆனையும், ஹதீஸ்களையும் விளங்க முடியாது என்ற வாதம் உண்மை என்றால் இவர்கள் மத்ஹபிலும் இருக்கக் கூடாது.
மத்ஹபுகளின் இமாம்கள் அரபுமொழியில் தான் சட்டங்களை எழுதினார்கள் என்பதாலும், அந்த இமாம்கள் எழுதியதை மொழிபெயர்ப்புகளை வைத்துத் தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதாலும், அந்த இமாம்களும் அரபியராக இருந்ததனாலும் மத்ஹபுகளும், அதன் சட்டங்களும் விளங்காது என்று இவர்கள் கூறியிருக்க வேண்டும்.
தமிழ் நாட்டில் பிறந்த யாரையாவது இமாமாக ஏற்றிருக்க வேண்டும் அப்படிச் செய்யவில்லையே அது ஏன்?
இதைத் தான் நாம் சிந்திக்க வேண்டும்.
மத்ஹபுடைய மூல நூல்கள் அரபு மொழியில் இருந்தாலும் அதைத் தமிழாக்கம் செய்தால் மக்களுக்குப் புரியும் என்று இவர்கள் நம்பியதால் தானே மத்ஹபுகளைப் பின்பற்றுவதாகக் கூறுகின்றார்கள்.
அரபுமொழியில் எழுதப்பட்ட மத்ஹபுச் சட்டங்களைத் தமிழாக்கம் செய்தால் விளங்க முடியும் என்றால் இந்த நியாயம் குர்ஆன், ஹதீஸ் விஷயத்தில் பொருந்தாமல் போனது ஏன்?
மத்ஹபுகள் மீது இவர்களுக்கு வெறி இருப்பதாலும், குர்ஆன், ஹதீஸ் இவார்களுக்குத் தேவையற்றதாக இருப்பதாலுமே இந்தப் பாரபட்சமான முடிவுக்கு வருகின்றனர்.
தவறானவையும், சரியானவையும் கலந்துள்ள மனிதர்களின் அரபுமொழி வாசகங்கள் தமிழாக்கம் செய்யப்பட்டால் விளங்க முடியும் என்றால் தவறே இல்லாமல், முற்றிலும் சரியாகவே உள்ள குர்ஆன், ஹதீஸ்கள் தமிழாக்கம் செய்யப்படும் போது ஏன் விளங்காது?
மொழிபெயர்ப்புகளில், மொழி பெயர்த்தவர்களின் கவனக் குறைவினாலோ, வேறு காரணங்களினாலோ சில தவறுகள் ஏற்படலாம் என்பதை நாம் மறுப்பதற்கில்லை. குர்ஆன், ஹதீஸ் மட்டுமின்றி எல்லா மொழிமாற்றத்தின் போதும் இது ஏற்படத்தான் செய்யும்.
அரபிமொழி அறியாதவர்களால் சிலவேளை இதைக் கண்டுபிடிக்கப்படாமல் போகலாம். அதற்காக குர்ஆன், ஹதீஸை விட்டு விட முடியுமா? விட்டு விட வேண்டும் என்றால் மத்ஹபுகள் உள்பட எந்த மொழி மாற்றத்தையும் விட்டாக வேண்டும்.
நம்மால் இயன்றளவு முயற்சித்துப் பார்த்துவிட்டு மொழி பெயர்ப்பை நாம் நம்புகிறோம். நாம் அறியாத வகையில் தவறுகள் நிகழ்ந்திருந்தால் அதை அல்லாஹ் மன்னிப்பான். வேண்டுமென்றே குர்ஆன், ஹதீஸை அலட்சியம் செய்வதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்.
இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். இந்தக் கருத்துடையவர்கள் தாங்கள் சொற்பொழிவுகளில், குத்பாக்களில், புத்தகங்களில் குர்ஆன், ஹதீஸ் மொழிபெயர்ப்புகளை அவ்வப்போது பயன்படுத்துகின்றார்களே விளங்காத குர்ஆன், ஹதீஸை ஏன் மக்களிடம் கூற வேண்டும்.
மக்களிடம் வசூல் வேட்டை நடத்துவதற்கு மட்டும் குர்ஆன், ஹதீஸ்களைக் கூறினால் விளங்கும்; மற்ற விஷயங்களுக்கு விளங்காதா?
நாம் எப்படி திருக்குர் ஆனுக்கு தமிழாக்கம் வெளியிட்டுள்ளோமோ அது போல் குர்ஆன் விளங்காது என்ற கொள்கை உடையவர்கள் ஏன் திருக்குர்ஆன் தமிழாக்கம் வெளியிட்டனர் என்பதும் கவனிக்கத்தக்கது..
இந்த வாதம் ஷைத்தானின் மாயவலை. இதில் சிக்கிக் கொள்ள வேண்டாம்.
இமாம்களை விட நாம் நன்றாக அறிய முடியுமா?
இமாம்கள் சிறந்த காலத்தில் வாழ்ந்தவர்கள். நபியின் காலத்துக்கு நெருக்கமானவர்கள். அவர்களைப் போல் நம்மால் திருக்குர்ஆனையும் ஹதீஸ்களையும் விளங்க முடியாது என்பதால் மத்ஹபுகளைத் தான் பின்பற்ற வேண்டும் என்றும் வாதிடுகின்றனர்.
உங்களில் சிறந்தவர்கள் என் காலத்தவர்கள். பின்னர் அவர்களை அடுத்து வரக் கூடியவர்கள். அதன் பின்னர் அவர்களை அடுத்து வரக் கூடியவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும் தொடர்ந்து உங்களுக்குப் பின் நாணயமாக நடக்காத மோசடி செய்பவர்களும், சாட்சியம் அளிக்க அழைக்கப்படாமலே சாட்சி கூறுபவர்களும், நேர்ச்சை செய்து அதை நிறைவேற்றாதவர்களும் தோன்றுவார்கள். அவர்களிடம் பகட்டு வெளிப்படும் எனவும் கூறினார்கள்.
நூல் : புகாரி 2651, 3650, 6428, 6695
தமது காலத்தவரையும், அதற்கு அடுத்த காலத்தவரையும் மிகச் சிறந்த சமுதாயம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் நபித்தோழர்களை நாம் பின்பற்றலாம் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
இந்த நபிமொழி ஆதாரப்பூர்வமானது என்பதில் சந்தேகம் இல்லை. இதன் பொருள் என்ன என்பதை இதன் இறுதியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.
அதாவது அந்தச் சமுதாயத்தில் நாணயம், நேர்மை, வாக்கை நிறைவேற்றுதல், வலியச் சென்று எதிலும் தலையிடாமல் இருப்பது போன்ற நற்பண்புகள் அதிக அளவில் இருக்கும். பிந்தைய சமுதாயத்தில் அது குறைந்து விடும் என்பது தான் அந்த விளக்கம்.
நபித்தோழர்கள் மற்றும் அதற்கடுத்த காலத்து மக்களின் சிந்தனையிலும், தீர்ப்புகளிலும், முடிவுகளிலும், ஆய்வுகளிலும் எந்தத் தவறும் ஏற்படாது என்பதால் அவர்கள் சிறந்தவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை.
அவர்களின் நாணயம், நேர்மை காரணமாக சிறந்தவர்கள் என்று தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நாணயமாகவும், நேர்மையாகவும் உள்ளவர்களாக இருப்பதால் அவர்களின் சிந்தனையில் தவறே ஏற்படாது என்று அறிவுடையோர் கூற மாட்டார்கள்.
மேலும் வஹீயை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்று நாம் எடுத்துக் காட்டிய ஏராளமான ஆதாரங்களுக்கு முரணில்லாத வகையில் தான் இதை விளங்க வேண்டும்.
இமாம்கள் காலத்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நெருக்கமானவர்களாக இருந்தாலும் மார்க்கத்தை அறிந்து கொள்ளவும், ஆராய்ச்சி செய்யவும் அவர்களை விட பிற்காலத்தவர்களுக்குத் தான் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
மார்க்கத்தைச் சரியான முறையில் அறிந்து கொள்வதற்கு மார்க்க ஆதாரங்கள் பரவலாக்கப்பட்டும் எளிதில் கிடைக்கும் வகையிலும் முழுமையாகத் திரட்டப்பட்டும் இருக்க வேண்டும்.
ஆதாரங்கள் சிதறி, முழுமையாகத் திரட்டப்படாமல் இருந்தாலோ, எளிதில் கிடைக்காமல் இருந்தாலோ ஒவ்வொருவரும் தமக்குக் கிடைத்த ஆதாரங்களின் அடிப் படையில் தான் முடிவு செய்வார். ஆதாரம் கிடைக்காத போது சுயமாக முடிவு எடுப்பது தவிர அவருக்கு வேறு வழி இல்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ் நாளில் மக்களுக்குக் கூறிய அறிவுரைகள் அனைத்தையும் எந்த நபித்தோழரும் அறிந்திருக்கவில்லை. ஒரு நபித்தோழருக்குத் தெரிந்த ஹதீஸ் ஏராளமான நபித்தோழர்களுக்குத் தெரியாமல் இருந்தது. நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்குப் பின்னர் நபித்தோழர்கள் பல பகுதிகளுக்கும் சென்றார்கள். அவரவர் தான் தெரிந்து வைத்திருந்த ஹதீஸ்களை அந்தப் பகுதி மக்களுக்கு தேவைக்கேற்ப அறிவித்தார்கள்.
ஒரு நபித்தோழருக்கு நூறு ஹதீஸ்கள் தெரியும் என்று வைத்துக் கொள்வோம். அவர் பாக்தாத் நகருக்குச் சென்று குடியேறினால் அந்த நூறு ஹதீஸ்களை மட்டும் தான் அவரால் அங்கே அறிவிக்க முடியும். அதைக் கூட அந்த ஊரில் உள்ள அனைவரும் அறிய மாட்டார்கள்.
நபித் தோழர்கள், இமாம்கள் காலத்தில் ஹதீஸ்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு இருக்கவில்லை. எனவே இந்த நிலையில் நபித் தோழர்கள் தாம் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் அனைத்து ஹதீஸ்களையும் ஆய்வு செய்து தேடிப் பார்த்து தீர்ப்பளிக்கும் வாய்ப்பை பெறவே இல்லை. எனவே தான் அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழியாக எதை அறிந்தார்களோ அதைப் பின்பற்றினார்கள். மற்ற விஷயங்களில் தாமாக முடிவு செய்வது மட்டுமே அவர்கள் முன் இருந்த ஒரே வழி என்பதால் அதைத் தான் அவர்கள் செயல்படுத்த முடிந்தது.
ஆனால் இன்றைக்கு ஒவ்வொரு வீடுகளிலும் ஒவ்வொரு நபரும் தமக்கென குர்ஆனை வைத் துள்ளோம்.
ஹதீஸ்கள் அனைத்தும் பாடம் வாரியாகத் தொகுக்கப்பட்டு நூல்களாக உள்ளன. அனைவரிடமும் அனைத்து நூல்களும் இல்லாவிட்டாலும் நூலகங் களிலும், மதரஸாக்களிலும் அவை உள்ளன.
சாப்ட்வேர்களாகவும் அனைத்தும் வந்துள்ளன.
எந்தக் கடினமான கேள்விக்கும் அரை மணி நேரம் செலவிட்டு அதற்கான ஆதாரங்களைக் கண்டு பிடிக்கும் அளவுக்குத் தொழில் நுட்பம் வளர்ந்துள்ளது.
இந்தக் காலத்தில் நபித் தோழர்கள் வாழ்ந்தால் நம்மை விடச் சிறப்பாக இந்த வசதியைப் பயன்படுத்தி சரியான ஃபத்வாக்களை வழங்குவார்கள். அவர்கள் காலத் தில் நாம் இருந்தால் அவர்களிடம் ஏற்பட்ட தவறுகளை விட அதிகத் தவறு செய்பவர்களாக நாம் இருப்போம்.
இந்த நிலை ஏற்படும் என்பதால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இறுதிப் பேருரையில் “எனது செய்திகளை வந்தவர்கள் வராதவருக்கு எடுத்துச் சொல்லுங்கள். எடுத்துச் சொல்பவரை விட யாரிடம் எடுத்துச் சொல்லப்படுகிறதோ அவர்கள் அதனை நன்கு பேணிப் பாதுகாப்பவர்களாக இருப்பார்கள் என்று முன்னறிவிப்பு செய்தனர்.
புகாரி : 1741, 7074
உலகம் அழியும் வரை என்ன நடக்கும் என்பதையெல்லாம் அறிந்து வைத்துள்ள இறைவனால் தரப்பட்டதே இஸ்லாம். உலகம் அழியும் வரை தோன்றும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு சொல்லக் கூடிய வகையில் குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
அந்தந்த காலத்தை அடைபவர்களால் தான் அதன் சரியான பொருளை அறிந்து கொள்ள முடியும்.
எனவே இது போன்ற விஷயங்களில் நபித்தோழர்கள் புரிந்து கொள்ளாத பல விஷயங்களை இன்று நாம் ஆய்வு செய்து புரிந்து கொள்ள முடியும்.
சந்திர மண்டலத்தில் கிப்லாவை எவ்வாறு நோக்குவது? செயற்கை முறையில் கருத்தரிப்பது கூடுமா? குடும்பக் கட்டுப்பாடு செய்யலாமா? என்பன போன்ற கேள்விகளை அன்றைக்கு அவர்களிடம் கேட்டால் இதெல்லாம் நடக்குமா என்ன? என்பது தான் அவர்களின் பதிலாக இருக்கும்.
இன்று நாம் பல நவீன பிரச்சனைகளை நேரடியாகவே சந்திப்பதால் இதற்கெல்லாம் தீர்வு தரும் வகையில் நிச்சயம் குர்ஆனிலும், நபிவழியிலும் வாசகம் இடம் பெற்றிருக்கும் என்ற நம்பிக்கையுடன் ஆய்வு செய்தால் அதற்கான விடை கூறக் கூடிய ஆதாரங்களைப் பார்க்க முடிகின்றது.
ஆழ்கடலில் அலைகள் உள்ளன.
வானத்தைக் கூரையாக ஆக்கியுள்ளோம்.
மலைகளை முலைகளாக ஆக்கியுள்ளோம்.
ஃபிர்அவ்னின் உடலை நாம் பாதுகாத்து வைத்துள்ளோம்.
ஜுதி மலையில் நூஹ் நபியின் கப்பல் அத்தாட்சியாக உள்ளது.
இது போல் எண்ணற்ற வசனங்கள் குர்ஆனில் உள்ளன. இவற்றை நாம் விளங்கியது போல நபித்தோழர்களால் விளங்க முடியாது. ஆய்வு செய்து இதற்கான விளக்கம் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் நாம் வாழ்வதால் நமக்கு இது சாத்தியமாகிறது.
ஒவ்வொரு செய்திக்கும் நிகழ்விடம், நிகழும் நேரம் உள்ளது என்று அல்லாஹ் கூறுகிறான்.
ஒவ்வொரு செய்திக்கும் நிகழ்வதற்கான நேரம் உள்ளது. பின்னர் அறிந்து கொள்வீர்கள்!!
திருக்குர்ஆன் 6:67
எனவே குர்ஆனும் நபிவழியும் மட்டுமே மார்க்க ஆதாரங்களாகும். இவ்விரண்டைத் தவிர நபித்தோழர்கள் உள்ளிட்ட எவரது சொல்லும் மார்க்க ஆதாரங்களாகாது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.