இப்ராஹீம் நபி சிலைகளை உடைத்தது சரியா
இவ்வசனங்களில் (21:57, 21:58, 37:93) கடவுளாகக் கருதப்பட்ட சிலைகளை இப்ராஹீம் நபியவர்கள் உடைத்ததாகக் கூறப்படுகிறது.
இப்ராஹீம் நபி அவர்கள் சிலைகளை உடைத்தது சரியா? நாமும் பிறமதத்தினரின் கடவுள் சிலைகளை உடைக்கலாமா என்று இவ்வசனங்களை வாசிக்கும்போது சந்தேகம் ஏற்படலாம்.
பிறமதத்தினரின் கோவில்கள் மற்றும் சிலைகளைச் சேதப்படுத்துவது குறித்து இஸ்லாத்தின் நிலை என்ன என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.
பிறர் தெய்வங்களாக வழிபடுபவர்களை ஏசாதீர்கள் என்று 6:108 வசனம் கூறுகிறது. இதுபற்றி 170வது குறிப்பில் விளக்கப்பட்டுள்ளது.
எந்த மதத்தினரும் பிறமதத்தினரின் வழிபாட்டுத் தலங்களைச் சேதப்படுத்தக் கூடாது என்று 22:40 வசனம் சொல்கிறது. இது பற்றி 433வது குறிப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதற்கான காரணமும் இவ்வசனங்களில் சொல்லப்பட்டுள்ளது. பிற மதத்தினர் தெய்வமாகக் கருதுவோரை நீங்கள் ஏசினால் அவர்கள் அல்லாஹ்வை ஏசுவார்கள். நீங்கள் பிற மதக் கோவில்களைச் சேதப்படுத்தினால் அவர்கள் பள்ளிவாசல்களைச் சேதப்படுத்துவார்கள் என்பதே அந்தக் காரணம்.
இப்போது நாம் பிறமதத்தினரின் வழிபாட்டுத் தலத்தைச் சேதப்படுத்தினால் மேற்சொன்ன விளைவுகள் ஏற்படும்.
அப்படியானால் இப்ராஹீம் நபி ஏன் சேதப்படுத்தினார்கள்?
இப்ராஹீம் நபி அவர்களின் செயல் இந்த வசனங்களுக்கு முரணானது அல்ல. இதை நாம் விளக்கமாக அறிந்து கொள்ள வேண்டும்.
ஒரு சமுதாயம் அல்லது ஒரு மதம் மட்டுமே ஒரு ஊரில் உள்ளது. அந்த ஊரில் பிறந்த ஒருவருக்கு அந்த மதம் அல்லது அவர்களின் வழிபாட்டு முறை பிடிக்கவில்லை என்று தெரிகிறது. அவர் தனது கோபத்தை வெளிப்படுத்துவதற்காக அந்த வழிபாட்டுத் தலத்தையும் வழிபடும் தெய்வத்தையும் சேதப்படுத்தினால் அப்போது மதக் கலவரம் வராது. மற்ற மதத்தினரின் வழிபாட்டுத் தலம் இடிக்கப்படும் நிலையும் ஏற்படாது. ஏனெனில் சிலைகளைச் சேதப்படுத்தியவர் எந்த மதத்தின் சார்பிலும் இதைச் செய்யவில்லை.
தாங்கள் தெய்வமாக நம்பியவர்கள் அந்த நம்பிக்கையில் இருந்து விடுபடுவதாகத் தான் இதை மக்கள் எடுத்துக் கொள்கிறார்கள்.
இப்ராஹீம் நபியவர்களின் நிலையும் இது போன்றது தான்.
இப்ராஹீம் நபியவர்கள் சிலை வணங்கும் ஆஸர் என்பவரின் மகனாகப் பிறக்கிறார்கள். அப்போது அங்கே வேறு எந்த மதமும் இருக்கவில்லை. வேறு ஒரு மதத்தின் சார்பிலும் அவர்கள் இந்த வேலையைச் செய்யவில்லை. தங்கள் குடும்பத்தினர் குலதெய்வமாக சிலைகளை வணங்குவதை அவர்கள் வெறுத்ததால் அந்தக் கோபத்தை இப்படிக் காட்டினார்கள். அதற்கான விளைவை எதிர்கொள்ளவும் அவர்கள் தயாராக இருந்தனர்.
ஒரு ஊரில் ஒரு மதத்தினர் மட்டும் உள்ளனர். அவர்கள் அனைவரும் வேறு மதம் மாறிவிட்டால் தங்கள் பழைய வழிபாட்டுத்தலத்தை இடிப்பது போல் தான் இதையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மக்கள் பல்வேறு மதங்களாகப் பிரிந்திருக்கும்போது வெளியாட்கள் வந்து தங்கள் சிலைகளை உடைப்பதற்கும், அந்த மதத்தில் பிறந்த ஒருவர் தனிப்பட்ட முறையில் இந்தச் செயலைச் செய்வதற்கும் வித்தியாசம் உள்ளது.