இணையவழி போராட்டம் ஹதீஸுக்கு மாற்றமானதா?
தொற்று ஏற்பட்டால் அவ்வூரிலிருந்து வெளியேறாதீர்கள் என ஹதீஸ் இருக்கும் போது, நாம் அயல்நாட்டு தமிழர்கள் நாடு திரும்ப கோரிக்கை வைப்பது சரியா என சிலர் கேட்கின்றனர்.
பலமுறை சொல்வது போல, கேள்வி கேட்பவர்கள் இரண்டு ரகத்தில் உள்ளவர்கள். ஒரு ரகம், உன்மையாகவே சந்தேகத்தில் இருப்பவர்கள்.
மற்றொரு ரகம், தமக்கோ தம்மை சார்ந்தவருக்கோ அவ்வாறான சூழல் ஏற்பட்டால், இந்த வியாக்கியானம் எதையும் பேசாமல் இருந்து விட்டு தவ்ஹீத் ஜமாஅத் எதையாவது செய்தால் மட்டும் விமர்சிப்பதற்கென வருபவர்கள்.
இரண்டாவது நிலையிலிருக்கும் தறுதலைகளை உதாசீனம் செய்து விட்டு முதல் நிலையை மட்டும் நாம் கவனத்தில் கொள்வோம்.
ஒரு கிராமத்தில் வியாபாரம் செய்து வரும் சிறிய வியாபாரி, அன்றாட சரக்கு வாங்குவதற்காக அருகிலுள்ள பெரிய ஊருக்கு செல்கிறார்.
சென்ற நேரம் பார்த்து அங்கே நோய் தொற்று என ஊரடங்கு போடப்பட்டால், எப்படியாவது தமது சொந்த கிராமம் நோக்கி திரும்பி விடுவதை தான் அந்த கிராமவாசி விரும்புவார்.
அவ்வாறு விரும்வுவது ஹதீஸுக்கு மாற்றமும் இல்லை.
காரணம், அந்த ஹதீஸ் இது போன்று, வெளியூரிலிருந்து நோய் பாதித்திருக்கும் ஊரில் வேலை நிமித்தமாக சென்றவர்களைப் பற்றி பேசவில்லை.
குடும்பத்திடம் மீண்டும் சேரும் நோக்கத்தையோ, வறுமை ஏற்பட்டு விடக் கூடாது என அஞ்சியோ, சொந்த ஊர் நோக்கி சொல்லும் ஒருவரின் முடிவினை விமர்சித்தும் அந்த ஹதீஸ் பேசவில்லை.
ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும் போது அங்கு கொள்ளை நோய் ஏற்பட்டால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், சொல்ல நான் கேட்டேன்’ என்று கூறினார்கள். (சுருக்கம்)
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 5729
இந்த ஹதீஸ் சொல்வதெல்லாம், இரண்டே இரண்டு செய்திகளை தான்.
- நோய் பாதிப்பு ஏற்பட்ட ஊரிலிருந்து வெளியேறினால் நோய் பாதிப்பு ஏற்படாத பகுதிகளுக்கு அவை கடத்தப்பட வாய்ப்புள்ளது. அல்லது, பாதிப்பற்ற ஊரிலிருந்து அங்கே சென்றால் வலிய சென்று நோய் தொற்றினை நாம் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பிருக்கிறது.
இரண்டையும் தவிர்க்க வேண்டும். - நாம் இருக்கும் ஊரில் நோய் தொற்று ஏற்பட்டால் நமக்கும் அது தொற்றி விடுமோ என அஞ்சி அவ்வூரிலிருந்து வெளியேறுதல் கூடாது.
இந்த ஹதீஸ் பேசுகின்ற நோய் தொற்று என்பது உலகின் எல்லா பாகங்களிலும் உருவான pandemic பற்றியானதல்ல.
ஏதேனும் ஒரு ஊரில் மட்டும் உருவான நோய் பற்றியது. அதாவது epidemic.
இப்போது, அயல் நாடுகளில் வேலை நிமித்தம் சென்றவர்கள், சொந்த ஊர் திரும்ப முயல்கிறார்கள் என்றால் நோய் தொற்றுக்கு அஞ்சி அவர்கள் அவ்வாறு வெளியேறினால் தான் தவறாகும்.
அவர்களது குடும்பம் தனியாக தவிக்கின்ற போது, பிழைக்க போன நாட்டில் அடுத்த வேளை உணவிற்கு வழியில்லாமலும் வசிக்க வீடில்லாமலும் சாலைகளில் வாழ்க்கையை கழிக்கின்ற அவல நிலை உருவானால், அத்தகைய நெருக்கடியை விட்டும் மீள்வதற்காக அவர் அவ்வூரை விட்டு வெளியேறுவது அந்த ஹதீஸுக்கு மாற்றமான செயலாகாது.
மேலும், தற்போது நிலவுவது epidemic அல்ல, pandemic.
அதாவது, எந்த ஊரை விட்டும் வெளியேறுகிறாரோ அந்த ஊரில் இருக்கும் அதே தொற்று நோய், இவர் எந்த ஊருக்கு செல்ல நினைக்கிறாரோ அங்கேயும் இருக்க தான் செய்கிறது. உலகம் முழுக்க வியாபித்திருக்கிறது எனும் போது, நோய் தொற்று இங்கு அடிப்படை காரிணியில்லை.
மேல்குறிப்பிடப்பட்ட புகாரி ஹதீஸிலேயே கூட, மதீனாவிலிருந்து சிரியா தேசம் நோக்கி உமர் (ரலி) அவர்கள் பயணிக்க எத்தனிக்கும் போது சிரியாவில் நோய் தொற்று உருவாகியிருப்பது அவர்களுக்கு சுட்டிக்காட்டப்பட, அதன் காரணமாக தமது பயணத்தை ரத்து செய்கிறார்கள் என்றே சொல்லப்படுகிறது.
சுருக்கமாக,
நோய் தொற்று தமக்கு வந்து விடுவதில் அலட்சியம் காட்டி, தொற்றில்லாத ஊரிலிருந்து தொற்று ஏற்பட்ட ஊருக்கு செல்வதையும்..
ஊர் முழுக்க பரவிய நோய் தமக்கும் வந்து விடுமோ என அச்சப்பட்டு, இறைவனிடம் தவக்கல் வைக்க மறந்தவனாக, பாதிக்கப்பட்ட ஊரிலிருந்து வெளியேறுவதையும் தான் இந்த ஹதீஸ் தடுக்கிறது.
வேறு வேறு நெருக்கடிக்காக ஊர் விட்டு ஊர் பயணம் செய்வோரை அந்த ஹதீஸ் தடுக்கவில்லை !
யாரேனும் வரம்பு மீறாமலும், வலிய செல்லாமலும் நிர்பந்திக்கப்பட்டால் உமது இறைவன் மன்னிப்பவன்
(அல்குர்ஆன் 6 :145)
Nashid