இக்லாஸை இழக்கச்செய்யும் ரியாஃ
ரியா – முகஸ்துதி – என்பது இக்லாஸிற்கு நேர் எதிரான எண்ணமாகும்.
நற்காரியங்கள் புரிகின்ற போது எண்ணத்தில் அல்லாஹ்வை மட்டும் முன்னிறுத்துவது இக்லாஸ் என்றால், நான் ஒரு காரியத்தைச் செய்ததற்காக மக்கள் என்னைப் புகழ வேண்டும் என்றும், அனைவரின் கவனமும் என்னை நோக்கித் திரும்ப வேண்டும், என் பெயர் மக்களின் நாவில் ஒலிக்க வேண்டும் என்றும் ஒருவன் விரும்புகிறான் எனில் அதுவே முகஸ்துதியாகும்.
நாம் எந்தக் காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் அதை அல்லாஹ்விற்காக மட்டும் செய்ய வேண்டும். அவ்வாறில்லாமல் அந்த ஸ்தானத்தில் மற்றவர்களைக் கூட்டாக்கினால் அது அல்லாஹ்விற்கு இணைவைக்கின்ற காரியமாகிவிடும் என்பது இஸ்லாத்தின் அடிப்படை.
அதனால்தான் நபி (ஸல்) அவர்கள் முகஸ்துதியை சிறிய இணைவைப்பு என்று குறிப்பிட்டார்கள்.
“நான் உங்கள் மீது மிகவும் பயப்படுவது சிறிய இணை வைத்தலாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! சிறிய இணை வைத்தல் என்றால் என்ன?” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ரியா (முகஸ்துதி)” என்று பதிலளித்தார்கள். “நீங்கள் உங்கள் அமல்களை உலகத்தில் யாருக்குக் காட்டுவதற்காகச் செய்தீர்களோ அவர்களிடம் செல்லுங்கள். அவர்களிடம் கூலி கிடைக்குமா என்று பாருங்கள்” என்று அடியார்களின் அமல்களுக்குக் கூலி கொடுக்கும் நாளில் அல்லாஹ் கூறி விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: மஹ்மூத் பின் ரபீத் (ரலி)
நூல்: அஹ்மத் 22528
உடலில் ஏற்படும் கேன்சர் எனும் புற்றுநோய் அதன் செல்களை அழித்து மரணம் எனும் படுகுழியில் தள்ளுகிறது.
அதுபோல், எண்ணத்தில் ஏற்படும் குறையினால் முகஸ்துதி எனும் புற்றுநோய் ஏற்பட்டு நன்மைகளை அழித்து நரகம் எனும் படுகுழியில் நம்மை வீழ்த்திவிடும்.
ஒருவர் முகஸ்துதிக்காக ஒரு காரியத்தைச் செய்கிறபோது அவருக்கு இறைவனிடத்தில் எந்தக் கூலியும் கிடைக்காது. முகஸ்துதி அவரது நன்மைகளை அழித்துவிடும் என்பது மேற்கூறிய அஹ்மத் ஹதீஸின் மூலம் தெளிவாகிறது.
நாம் ஒரு முதலாளியிடம் தொழிலாளியாக வேலை செய்கிறோம் என்றால் நாம் அவருக்காக வேலை செய்தால்தான் அவர் நமக்குக் கூலி கொடுப்பார்.
நாம் அவருக்காகச் செய்ய வேண்டிய வேலையை வேறொருவனுக்குச் செய்து முடித்துவிட்டு, எனக்கான கூலியை கொடுங்கள் என்று கேட்டால் நம்மை இந்த உலகம் பைத்தியக்காரன் என்றே அழைக்கும்.
அது போன்றே இவ்வுலகில் முகஸ்துதிக்காக நற்காரியத்தைப் புரிந்தவர்கள், எங்களுக்கான கூலி கொடு இறைவா! என்று அல்லாஹ்விடம் வந்து நிற்கும் போது நீ யாருக்காக உனது காரியத்தைச் செய்து முடித்தாயோ அவனிடம் சென்று கூலி பெற்றுக் கொள் என்று இறைவன் விரட்டிவிடுவான்.
அந்நாளில் அல்லாஹ்வைத் தவிர யாரிடம் சென்று கூலி பெற முடியும்??
இவ்வாறு எவ்வளவு நற்காரியம் புரிந்திருந்தாலும் முகஸ்துதி என்ற புற்றுக்கு இடம் கொடுத்துவிட்டால் அது அனைத்தையும் அரித்து நாசம் செய்துவிடும்.