இஃக்லாஸ் – மறுமை வெற்றிக்கான அடித்தளம்
இஸ்லாத்தில் நாம் எந்த நற்காரியத்தைப் புரிவதாக இருந்தாலும் இதை நான் என் இறைவனுக்காக, அவனிடம் கூலி பெறுவதற்காகவே புரிகிறேன் என்ற உறுதியான எண்ணம் கொள்வதே இஃக்லாஸ் ஆகும்.
வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகையை நிலை நாட்டு மாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இதுவே நேரான மார்க்கம்.
அல்குர்ஆன் 98:5
நாம் நற்காரியங்களைப் புரிகின்ற போது நம்முடைய உள்ளத்தில் அல்லாஹ்வை மட்டும் முன்னிறுத்த வேண்டும்.
அதில் எந்தக் கலப்படமோ கலங்கலோ இருக்கக் கூடாது.
ஏனெனில், நாம் எந்தக் காரியத்தைச் செய்தாலும் அந்தக் காரியத்தின் உடல் உழைப்பையோ பொருளாதார இழப்பையோ அல்லாஹ் பார்ப்பது கிடையாது. உள்ளத்தையே பார்க்கின்றான்.
உள்ளத்தில் கொண்டிருக்கின்ற தூய எண்ணத்திற்குத் தான் இறைவனிடத்தில் கூலி வழங்கப்படுகிறதே தவிர வெளித்தோற்றத்திற்கு வழங்கப்படுவதில்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், உங்கள் தோற்றங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்களுடைய உள்ளங்களையும், செயல்களையுமே அவன் பார்க்கிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: முஸ்லிம் 5012
எனவே, இக்லாஸ் எனும் அஸ்திவாரத்தை நம்முடைய உள்ளத்தில் ஆழப் பதியவைத்துக் கொள்ள வேண்டும்.
ஏகத்துவம்