அவ்லியாக்களுக்கு  ஆற்றல் உண்டா ?

மகான்கள் அற்புதம் செய்ய வல்லவர்கள் என்றும், நினைத்ததைச் செய்து முடிப்பவர்கள் என்றும் கருதக் கூடியவர்கள் அதற்கு ஆதாரமாகப் பின்வரும் ஹதீஸை எடுத்துக் காட்டுகின்றனர்.

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் கூறினான்: எவன் என் நேசரைப் பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர்ப்பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன்.

அவ்வாறு நான் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறை நம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எந்தச் செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 6502

இந்தச் செய்தியை வைத்துக் கொண்டு, பார்த்தீர்களா! நபிமார்களுக்கு இல்லாத அற்புதத்தை அல்லாஹ் அவ்லியாக்களுக்கு வழங்கியிருக்கிறான். அவ்லியாவுடைய கண் என்பது அல்லாஹ்வுடைய கண்ணாகும். அப்படியென்றால் அல்லாஹ் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பார்ப்பதைப் போன்று அவ்லியா பார்ப்பார். அவ்லியாவுடைய காது என்பது அல்லாஹ்வுடைய காதாகும். அப்படியானால் அல்லாஹ் ஒரே நேரத்தில் அத்தனை பேச்சையும் கேட்பதைப் போன்று அவ்லியாவும் கேட்பார் என்று சொல்கிறார்கள்.

அப்துல் காதர் ஜீலானி, சாகுல் ஹமீது உட்பட அத்தனை அவ்லியாக்களுமே அல்லாஹ் பார்ப்பதைப் போன்று பார்ப்பார்கள். அல்லாஹ் கேட்பதைப் போன்று கேட்பார்கள். அவர்கள் பிடித்தால் அது அவ்லியாக்களுடைய கை கிடையாது. அல்லாஹ்வுடைய கையாகும் என்றும் சொல்கின்றனர். நாம் இதற்கு முன் வைத்த எந்த ஆதாரத்தையும் கவனிக்க மாட்டார்கள். இந்த ஒரு ஹதீஸை மட்டும் வைத்து வாதித்துக் கொண்டிருப்பார்கள்.

அவ்லியாக்களுக்கு அதிகாரத்தையும், அற்புத சக்தியையும் அல்லாஹ் வழங்கியுள்ளான் என்பதற்கு இதைப் பெரிய ஆதாரமாக சமாதி வழிபாடு செய்வோர் எடுத்துக் காட்டுகிறார்கள். இந்த ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்கும்போது அப்படித் தெரியலாம். ஆனால் ஒட்டு மொத்தமாக குர்ஆனைப் பார்க்கும் அதன் உயிர்நாடியான ஏகத்துவக் கொள்கைக்கு ஏற்ப வேறு விளக்கம் தான் இதற்குக் கொடுக்க வேண்டும். இதற்கு நேரடிப் பொருள் கொள்ளலாமா? மற்ற ஆதாரங்களுடன் முரண்படாத வகையில் பொருள் கொள்ள வேண்டுமா? நேரடிப் பொருள் கொண்டால் ஏற்படும் விபரீதங்களைப் பார்ப்போம்.

அல்லாஹ்வின் எத்தனையோ நேசர்கள் கொல்லப்பட்டனர். ஊனமாக்கப்பட்டனர். மரணிக்கவும் செய்தனர். இறைநேசர்கள் தான் அல்லாஹ் என்றால் அல்லாஹ் தான் கொல்லப்பட்டானா? அல்லாஹ் தான் ஊனமாக்கப்பட்டானா? அல்லாஹ் தான் மரணித்தானா? என்று இவர்கள் சிந்தித்தித்தால் இதன் சரியான பொருள் தெரியவரும்.

பொதுவாக ஒருவர் மீது அதிக நேசம் வைத்திருப்பதைக் குறிப்பிட இது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது வழக்கமான ஒன்று தான். “இவர் எனது வலக்கரமாக இருக்கிறார்” என்று கூறினால் நேரடிப் பொருளில் இதைப் புரிந்து கொள்ள மாட்டோம். “ஈருடலும் ஓர் உயிருமாக உள்ளனர்” என்று கூறப்பட்டால் அதையும் நேரடிப் பொருளில் புரிந்து கொள்ள மாட்டோம். இவர்களின் அறியாமையைப் புரிய வைக்க இன்னொரு ஹதீஸை நாம் எடுத்துக் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.

 

“நான் பசியாக இருந்தபோது நீ ஏன் எனக்கு உணவு அளிக்கவில்லை? நான் தாகமாக இருந்தபோது நீ ஏன் தண்ணீர் தரவில்லை? நான் ஆடை இல்லாமல் இருந்தபோது நீ ஏன் எனக்கு ஆடை தரவில்லை?” என்று அல்லாஹ் மறுமையில் விசாரிப்பான். அப்போது அடியான் “நீ இறைவனாயிற்றே! உனக்குப் பசி ஏது? தாகம் ஏது?” என்று கேட்பான், அதற்கு இறைவன் “ஒரு ஏழை பசி என்று கேட்டபோது அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அங்கே என்னைப் பார்த்திருப்பாய்” என்று கூறுவான்.

பார்க்க: முஸ்லிம் 5021

அப்படியானால் பிச்சைக்காரர்கள் எல்லோரும் அல்லாஹ்வா? அவர்களிடம் பிரார்த்தனை செய்வார்களா? பிச்சைக்காரர்களுக்கு தர்கா கட்டுவார்களா? நம்முடைய கை அல்லாஹ்வுடைய கையாக மாறுமா? நம்முடைய காது அல்லாஹ்வுடைய காதாக மாறுமா? நம்முடைய பார்வையாக அல்லாஹ் ஆகுவானா? அப்படி ஆகியிருந்தால் அவ்லியாக்கள் என்று சொல்லப்பட்டவர்களுக்கு மரணம் வந்திருக்குமா? அப்படியானால் இறந்த பிறகு புதைக்கப்பட்டது அல்லாஹ்வா?

இவர்கள் யாரையெல்லாம் அவ்லியாக்கள் என்று சொல்கிறார்களோ அத்தனை பேரையும் அல்லாஹ்வின் நேசர்கள் என்றும், அல்லாஹ்வின் தன்மை பெற்றவர்கள் என்றும் தானே சொல்கிறார்கள். அப்படியானால் அவர்கள் ஏன் மரணித்தார்கள்? இப்போதும் அவர்கள் உயிருடன் பூமியில் சுற்றித் திரிய வேண்டியது தானே! ஏன் அத்தனை அவ்லியாக்களும் சாதாரண ஒரு மனிதன் இறந்த பிறகு அடக்கம் செய்யப்படுவதைப் போன்று மண்ணறைக்குள் அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றார்கள்?

மனிதனுடைய பேச்சாக இருந்தாலும், அல்லாஹ்வுடைய பேச்சாக இருந்தாலும் இலக்கியமாக – உவமையாகச் சொல்லப்பட்டவைகளும் உள்ளன. நேரடியாகப் பொருள் கொள்ளத்தக்கவைகளும் உள்ளன. எது நேரடியாகச் சொல்லப்பட்டிருக்கிறதோ அதை நேரடியாகத்தான் புரிந்துகொள்ள வேண்டும். எது உவமையாகச் சொல்லப்பட்டிருக்கிறதோ அதை உவமையாகத் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

மனித வழக்கில், ஒருவரை இவன் சிங்கம் என்று சொல்கிறோம் என்றால் உண்மையிலேயே அவன் சிங்கம் என்று எடுத்துக் கொள்வோமா? கிடையாது. அவன் சிங்கத்தைப் போன்ற வீரம் – வலிமை உடையவன். சுறுசுறுப்பு உடையவன் என்றுதான் நாம் விளங்கிக் கொள்வோம். இதை நாம் நேரடியாக விளங்கிக் கொள்ளக்கூடாது. உவமையாகத் தான் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அதே போன்று, நாம் நம்முடைய மனைவியை என் கண்ணே, கண்மணியே என்று கொஞ்சுவோம். அதற்காக அவளுடைய கண்ணாக நம் கண் ஆகிவிடுமா? இதை நாம் எவ்வாறு புரிந்து கொள்வோம்? என்னுடைய கண்ணை நான் எவ்வாறு முக்கியமாகக் கருதுகின்றேனோ? அதைப் போன்று நீயும் எனக்கு முக்கியம் என்று தான் புரிந்து கொள்வோம்.

இதே மாதிரியான வார்த்தைப் பிரயோகத்தைத் தான் அல்லாஹ்வும் பயன்படுத்துகின்றான். அவ்வாறுதான் மேற்கண்ட ஹதீஸையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். மேற்கண்ட ஹதீசின் இறுதிப் பகுதியே இதன் பொருளைத் தெளிவாக்கி விடுகிறது.

அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன் என்பது தான் இறுதி வாசகம். அவர்கள் நினைத்ததெல்லாம் நடக்காது; அவர்களிடம் அற்புதம் ஏதும் நிகழாது; அவர்கள் என்னிடம் துஆச் செய்தால் நான் ஏற்றுக் கொள்வேன் என்பது தான் இதன் பொருளாகும்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக அல்லாஹ்வின் அனுமதி பெறாமல் யாரும் அற்புதம் செய்ய முடியாது என்ற வசனங்களுக்கு முரணாக இதன் நேரடிப் பொருள் அமைந்துள்ளது.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *