அழகிய முன்மாதிரி இப்ராஹீம் (அலை)
இப்ராஹீம் (அலை) அவர்களிடம் அழகிய முன்மாதிரி
இப்ராஹீமிடத்திலும், அவருடன் இருந்தவர்களிடத்திலும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உள்ளது.
அல்குர்ஆன் 60:4
சோதனைகள் அனைத்தையும் வென்றவர்
இப்ராஹீமை, அவருடைய இறைவன் சில கட்டளைகளைக் கொண்டு சோதித்தபோது அவர் அவற்றை முழுமையாக நிறைவு செய்தார்.
அல்குர்ஆன் 2:124
இறைக்கட்டளைக்கு உடனே கட்டுப்படுபவர்
“கட்டுப்படுவீராக!” என அவரிடம் அவரது இறைவன் கூறியபோது, “நான் அகிலங்களின் இறைவனுக்குக் கட்டுப்பட்டேன்” என்று கூறினார்.
அல்குர்ஆன் 2:131
இப்ராஹீம் தமது தந்தைக்காகப் பாவ மன்னிப்புக் கோரியது, அவருக்குத் தாம் கொடுத்த வாக்குறுதியின் காரணமாகவே தவிர வேறில்லை. அவர் அல்லாஹ்வின் எதிரி என்று தமக்குத் தெளிவான பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் இரக்கமுடையவர்; சகிப்புத் தன்மை மிக்கவர்.
அல்குர்ஆன் 9:114
(இறை ஆணையை) நிறைவேற்றிய இப்ராஹீம்
அல்குர்ஆன் 53:37
இறைவனின் கட்டளைக்காக மகனை அறுத்து பலியிட முன்வந்தவர்
“என் இறைவனே! எனக்கு (வழித்தோன்றலாக) நல்லவரை அளிப்பாயாக!” (என்று இறைஞ்சினார்.)
எனவே, பொறுமைமிக்க ஒரு குழந்தையைக் கொண்டு அவருக்கு நற்செய்தி கூறினோம்.
அவருடன் சேர்ந்து உழைக்கும் பருவத்தை அவர் அடைந்தபோது “என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பதாகக் கனவில் கண்டேன். நீ என்ன நினைக்கிறாய் என்பதை யோசித்துக் கொள்!” என்று கூறினார். “என் தந்தையே! உமக்கு ஏவப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் பொறுமையாளர்களில் உள்ளவனாக என்னைக் காண்பீர்கள்” என்று அவர் கூறினார்.
அவர்கள் இருவரும் கட்டுப்பட்டு, அவரை (இப்ராஹீம்) முகங்குப்புறக் கிடத்தியபோது, “இப்ராஹீமே! நீர் கனவை உண்மையாக்கி விட்டீர்!” என்று (கூறி) அவரை அழைத்தோம். இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி வழங்குவோம்.
இதுவே பகிரங்க சோதனையாகும்.
அவருக்கு மகத்தான ஒரு பலிப் பிராணியை ஈடாக்கினோம்.
பின்வருவோரிடம் அவருக்கு (நற்பெயரை) நிலைக்கச் செய்தோம்.
அல்குர்ஆன் 37:100-108
கஅபத்துல்லாஹ்வை தூய்மை செய்தவர்
(கஅபா எனும்) இந்த ஆலயத்தை மக்கள் ஒன்றுகூடும் இடமாகவும், பாதுகாப்புத் தலமாகவும் நாம் ஆக்கியதை நினைத்துப் பாருங்கள். மேலும் ‘மகாமு இப்ராஹீமை’த் தொழுமிடமாக ஆக்கிக் கொள்ளுங்கள். “தவாஃப் செய்வோர், இஃதிகாஃப் இருப்போர் மற்றும் ருகூவு, ஸஜ்தா செய்வோர் ஆகியோருக்காக எனது ஆலயத்தைத் தூய்மையாக்குங்கள்” என இப்ராஹீமிடமும் இஸ்மாயீலிடமும் வாக்குறுதி வாங்கினோம்.
அல்குர்ஆன் 2:125
மக்காவாசிகளுக்கு வளம் வேண்டி பிரார்த்தனை செய்தவர்
“என் இறைவனே! (மக்கா எனும்) இந்த ஊரைப் பாதுகாப்புத் தலமாக ஆக்குவாயாக! இவ்வூர்வாசிகளில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டோருக்குப் பழங்களை உணவாக அளிப்பாயாக!” என்று இப்ராஹீம் கூறிய போது, “யார் (என்னை) மறுக்கிறாரோ அவரையும் சிறிது காலம் சுகம் அனுபவிக்கச் செய்வேன். பிறகு அவரை நரக வேதனையில் தள்ளுவேன். அது சேருமிடத்தில் கெட்டது” என்று அவன் கூறினான்.
அல்குர்ஆன் 2:126
வணக்க வழிபாட்டுமுறை இறைவனிடம் கேட்டவர்
“எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் தலைமுறைகளை உனக்குக் கட்டுப்படும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வணக்க முறைகளை எங்களுக்குக் காட்டுவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீயே மன்னிப்பு மிக்கவன்; நிகரிலா அன்பாளன்”
அல்குர்ஆன் 2:127,128
இப்ராஹீம் நபியின் வழிமுறை ஏற்காதவன் முட்டாள்
தன்னையே மூடனாக்கிக் கொண்டவனைத் தவிர (வேறு) யார் இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிக்க முடியும்? அவரை இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம். மறுமையிலும் அவர் நல்லோரில் இருப்பார்.
அல்குர்ஆன் 2:130
இஸ்லாத்திலேயே மரணிக்க வேண்டும் என்று வஸிய்யித் செய்தவர்
என் பிள்ளைகளே! உங்களுக்காக இம்மார்க்கத்தை அல்லாஹ் தேந்தெடுத்துள்ளான். எனவே முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணிக்க வேண்டாம்” என்பதையே தம் மக்களுக்கு இப்ராஹீமும், யஃகூபும் அறிவுறுத்தினர்
அல்குர்ஆன் 2:132
இணைவைப்பவராக இருந்ததில்லை
நபியே!) அந்த ஆலயத்தின் இடத்தில் இப்ராஹீமை நாம் தங்க வைத்ததை நினைவூட்டுவீராக! “எனக்கு எதையும் இணையாக்காதீர்! தவாஃப் செய்வோருக்காகவும், வணங்குவோருக்காகவும், ருகூவு, ஸஜ்தா செய்வோருக்காகவும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துவீராக!” (என்று அவருக்குக் கூறினோம்.)
அல்குர்ஆன் 22:26
“நீங்கள் யூதர்களாகவோ அல்லது கிறித்தவர்களாகவோ ஆகி விடுங்கள்! நேர்வழி பெறுவீர்கள்” என (வேதமுடையோர்) கூறுகின்றனர். “அவ்வாறல்ல! சத்திய நெறியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தையே (பின்பற்றுவோம்). அவர் இணைவைப்போரில் ஒருவராக இருக்கவில்லை” என்று கூறுவீராக!
அல்குர்ஆன் 2:135
இப்ராஹீம் யூதராகவோ, கிறித்தவராகவோ இருக்கவில்லை. மாறாக, சத்திய நெறியில் நின்ற முஸ்லிமாகவே இருந்தார். அவர் இணைவைப்போரில் இருக்கவில்லை.
அல்குர்ஆன் 3:67
“அல்லாஹ் உண்மையைக் கூறியுள்ளான். எனவே, சத்திய நெறியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுங்கள். அவர் இணை வைப்போரில் (ஒருவராக) இருக்கவில்லை” என்று கூறுவீராக!
அல்குர்ஆன் 3:95
இப்ராஹீம் ஒரு சமுதாயமாகவும், அல்லாஹ்வுக்குப் பணிபவராகவும், சத்திய நெறியில் நிற்பவராகவும் இருந்தார். அவர் இணைவைப்போரில் ஒருவராக இருக்கவில்லை.
அல்குர்ஆன் 16:120
(நபியே!) “சத்திய நெறியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!“ என்று உமக்கு அறிவித்தோம். அவர் இணைவைப்போரில் ஒருவராக இருக்கவில்லை.
அல்குர்ஆன் 16:123
இணைவைப்பிலிருந்து பாதுகாப்பு கேட்டவர்
“என் இறைவனே! (மக்கா எனும்) இவ்வூரைப் பாதுகாப்பளிப்பதாக ஆக்குவாயாக! என்னையும் என் வழித்தோன்றல்களையும் சிலைகளை வணங்குவதை விட்டும் தூரமாக்குவாயாக!” என இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக!
என் இறைவனே! இவை மக்களில் அதிகமானவர்களை வழிகெடுத்து விட்டன. எனவே, யார் என்னைப் பின்பற்றுகிறாரோ அவரே என்னைச் சார்ந்தவர். யாரேனும் எனக்கு மாறு செய்தால், அப்போது நீயே மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன்.
அல்குர்ஆன் 14:35,36
ஏகத்துவத்தை அறிவுப்பூர்வமான புரியவைத்தவர்
அல்லாஹ், தனக்கு ஆட்சியதிகாரத்தை வழங்கியதன் காரணமாக, இப்ராஹீமிடம் அவரது இறைவனைப் பற்றி தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் அறியவில்லையா? “எனது இறைவனே உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கவும் வைக்கின்றான்” என்று இப்ராஹீம் கூறியபோது, “நானும் உயிர் கொடுக்கிறேன்; மரணிக்கவும் வைக்கிறேன்” என்று அவன் கூறினான். அதற்கு இப்ராஹீம், “அவ்வாறாயின், அல்லாஹ் சூரியனை கிழக்கிலிருந்து உதிக்கச் செய்கிறான். நீ அதை மேற்கிலிருந்து உதிக்கச் செய்” என்று கூறினார். அப்போது அந்த இறைமறுப்பாளன் வாயடைத்துப் போனான். அநியாயக்காரக்கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.
அல்குர்ஆன் 2:258
இப்ராஹீம் நபியின் குடும்பத்தினரும் சிறந்தவர்கள்
ஆதமையும், நூஹையும், இப்ராஹீமின் குடும்பத்தினரையும், இம்ரானின் குடும்பத்தினரையும் அகிலத்தாரைவிட அல்லாஹ் தேர்ந்தெடுத்தான்.
அல்குர்ஆன் 3:33
இப்ராஹீம் நபி விசயத்தில் தகுதி பெற்றவர்
இப்ராஹீமின் விஷயத்தில் மக்களிலேயே மிகத் தகுதி படைத்தவர்கள், அவரைப் பின்பற்றியோரும், இந்த நபியும், இறைநம்பிக்கை கொண்டோருமே ஆவர். அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களின் பாதுகாவலன்.
அல்குர்ஆன் 3:68
இப்ராஹீம் நபியின் மார்க்கத்தை பின்பற்றுங்கள்
“அல்லாஹ் உண்மையைக் கூறியுள்ளான். எனவே, சத்திய நெறியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுங்கள். அவர் இணை வைப்போரில் (ஒருவராக) இருக்கவில்லை” என்று கூறுவீராக!
அல்குர்ஆன் 3:95
நன்மை செய்பவராக, தனது முகத்தை அல்லாஹ்வுக்கு அடிபணியச் செய்து, சத்திய நெறியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றியவரைவிட அழகிய மார்க்கமுடையவர் யார்? இப்ராஹீமை, அல்லாஹ் உற்ற நண்பராக எடுத்துக் கொண்டான்.
அல்குர்ஆன் 4:125
“எனது இறைவன் என்னை நேரான வழியில் செலுத்தியுள்ளான். (அது) நிலையான மார்க்கம். சத்திய நெறியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கம். அவர் இணைவைப்பவர்களில் இருக்கவில்லை” என்று கூறுவீராக!
அல்குர்ஆன் 6:161
என் மூதாதையரான இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறேன். அல்லாஹ்வுக்கு எதையும் நாம் இணையாக்குவது நமக்குத் தகுதியானதல்ல! இது, நம்மீதும், மக்கள்மீதும் அல்லாஹ் புரிந்த அருளாகும். எனினும் மக்களில் அதிகமானோர் நன்றி செலுத்த மாட்டார்கள்.
அல்குர்ஆன் 12:38
(நபியே!) “சத்திய நெறியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!“ என்று உமக்கு அறிவித்தோம். அவர் இணைவைப்போரில் ஒருவராக இருக்கவில்லை.
அல்குர்ஆன் 16:123
இப்ராஹீம் நபியின் சிறப்பு
இறைவனின் உற்ற தோழர்
இப்ராஹீமை, அல்லாஹ் உற்ற நண்பராக எடுத்துக் கொண்டான்.
அல்குர்ஆன் 4:125
சித்தீக் (சிறந்த உண்மையாளர்)
இப்ராஹீமையும் இவ்வேதத்தில் நினைவுகூர்வீராக! அவர் சிறந்த உண்மையாளராகவும், நபியாகவும் இருந்தார்.
அல்குர்ஆன் 19:41
இறைவனுக்கு பணிந்து நடப்பவர்
இப்ராஹீம் ஒரு சமுதாயமாகவும், அல்லாஹ்வுக்குப் பணிபவராகவும், சத்திய நெறியில் நிற்பவராகவும் இருந்தார். அவர் இணைவைப்போரில் ஒருவராக இருக்கவில்லை.
அல்குர்ஆன் 16:120
சகிப்புத் தன்மை கொண்டவர்,இரக்கமுடையவர்
இப்ராஹீம் சகிப்புத் தன்மை கொண்டவர்; இரக்கமுடையவர்; (அல்லாஹ்வை நோக்கித்) திரும்பக் கூடியவர்.
அல்குர்ஆன் 11:75
தந்தையிடம் சத்தியத்தை சொன்னவர்
இப்ராஹீம் தமது தந்தை ஆஸரிடம், “சிலைகளைக் கடவுள்களாக எடுத்துக் கொள்கிறீரா? உம்மையும், உமது கூட்டத்தாரையும் பகிரங்க வழிகேட்டிலேயே காண்கிறேன்” என்று கூறியதை நினைத்துப் பார்ப்பீராக!
அல்குர்ஆன் 6:74
அவர் தமது தந்தையிடம், “என் அருமைத் தந்தையே! செவியேற்காததை, பார்க்காததை, உமக்குச் சிறிதும் பயனளிக்காததை ஏன் வணங்குகிறீர்?” என்று கூறியதை நினைவூட்டுவீராக!
“என் தந்தையே! உமக்குக் கிடைக்காத கல்வி என்னிடம் வந்துள்ளது. எனவே என்னைப் பின்பற்றுவீராக! நான் உமக்குச் சரியான வழியைக் காட்டுகிறேன்”
“என் தந்தையே! ஷைத்தானை வணங்காதீர்! அளவற்ற அருளாளனுக்கு ஷைத்தான் மாறு செய்பவனாக இருக்கிறான்”
“என் தந்தையே! அளவற்ற அருளாளனிடமிருந்து உமக்குத் தண்டனை ஏற்படுவதையும், நீர் ஷைத்தானின் கூட்டாளியாக ஆவதையும் நான் அஞ்சுகிறேன்” (என்றும் கூறினார்.)
“இப்ராஹீமே! என்னுடைய கடவுள்களைப் புறக்கணிக்கிறாயா? நீ விலகிக் கொள்ளாவிட்டால் உன்னைக் கல்லால் அடித்துக் கொல்வேன். காலமெல்லாம் என்னை விட்டுப் பிரிந்து விடு!” என்று அவர் கூறினார்.
அல்குர்ஆன் 19:42-46
இணைவைப்பவருக்கு பாவமன்னி கேட்பதிலிருந்து திரும்பியவர்
இப்ராஹீம் தமது தந்தைக்காகப் பாவ மன்னிப்புக் கோரியது, அவருக்குத் தாம் கொடுத்த வாக்குறுதியின் காரணமாகவே தவிர வேறில்லை. அவர் அல்லாஹ்வின் எதிரி என்று தமக்குத் தெளிவான பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் இரக்கமுடையவர்; சகிப்புத் தன்மை மிக்கவர்.
அல்குர்ஆன் 19:42-46
இணைவைத்தவரை வெறுத்தவர்
“நீங்கள் அல்லாஹ் ஒருவனை மட்டும் நம்பும்வரை, உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றை விட்டும் நாங்கள் விலகிக் கொண்டோம். உங்களை மறுத்து விட்டோம். உங்களுக்கும், எங்களுக்குமிடையே என்றென்றும் பகைமையும், வெறுப்பும் ஏற்பட்டு விட்டது” என்று தமது சமுதாயத்தினரிடம் கூறியதில் இப்ராஹீமிடத்திலும், அவருடன் இருந்தவர்களிடத்திலும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உள்ளது. “அல்லாஹ்விடமிருந்து உமக்கு (உதவ) எந்த ஒன்றுக்கும் நான் சக்தி பெறாத நிலையில், உமக்காகப் பாவ மன்னிப்புக் கோருவேன்” என்று இப்ராஹீம், தமது தந்தையிடம் கூறியதைத் தவிர! (மற்றவற்றில் முன்மாதிரி உள்ளது.) “எங்கள் இறைவனே! உன்மீதே நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். நாங்கள் உன்னிடமே மீண்டு விட்டோம். உன்னிடமே மீளுதல் உள்ளது” (என்று இப்ராஹீம் கூறினார்.)
அல்குர்ஆன் 60:4
விருந்தாளியை கண்ணியப்படுத்தியவர்
(நபியே!) இப்ராஹீமுடைய கண்ணியத்திற்குரிய விருந்தாளிகளின் செய்தி உம்மிடம் வந்ததா?
அவர்கள் அவரிடம் வந்தபோது “ஸலாம்” என்றனர். அதற்கவர், “ஸலாம், அறிமுகமில்லாத கூட்டமாக இருக்கிறீர்களே!” என்று கூறினார்.
அவர், தமது குடும்பத்தாரிடம் திரும்பிச் சென்று கொழுத்த காளைக் கன்றை (பொறித்துக்) கொண்டு வந்தார்.
அதை அவர்களுக்கு அருகில் வைத்தார். “நீங்கள் சாப்பிட மாட்டீர்களா?” என்று கேட்டார்.
அவர்களைப் பற்றி மனதிற்குள் பயந்தார். “அஞ்சாதீர்!” என அவர்கள் கூறினர். அறிவுள்ள ஆண் குழந்தையைப் பற்றி அவருக்கு நற்செய்தி கூறினர்.
அல்குர்ஆன் 51:24-28
தன் சமூகத்திடம் ஓரிறைக் கொள்கை சொன்னவர்
அவர்களுக்கு இப்ராஹீமின் செய்தியை எடுத்துரைப்பீராக!
அவர் தம் தந்தையிடமும் சமுதாயத்தினரிடமும், “எதை வணங்குகிறீர்கள்?” என்று கேட்டபோது, “சிலைகளை வணங்குகிறோம்; அவற்றை வணங்கிக் கொண்டே இருப்போம்” என்று அவர்கள் கூறினர்.
“நீங்கள் அழைக்கின்றபோது அவை உங்களுக்குச் செவி சாய்க்கின்றனவா? அல்லது அவை உங்களுக்கு நன்மை செய்கின்றனவா? அல்லது தீமை செய்கின்றனவா?” என அவர் கேட்டார்.
“எனினும் இவ்வாறு செய்பவர்களாக எங்கள் முன்னோரைக் கண்டோம்” என அவர்கள் கூறினர்.
அல்குர்ஆன் 26:69-74
இப்ராஹீமையும் (தூதராக அனுப்பினோம்.) அவர் தமது சமுதாயத்தினரை நோக்கி “அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனை அஞ்சுங்கள்! நீங்கள் அறிந்தோராக இருந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்ததாகும்” என்று கூறியதை நினைவூட்டுவீராக!
அல்லாஹ்வையன்றி நீங்கள் சிலைகளையே வணங்குகிறீர்கள். பொய்யையே கற்பனை செய்கிறீர்கள். அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவை உங்களுக்கு உணவளிப்பதற்குச் சக்தி பெறாது. எனவே, அல்லாஹ்விடமே உணவைத் தேடுங்கள்! அவனை வணங்கி, அவனுக்கே நன்றி செலுத்துங்கள்! அவனிடமே நீங்கள் மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள்.
அல்குர்ஆன் 29:16,17
அவர் தமது தந்தையிடமும், சமுதாயத்திடமும் “நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?” என்று கேட்டதை நினைவு கூர்வீராக!
“அல்லாஹ்வையன்றி பொய்யைக் கடவுள்கள் என எண்ணுகிறீர்களா? அவ்வாறாயின் அகிலங்களின் இறைவனைப் பற்றி உங்களுடைய எண்ணம் என்ன?” (என்று கேட்டார்.)
பின்னர் அவர் நட்சத்திரங்களைக் கூர்ந்து கவனித்தார்.
மேலும் “நான் நோயாளியாவேன்” எனக் கூறினார்.
அவர்கள், அவரை விட்டும் திரும்பிச் சென்றனர்.
அவர், அவர்களின் கடவுள்களிடம் சென்றார். “நீங்கள் சாப்பிட மாட்டீர்களா? நீங்கள் பேசாமலிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது?” எனக் கேட்டார்.
பின்னர் அவற்றை நோக்கிச் சென்று, வலதுகையால் தாக்கினார்.
அவரிடம் அவர்கள் விரைந்து வந்தனர்.
“நீங்கள் செதுக்கிக் கொண்டவற்றையே நீங்கள் வணங்குகிறீர்களா? உங்களையும், நீங்கள் உருவாக்கியவற்றையும் அல்லாஹ்வே படைத்தான்” என்று அவர் கூறினார்.
“அவருக்காக ஒரு கிடங்கை அமைத்து, அவரை நெருப்பில் போட்டு விடுங்கள்!” என அவர்கள் கூறினர்.
அவருக்கு (எதிராக) அவர்கள் சதி செய்ய நாடினார்கள். அவர்களை நாம் இழிந்தோராக ஆக்கினோம்.
“நான் என் இறைவனை நோக்கிச் செல்கிறேன். அவன் எனக்கு வழிகாட்டுவான்” என்று அவர் கூறினார்.
அல்குர்ஆன் 37:85,99
“என்னைப் படைத்தவனையன்றி நீங்கள் வணங்குவனவற்றை விட்டும் விலகிக் கொண்டேன். அவனே எனக்கு நேர்வழி காட்டுவான்” என்று இப்ராஹீம் தமது தந்தையிடமும், சமுதாயத்தினரிடமும் கூறியதை நினைவு கூர்வீராக!
அல்குர்ஆன் 43:26,27
ஓரிறைக் கொள்கையை அறிவுப்பூர்வமான விளக்கியவர்
“அவ்வாறல்ல! வானங்களுக்கும் பூமிக்கும் இறைவனே உங்கள் இறைவன். அவனே அவற்றைப் படைத்தான். இதற்கு சாட்சி கூறுவோரில் நானும் ஒருவன். அல்லாஹ்வின்மீது சத்தியமாக! நீங்கள் திரும்பிச் சென்ற பிறகு உங்கள் சிலைகள் விஷயத்தில் நான் ஒரு தந்திரத்தைக் கையாள்வேன்” என அவர் கூறினார்.
அவர், அவற்றைத் துண்டு துண்டாக ஆக்கினார். அவற்றில் பெரியதைத் தவிர! அதனிடம் அவர்கள் திரும்பி வரக்கூடும் என்பதற்காக (அதை விட்டு வைத்தார்.)
“நமது கடவுள்களை இவ்வாறு செய்தவர் யார்? அவர் அநியாயக்காரர்களில் உள்ளவரே!” என அவர்கள் கூறினர்.
“இப்ராஹீம் என அழைக்கப்படும் ஓர் இளைஞர் அவற்றைப் பற்றிக் (குறை) கூறுவதைச் செவியுற்று இருக்கிறோம்” என்று சிலர் கூறினர்.
“மக்களின் கண்ணெதிரிரே அவரைக் கொண்டு வாருங்கள்! அவர்கள் சாட்சி கூறக் கூடும்” என அவர்கள் கூறினர்.
“இப்ராஹீமே! எங்கள் கடவுள்களை இவ்வாறு செய்தது நீர்தானா?” எனக் கேட்டனர்.
“இல்லை! இதைச் செய்தது இவற்றிலுள்ள இந்தப் பெரிய சிலைதான். அவை பேசக் கூடியவையாக இருந்தால் அவற்றிடமே கேளுங்கள்!” என அவர் கூறினார்.
அவர்கள் தங்கள் பக்கமே திரும்பி, “நீங்களே அநியாயக்காரர்கள்” என்று கூறிக் கொண்டனர்.
பின்னர் அவர்கள் தலைக்குனிவுக்கு உள்ளாக்கப்பட்டு, “இவை பேசாது என்பதுதான் உமக்குத் தெரியுமே!” (என்று கூறினர்.)
“அல்லாஹ்வையன்றி உங்களுக்குச் சிறிதும் நன்மையோ, தீமையோ செய்யாதவற்றை வணங்குகிறீர்களா? உங்களுக்கும், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றுக்கும் அசிங்கம்தான்! நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?” என்று அவர் கூறினார்.
“நீங்கள் (கடவுளுக்கு எதையேனும்) செய்வதாக இருந்தால் அவரைத் தீயில் எரித்து, உங்கள் கடவுள்களுக்கு உதவி செய்யுங்கள்!” என்று அவர்கள் கூறினர்.
“நெருப்பே! இப்ராஹீமுக்குக் குளிர்ச்சியாகவும், இதமாகவும் ஆகிவிடு!” என்று கூறினோம்.
அவருக்கு (எதிராக)ச் சதி செய்ய அவர்கள் நினைத்தனர். ஆனால் அவர்களை நாம் நஷ்டமடைந்தோராக ஆக்கினோம்.
அல்குர்ஆன் 21:56-70
ஓரிறைக் கொள்கைக்காக நெருப்பில் எறியப்பட்டவர்
“நீங்கள் (கடவுளுக்கு எதையேனும்) செய்வதாக இருந்தால் அவரைத் தீயில் எரித்து, உங்கள் கடவுள்களுக்கு உதவி செய்யுங்கள்!” என்று அவர்கள் கூறினர்.
“நெருப்பே! இப்ராஹீமுக்குக் குளிர்ச்சியாகவும், இதமாகவும் ஆகிவிடு!” என்று கூறினோம்.
அவருக்கு (எதிராக)ச் சதி செய்ய அவர்கள் நினைத்தனர். ஆனால் அவர்களை நாம் நஷ்டமடைந்தோராக ஆக்கினோம்.
அல்குர்ஆன் 21:68-70