அழகிய முன்மாதிரி..
——————————-
உமது பாவத்தில் முந்தியதையும், பிந்தியதையும் உமக்காக அல்லாஹ் மன்னிப்பதற்காகவும்….
அல்லாஹ் தனது திருமறையில் 48:2 வசனத்தில் முஹம்மது (ஸல்) அவர்களின் முன் பின் பாவங்களை மன்னித்து விட்டதாகக் கூறுகின்றான்.
இப்படியொரு பாக்கியத்தைப் பெற்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்றாடம் பாவம் செய்து கொண்டிருக்கவில்லை. ஆனால் அதே சமயம் அன்றாடம் பாவமன்னிப்பு தேடிக் கொண்டிருந்தார்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாளில் எழுபது தடவைக்கு மேல்
//அஸ்தஃக்ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி//
(பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரி அவன் பக்கமே திரும்புகின்றேன்) என்று கூறுகின்றேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி 6307
எனது உள்ளத்தில் கவனக்குறைவு ஏற்படுகின்றது. நிச்சயமாக நான் அல்லாஹ்விடம் ஒரு நாளில் நூறு தடவை பாவமன்னிப்பு தேடுகின்றேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அல்அகர் பின் யஸார் (ரலி),
நூல் : முஸ்லிம் 4870
மக்களே! அல்லஹ்விடம் பாவமன்னிப்பு தேடுங்கள். நான் அவனிடம் ஒரு நாளில் நூறு தடவை பாவமன்னிப்பு தேடுகின்றேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அல்அகர் பின் யஸார் (ரலி),
நூல் : முஸ்லிம் 4871
எப்போதும் இறைச் சிந்தனையில் இருக்கும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உள்ளம் கொஞ்சம் அந்தச் சிந்தனையை விட்டு விலகினால் கூட அதற்காக பாவமன்னிப்பு தேடுகின்றார்கள்.
ஆனால் நாம் சிறு சிறு பாவங்களால் முற்றுகையிடப்பட்டுள்ளோம். அன்றாடம் ஆயிரக்கணக்கான பாவங்களைச் செய்து விட்டு கல்லாக உட்கார்ந்திருக்கின்றோம். அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுவது கிடையாது.
ஒரு மாதிரியான மிதப்பில் இருக்கின்றோம். இது போன்ற பாவங்களை விட்டு விலகுவதுடன் அன்றாடம் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடி அதற்குரிய பலன்களை அடைவோமாக
——————
ஏகத்துவம்