அல்லாஹ்
——————-
அல்லாஹ்வுக்குத் தூக்கம் தேவையில்லை,
அல்லாஹ்வுக்குச் சோர்வு இல்லை,
அல்லாஹ்வுக்கு மரணமில்லை,
அல்லாஹ்வுக்கு மறதி இல்லை,
அல்லாஹ்வுக்குப் பசி, தாகம் இல்லை,
அல்லாஹ்வுக்கு உதவியாளன் இல்லை,
அல்லாஹ்வுக்கு மனைவி, மகன் போன்ற தேவைகள் இல்லை, அல்லாஹ்வுக்குப் பெண் மக்கள் தேவையில்லை, அல்லாஹ்வுக்குப் பெற்றோர் இல்லை.
அல்லாஹ்வின் ஆற்றல்
———————————-
அவனே அடுக்கடுக்கான ஏழு வானங்களையும் கண்ணுக்குத் தெரியாத தூண்களால் படைத்தவன்.
பூமியைப் படைத்து அதில் மனிதர்களை வாழச் செய்தவன்.
பூகம்பத்தால் மக்கள் அழிந்துவிடாமலிருக்க மலைகளை முளைகளாக நாட்டியவன்.
சுட்டெரிக்கும் சூரியனால் ஒளியூட்டியவன். இரவு பகலை மாறி மாறி வரச் செய்பவன்.
அண்டம் படைத்த நாள் முதலே மாதங்களின் எண்ணிக்கையைப் பன்னிரண்டாக நிர்னயித்தவன்.
மனிதனைப் பல நிறங்களில், மொழிகளில் வகைப்படுத்தியவன். மனிதனுக்கு மரம் செடி கொடிகளை வசப்படுத்தியவன். காய் கனிகளை அள்ளிக் கொடுத்தவன். மழையால் மண்ணையும் மனதையும் குளிர்வித்தவன். இப்படி அல்லாஹ்வின் எண்ணிலடங்கா அருளையும் அவனது வல்லமையையும் அடுக்கிக்கொண்டே போகலாம்.
இவ்வளவு பெரிய மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ்வை அறிந்த எவரும் அவனுக்கு இணைகற்பிக்க மாட்டார்கள்.
அல்லாஹ்வுக்கு இணையாக்குமளவிற்கு அந்தப் போலி தெய்வங்கள் யாவும் வல்லமை பெற்றவை அல்ல. அவை அனைத்தும் படைப்பினங்கள். பலவீனத்திற்கு உட்பட்டவைகள். அணுவைக் கூட படைக்க சக்தியற்றவைகள்.
நாம் நம்பி வழிபடும் அல்லாஹ் எவ்வளவு பெரிய ஆற்றல் மிக்கவன்? அவனே படைத்து, வடிவமைத்து, படைப்பினங்களுக்குக் காலக் கெடுவை நேர்த்தியாக நிர்ணயித்து, மனிதர்களின் இரகசியத்தையும் வெளிப்படையானதையும் அனைத்தையும் அறிந்த வல்லோன் அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்!
——————-
ஏகத்துவம்