அல்லாஹ் ஆகு என்றால் ஆகிவிடும் என்கிறீர்கள்…
அப்பேற்பட்ட வல்லமையுடைய இறைவனுக்கு வானத்தையும் பூமியையும் படைக்க ஏன் ஆறு நாள் தேவைப்பட்டது❓
பூமியையும் படைக்க அல்லாஹ் ஆறு நாள் எடுத்தது ஏன்❓
சரியான முறையில் புரிந்து கொண்டால் இதில் எந்தக் குழப்பமும் ஏற்படாது.
நீங்கள் மிகப்பெரிய செல்வந்தராக இருக்கிறீர்கள். ஒரு வீட்டைக் கட்ட நீங்கள் நினைத்தால் இரண்டே மாதத்தில் கட்டி விடக்கூடிய அளவுக்குச் சக்தி இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.
அப்படிச் சக்தி இருந்தும் ஒரு வீட்டை இரண்டு வருடங்களில் கட்டுகிறீர்கள் என்றால் இரண்டு மாதங்களில் உங்களால் கட்ட முடியாது என்று கூற மாட்டோம்.
ஒரு நாளில் நம்மால் செய்ய முடியும் காரியத்தை ஐந்து நாட்களில் செய்தால் ஒரு நாளில் செய்ய நமக்குச் சக்தியில்லை என்று கூற முடியாது.
ஐம்பது கிலோ எடையைத் தூக்க முடிந்த நீங்கள் ஐந்து கிலோவாக பத்து தடவை தூக்கினால், உங்களுக்கு ஐம்பது கிலோவைத் தூக்க முடியாது என்று யாரும் கருத மாட்டார்கள்.
எந்த மனிதரும் தனக்கு எதையெல்லாம் செய்ய சக்தியுள்ளதோ அதையெல்லாம் செய்ய மாட்டார். தனக்கு எது விருப்பமானதோ அதைத் தான் செய்வார்.
அது போல தான் இறைவன் ஒரு பொருளை உருவாக்க எண்ணினால் ஆகு என்றாலே போதும்; அது ஆகிவிடும் என்பது அவனது சக்தியையும் ஆற்றலையும் கூறுகிறது. ஒவ்வொரு பொருளையும் ஆகு என்று கூறித் தான் படைத்தான் என்பது இதன் கருத்தல்ல.
படைக்க அவனுக்கு முடியும் என்பது தான் இதன் கருத்து.
ஆயினும் ஒரு மனிதனை உருவாக்க அவன் பத்து மாதங்கள் எடுத்துக் கொள்வான். வானம் பூமியைப் படைக்க ஆறு நாட்களை எடுத்துக் கொள்வான். இதை விட அதிகமான கால அவகாசத்திலோ, குறைவான கால அவகாசத்திலோ வேறுசில காரியங்களைச் செய்வான்.
இப்படிச் செய்வதால் ஆகு எனக் கூறினால் ஆகும் என்ற அவனது வல்லமையை மறுத்ததாக ஆகாது.
வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் அல்லாஹ்வே ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். உங்களுக்கு அவனன்றி பொறுப்பாளரோ, பரிந்துரைப்பவரோ இல்லை. *நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா? *
(குர்ஆன் 32:4)
———————
ஏகத்துவம்