*அல்லாஹ்வை நேசிப்பதும் வணக்கமே!*
தனக்காக தனது அடிமைகள் என்னென்ன செய்ய வேண்டுமென்று அல்லாஹ் தனது திருக்குர்ஆனிலும், தனது திருத்தூதர் வாயிலாகவும் கற்றுத் தருகிறானோ அவையாவும் வணக்கங்களேயாகும்.
அல்லாஹ்வையன்றி பல கடவுள்களைக் கற்பனை செய்து, அல்லாஹ்வை விரும்புவது போல் அவர்களை விரும்புவோரும் மனிதர்களில் உள்ளனர். *நம்பிக்கை கொண்டோர் (அவர்களை விட) அல்லாஹ்வை அதிகமாக நேசிப்பவர்கள். அநீதி இழைத்தோர் வேதனையைக் காணும் போது அனைத்து வல்லமையும் அல்லாஹ்வுக்கே என்பதையும், அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் என்பதையும் கண்டு கொள்வார்கள்*.
(அல்குர்ஆன் 2:165)
அல்லாஹ்வை நேசிக்க வேண்டுமென்று மட்டும் சொல்லாமல், அல்லாஹ்வை நேசிப்பது போல் அல்லாஹ் அல்லாதவர்களை நேசிக்கலாகாது என்றும், அல்லாஹ் இங்கே நமக்குக் கற்றுத் தருகிறான். *மற்ற எவரையும், எதனையும் விட அல்லாஹ்வை அதிகம் நேசிப்பவர்களே மூமின்கள்* என்றும் இங்கே விளக்கம் தருகிறான்.
யார் அல்லாஹ்வை நேசிப்பது போல் அல்லாஹ் அல்லாதவர்களை நேசிக்கின்றாரோ அவர் அல்லாஹ் அல்லாதவர்களை வணங்கியவராவார். *இய்யாக நஃபுது* எனும் உறுதிமொழியை மீறியவராவார். இறைவனளவுக்கு மற்றவர்களை நேசிப்பது நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த காஃபிர்களுடைய (இஸ்லாத்தை ஏற்காதவர்களுடைய) கொள்கையாக இருந்திருக்கின்றது என்பதை இந்த வசனம் விளக்குகின்றது.
*அல்லாஹ் மட்டும் கூறப்படும் போது, மறுமையை நம்பாதோரின் உள்ளங்கள் சுருங்கி விடுகின்றன*. அவனல்லாதோர் கூறப்பட்டால் உடனே அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.
(அல்குர்அன் 39:45)
இறைவனின் பெயரைக் கூறும் போது ஏற்படாத மகிழ்ச்சி இறைவனல்லாத மற்றவர்களைக் கூறும் போது ஒருவனுக்கு ஏற்படுமானால் *இறைவனின் அழைப்பை பாங்கை கேட்கும் போது ஏற்படாத பக்தி சமாதிகளைக் காணும் போது ஒருவனுக்கு ஏற்படுமானால் அவனது உள்ளத்தில் இறைவனின் நேசத்தை விட மற்றவர்களின் நேசமே அதிகமாகக் குடி கொண்டுள்ளது என்று பொருள்*.
*இய்யாக நஃபுது* என்பதை அவன் பூரணமாக ஏற்கவில்லை.
இறைவனது கட்டளை இது தான் என்று கூறப்படும் போது *எனது தந்தை, எனது தாய், எனது மனைவி இப்படிக் கூறுகிறார்களே என்று ஒருவன் கூறத் துணிந்து விட்டால், அவனது உள்ளத்திலும் இறை நேசத்தை விட அவனது குடும்பத்தினர் மீது அதிக நேசம் இருக்கிறது என்று பொருள்!*
*இய்யாக நஃபுது* என்பதற்கும் இவனுக்கும் சம்பந்தம் எதுவுமில்லை.