அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து இரண்டு வகையான பாத்திரங்களை நான் நினைவில் வைத்துக் கொண்டு இருக்கிறேன். அவற்றில் ஒன்றை நான் பரப்பி விட்டேன். மற்றொன்றை நான் பரப்பியிருந்தால் என் அடித் தொண்டை வெட்டப்பட்டிருக்கும் என்று அபூஹுரைரா (ரலி) அறிவிப்பதாக புகாரியில் ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. இது திருக்குர்ஆனின் 2:159,160 வசனத்திற்கு மாற்றமாக உள்ளதே!
அபூஹுரைரா (ரலி) அவர்கள் பரப்பாமல் விட்டு விட்டதாகத் தெரிவிக்கும் இந்தச் செய்தி எது என்பது குறித்த விளக்கம் எதுவும் ஹதீஸ்களில் காணப்படவில்லை. எனினும் நிச்சயமாக அந்தச் செய்திகள் மார்க்கம் தொடர்பான செய்திகள் அல்ல என்பதை அவர்கள் அறிவிக்கும் மற்றொரு ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ள முடியும்.
‘அபூஹுரைரா அதிகமாக அறிவிக்கின்றாரே’ என மக்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு வசனங்கள் மட்டும் இல்லையென்றால் நான் ஒரு நபி மொழியைக் கூட அறிவித்திருக்க மாட்டேன்’ என்று அபூஹுரைரா (ரலி) கூறி விட்டு, மக்களுக்காக நாம் வேதத்தில் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர் வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர். மன்னிப்புக் கேட்டு (தங்களைத்) திருத்திக் கொண்டு, (மறைத்தவற்றை) தெளிவுபடுத்தியோரைத் தவிர. அவர்களை நான் மன்னிப்பேன். நான் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 2:159,160) ஆகிய இரு வசனங்களையும் ஓதிக் காட்டினார்கள். மேலும் தொடர்ந்து,
‘மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு வந்த எங்கள் சகோதரர்களோ வியாபாரப் பேரங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். மதீனாவிலிருந்த அன்சாரிகளோ தங்கள் (விவசாய) செல்வங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்த அபூஹுரைராவோ, முழுக்க முழுக்க (வேறு வேலைகளில் ஈடுபடாமல்) வயிறு நிரம்பினால் போதும் என்று நபி (ஸல்) அவர்களுடனேயே இருந்தேன். மற்றவர்கள் வருகை தராத இடங்களுக்கெல்லாம் நான் செல்வேன். அவர்கள் மனப்பாடம் செய்யாதவற்றை எல்லாம் நான் மனப்பாடம் செய்து கொண்டு இருந்தேன்’ என்று அபூஹுரைரா (ரலி) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அஃரஜ்
நூல்: புகாரி 118
இந்த ஹதீஸில் மார்க்கம் தொடர்பான எந்தச் செய்தியையும் மறைக்கக் கூடாது என்று கூறும் மேற்கண்ட இரு வசனங்களும் கூறுவதால் தான் எதையும் மறைக்காமல் அறிவிப்பதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். எனவே அவர்கள் பரப்பாமல் விட்டு விட்டதாகக் கூறுவது மார்க்கம் தொடர்பான செய்திகள் அல்ல என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
அவை எது குறித்த செய்திகள் என்பதையும் அபூஹுரைரா (ரலி) அவர்களின் வார்த்தையிலிருந்தே விளக்கத்தைப் பெற முடியும். அந்தச் செய்திகளைச் சொல்லியிருந்தால் கழுத்து வெட்டப்பட்டிருக்கும் என்று கூறுகின்றார்கள். எனவே அரசியல், அதிகாரம் குறித்த செய்திகளாக அவை இருக்கலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின்னர் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் குறித்த செய்திகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள். அந்த முன்னறிவிப்புக்கள் அன்றைய ஆட்சியாளர்கள் சிலருக்கு எதிராகவும் இருந்தன.
அது போன்ற செய்திகள் அபூஹுரைரா (ரலி) அவர்களுக்குத் தெரிந்திருந்து, அதைப் பரப்பினால் அன்றைய ஆட்சியாளர்களால் மரண தண்டனைக்கு உள்ளாக நேரிடும் என்பதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் இந்த ஹதீஸில் கூறியிருப்பதற்குத் தான் வாய்ப்புள்ளது.