*அல்லாஹ்வின் அளவற்ற அருளும் மனிதனின் எதிர்பார்ப்பும்*

பாவங்களை நன்மைகளாக மாற்றும் அற்புத மார்க்கம் இஸ்லாம், அல்லாஹ்வின் கருணையை மையமாகக் கொண்டவை.

ஒரு அடியான் தான் செய்த பாவங்களை நினைத்து வருந்தினாலும், அல்லது மறுமையில் அல்லாஹ்வின் முன்னிலையில் நிற்கும்போது அச்சப்பட்டாலும், *அல்லாஹ்வின் கருணை அவனது கோபத்தை விட மிக விசாலமானது* என்பதை மெய்ப்பிக்கும் ஹதீஸ்கள் உள்ளது

அவற்றில் மிகவும் முக்கியமானது, அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸ். (முஸ்லிம் 314) *இது நரகத்திலிருந்து கடைசியாக வெளியேறி சொர்க்கத்திற்குச் செல்லும் மனிதனின் நிலையையும்*, அங்கு நிகழும் ஓர் ஆச்சரியமான உரையாடலையும் விவரிக்கிறது.

\\ *மறுமை நாளின் விசாரணைக்களம்* \\

மறுமை நாளில், நரகவாசிகள் அனைவரும் நரகத்திற்கும், சொர்க்கவாசிகள் சொர்க்கத்திற்கும் சென்ற பிறகு, இறுதியாக ஒரு மனிதர் விசாரிக்கப்படுகிறார். இவர் நரகத்திலிருந்து கடைசியாக விடுவிக்கப்படுபவர். இவரது விசாரணை பற்றி..

அல்லாஹ் மலக்குகளிடம், *இவர் புரிந்த சிறு பாவங்களை இவருக்கு எடுத்துக் காட்டுங்கள்! இவர் புரிந்த பெரும்பாவங்களை இவரைவிட்டு நீக்கிவிடுங்கள்* (மறைத்து வையுங்கள்) என்று கட்டளையிடுகிறான்.

இங்கு அல்லாஹ்வின் நோக்கம் அந்த மனிதரை தண்டிப்பதல்ல; மாறாக, *அவரை படிப்படியாக மகிழ்ச்சியில் ஆழ்த்துவதாகும்.*

முதலில் சிறிய தவறுகள் பட்டியலிடப்படுகின்றன:

*நீ இன்ன நாளில் இன்ன தவறைச் செய்தாய்.*

*இன்ன இடத்தில் இப்படி நடந்து கொண்டாய்.*

\\ *மனிதனின் அச்சமும் ஒப்புதலும்* \\

தனது பாவப்பட்டியல் வாசிக்கப்படுவதைக் கேட்கும் அந்த மனிதர், எதையும் மறுக்க முடியாமல், *ஆம் இறைவா! நான் செய்தேன்* என்று ஒப்புக்கொள்கிறார். ஆனால், அவரது உள்ளத்திற்குள் ஒரு பெரும் நெருப்பு எரிந்து கொண்டிருக்கும்.

அவர் மனதில் நினைப்பார், *இவை வெறும் சிறிய தவறுகள்தானே*…

*நான் செய்த மிகப்பெரிய பாவங்கள் இன்னும் பட்டியலிடப்படவில்லையே*! சிறியவற்றுக்கே இந்தக் கணக்கு என்றால், *பெரிய பாவங்கள் வெளியே வரும்போது என் நிலை என்னவாகும்*?

அவர் பெரும் பாவங்கள் எப்போது வெளி வருமோ என்று நடுக்கத்துடன் காத்துக் கொண்டிருப்பார்.

\\ *அல்லாஹ்வின் அளவற்ற கருணை* \\

அந்த மனிதர் பெரும் தண்டனையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், அல்லாஹ் ஒரு அதிர்ச்சியூட்டும் தீர்ப்பை வழங்குகிறான்

*நீ செய்த ஒவ்வொரு (சிறு) தவறுகளுக்கும் ஈடாக ஒரு நன்மை உனக்கு உண்டு.*

இதுதான் அல்லாஹ்வின் கருணை. *அவன் ஒரு அடியான் மீது கருணை காட்ட நாடிவிட்டால், அந்த அடியான் செய்த தீமைகளைக் கூட நன்மைகளாக மாற்றிவிடுவான்.*

இந்தத் தீர்ப்பைக் கேட்டதும் *அந்த மனிதருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தண்டனை கிடைக்கும் என்று பயந்த இடத்திலே, நன்மைகள் பரிசாகக் கிடைப்பதைக் கண்டு அவர் மெய்சிலிர்த்துப் போகிறார்*.

*இறைவா! நான் இன்னும் பல (பெரும் பாவச்) செயல்களைப் புரிந்திருந்தேனே! அவற்றையெல்லாம் இங்கு நான் காணவில்லையே!* என்று கூறி மகிழ்ச்சி அடைக்கிறார்

இந்தச் சம்பவத்தை விவரிக்கும்போது, *நபிகளார் தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்தார்கள்*. அந்த மனிதரின் பேச்சும், அல்லாஹ்வின் அளவற்ற வள்ளல் தன்மையும் நபிகளாருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த ஹதீஸ் நமக்கு பல முக்கியமான பாடங்களைக் கற்றுத் தருகிறது,

அல்லாஹ்வின் கருணைக்கு எல்லையே இல்லை. அவன் நாடினால், தீமைகளைக் கூட நன்மைகளாக மாற்றும் ஆற்றல் உள்ளவன்.

*அவர்களுடைய தீமைகளை அல்லாஹ் நன்மைகளாக மாற்றுகிறான். அல்லாஹ் மன்னிப்புமிக்கவனாகவும், நிகரிலா அன்பாளனாகவும் இருக்கிறான்*. (25:70)

ஒரு மனிதன் எவ்வளவு பாவம் செய்திருந்தாலும், அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்கக்கூடாது.

*அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! இறைமறுப்பாளர்களான கூட்டத்தைத் தவிர எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழக்க மாட்டார்கள்* (12:87)

நாம் செய்த பாவங்களை நினைத்து நிராசை அடையாமல், அல்லாஹ்விடம் மனமுருகி மன்னிப்புக் கேட்க வேண்டும்.

*திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்வோரே வெற்றி பெற்றோர் ஆவர்* (28:67)

அல்லாஹ் தண்டனை கொடுப்பதில் அவசரப்படுவதில்லை; மாறாக, *தன் அடியார்களுக்குச் சொர்க்கத்தில் இன்பத்தை அளிப்பதையே விரும்புகிறான்*.
அல்லாஹ் நம் அனைவரின் பாவங்களையும் மன்னித்து, மறுமையில் அவனது அருளைப் பெறும் பாக்கியத்தை தந்தருள்வானாக! ஆமீன்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *