அற்புதங்கள் இரு வகை
அற்புதங்கள் இரு வகைகளில் உள்ளன.
- அல்லாஹ் அனுமதி அளித்து அதன்படி செய்யப்படும் அற்புதங்கள் முதல் வகை.
- யாரிடம் அற்புதம் நிகழ்த்தப்படுகிறதோ அவருக்கே தெரியாமல் நிகழும் அற்புதங்கள் இரண்டாவது வகை.
இந்த இரண்டாம் வகை அற்புதங்கள் மனிதர்களில் பலருக்கு நிகழ்ந்துள்ளன. தர்போதும் நிகழ்கின்றன. மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்கள் பிழைத்துக் கொள்கிறார்கள். விமானம் நொறுங்கி விழுந்து அனைவரும் மரணித்த பின் ஒரு குழந்தை மட்டும் உயிர் பிழைத்துக் கொள்கிறது. இடிபாடுகளில் சிக்கி அனைவரும் இறந்திருக்கும் நிலையில் பத்து நாட்கள் கழித்து உயிருடன் ஒருவர் மீட்கப்படுகிறார். இது போல் அற்புதங்கள் பலரது வாழ்வில் நடக்கின்றன.
ஐம்பது மாடி கட்டடத்தில் இருந்து கீழே விழுந்து சாகாமல் ஒருவன் பிழைத்துக் கொள்கிறான். இது அற்புதம் தான். ஆனால் அவன் கீழே விழுவதற்கு முன்போ, கீழே விழும் போதோ இப்போது நீ சாகமாட்டாய் என்று அவனுக்கு அறிவிக்கப்படுவதில்லை. இது நடந்து முடியும் வரை நாம் சாக மாட்டோம் என்பது அவனுக்குத் தெரியாது.
இந்த அற்புதங்கள் இரண்டாவது வகையைச் சேர்ந்ததாகும்
ஒருவனிடம் நிகழும் அற்புதம் அவனுக்கே தெரியாமல் இருப்பது போல் நபிமார்களின் அற்புதம் இருக்கவில்லை. நபிமார்கள் அல்லாஹ்வின் அனுமதியோடு அற்புதம் செய்வதால் இப்போது நாம் போடும் கைத்தடி பாம்பாக மாறும் என்ற விபரம் பாம்பாக மாறுவதற்குச் சற்று முன்பு அவர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டு விடுகிறது. நடக்கப் போவதை முன்னரே அவர்கள் அறிந்திருந்தால் தான் அதை ஆதாரமாகக் காட்டி தனது தூதுத்துவத்தை அவர்களால் நிரூபிக்க முடியும்.
இல்லாவிட்டால் தற்செயலாக நடந்தது என்று மக்கள் கூறி நிராகரித்து விடுவார்கள். இந்த வகையில் இரண்டு அற்புதங்களும் வேறுபடுகின்றன.
இப்போது இந்த அற்புதத்தைச் செய்து காட்டப்போகிறேன் என்று அறிவித்து விட்டு நபிமார்கள் அற்புதம் செய்வார்கள். இது முதல் வகை அற்புதம். யாரிடம் அற்புதம் நிகழ்கிறதோ அவருக்கே தெரியாமல் யாரும் எதிர்பாராமல் திடீரென நிகழும் அற்புதங்கள் இரண்டாம் வகையாகும்.