அரபு மொழியில் தான் துஆ கேட்க வேண்டுமா?
தொழுகையில் அரபி மொழியில் தான் துஆக் கேட்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். அத்தஹிய்யாத்திலும், ஸஜ்தாவிலும் மட்டும் எந்த மொழியிலும் கேட்கலாம் என்று தாங்கள் அல்ஜன்னத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். எது சரி?
சிலர் அல்ல; மிகமிகப் பலர் அரபியில் தான் கேட்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
தொழுகையில் கேட்கப்படும் துஆக்கள் அரபியில் தான் இருக்க வேண்டும் என்பதற்கு அவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் என்ன?
நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் தொழுகையில் அனைத்தையும் அரபியில் தான் ஓதியுள்ளனர். இது தான் அவர்களின் ஆதாரம். இந்த ஆதாரத்தினடிப்படையில் தொழுகையில் கேட்கப்படும் பிரார்த்தனைகள் அரபியில் தான் இருக்க வேண்டும் என்று அவர்கள் வாதிடுகின்றனர். அவர்களிடம் கீழ்க்காணும் கேள்விகளைக் கேட்டால் பதில் இல்லை.
நபியவர்கள் தொழுகையில் மட்டுமின்றி தொழுகை அல்லாத நேரங்களில் செய்த பிரார்த்தனைகளையும் அரபியில் தான் செய்துள்ளனர். அப்படியானால் தொழுகைக்கு வெளியில் கேட்கும் துஆக்களையும் அரபியில் தான் கேட்க வேண்டுமா? தாய் மொழியில் கேட்கக் கூடாதா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜும்ஆப் பேருரை மற்றும் ஏனைய உரைகளை அரபியில் தான் நிகழ்த்தியுள்ளனர். இவர்கள் கூறுகின்ற அதே வாதத்தின் படி குத்பாக்கள் முழுக்க முழுக்க அரபியில் தான் அமைய வேண்டுமா? அரபியல்லாத மொழிகளில் குத்பா நிகழ்த்தக் கூடாதா?
இதற்கெல்லாம் அவர்கள் பதில் சொல்ல முடியாது. அவர்களிடம் இந்தக் கேள்விகளுக்கு பதில் இல்லாமல் இருப்பதே அவர்களின் வாதத்தில் உள்ள பலவீனத்துக்குச் சான்று. நபியவர்களின் தாய்மொழி அரபியாக உள்ளதால் வேறு எந்த மொழியும் அவர்களுக்குத் தெரியாது என்பதால் அவர்களது மார்க்கம் மற்றும் உலகம் சம்பந்தப்பட்ட அனைத்துமே அரபியில் தான் அமைந்திருந்தன.
இனி இதைப் பற்றிய நமது நிலையையும் அதற்கான சான்றுகளையும் தருகின்றோம்.
தொழுகையிலோ, தொழுகைக்கு வெளியிலோ ஓத வேண்டியவை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவற்றைக் கற்றுத் தந்தார்களோ அவற்றில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது. அதை அப்படியே நாம் கூற வேண்டும்.
இது அரபி, அரபியல்லாதது என்ற அடிப்படையில் சொல்லப்படவில்லை. அல்லாஹ்வின் தூதர் கற்றுத் தந்ததில் மாற்றம் எதுவும் செய்யக் கூடாது என்ற அடிப்படையில் சொல்லப்படுகின்றது.
அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த இந்த இடங்களில் இதை ஓத வேண்டும் என்று கற்றுத் தந்திருந்தால் அதைத் தமிழில் ஓதக் கூடாது என்பது மட்டுமின்றி அரபியிலேயே வேறு வார்த்தைகளாக மாற்றியும் ஓதக் கூடாது.
உதாரணமாக அல்லாஹு அக்பர் என்று தக்பீர் கூறி நாம் தொழுகையைத் துவக்க வேண்டும். ஏனெனில் நபியவர்கள் அவ்வாறு தான் துவக்கியுள்ளனர். அர்ரஹ்மானு அகபர் என்று கூறி தொழுகையைத் துவக்கக் கூடாது. அர்ரஹ்மானு அக்பர் என்பதும், அல்லாஹு அக்பர் என்பதும் ஒரே கருத்தையே கூறுகின்றன என்றாலும் அர்ரஹ்மானு அக்பர் என்று தக்பீர் கட்டக் கூடாது.
இதிலிருந்து நாம் அறிவது என்ன? அல்லாஹ்வின் தூதர் கற்றுத் தந்தவை, கற்றுத் தராதவை என்ற அடிப்படையில் தான் இது நோக்கப்படுகின்றதேயன்றி அரபி, அரபியல்லாத மொழி என்ற அடிப்படையில் நோக்கப்படவில்லை. இங்கே தரப்படுகின்ற முக்கியத்துவமும் அரபி மொழிக்கல்ல. அல்லாஹ்வின் தூதருக்குத் தான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உறங்கச் செல்லும் போது ஓத வேண்டிய துஆ ஒன்றை ஒரு நபித்தோழருக்குக் கற்றுத் தந்தார்கள்.
அதில் வ நபிய்யிகல்லதீ அர்ஸல்த்த என்றொரு வாசகமும் இடம் பெற்றிருந்தது. இதன் பொருள் நீ அனுப்பிய நபியை நம்பினேன் என்பதாகும்.
அந்த நபித்தோழர் அதை மனப்பாடம் செய்து நபியவர்களிடம் திரும்ப ஓதிக் காட்டும் போது வ ரஸுலிகல்லதீ அர்ஸல்த்த என்று கூறிவிடுகிறார். நீ அனுப்பிய ரஸுலை நான் நம்பினேன் என்பது இதன் பொருள்.
இரண்டும் ஒரே கருத்தையே சொல்கின்றன.
ஆனாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை ஏற்காமல் அவ்வாறில்லை! வ நபிய்யிகல்லதீ அர்ஸல்த்த என்று கூறுமாறு கட்டளையிட்டார்கள்.
நூல் : புகாரி 247, 6311
அல்லாஹ்வின் தூதர் கற்றுத் தந்தவைகளை அரபியில் கூட மாறுதல் செய்ய இடமில்லை என்பதற்கு புகாரியில் இடம் பெறும் இந்த நிகழ்ச்சி சான்றாக உள்ளது. இந்தச் சான்றுகளின் அடிப்படையிலேயே தொழுகைக்கு உள்ளே ஓத வேண்டியவை, உண்ணும் போதும், உறங்கும் போதும் இன்ன பிற சந்தர்ப்பங்களில் ஓத வேண்டியவை அனைத்திலும் எந்த மாறுதலும் செய்யக் கூடாது என்று சொல்கின்றோம்.
ஆயினும் சில சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு விருப்பமானதைக் கூறிக் கொள்ளலாம் என்று அனுமதி வழங்கியுள்ளதால் அப்போது அவரவர் தமது தாய் மொழியிலேயே அதைக் கூறலாம்
தொழுகைக்குள்ளேயாகட்டும்; வெளியேயாகட்டும் இரண்டுக்கும் இது பொதுவானதே. இந்த அடிப்படையை நன்கு சிந்தனையில் நிறுத்திக் கொண்டு மேலே தொடர்வோம்.
தொழுகையில் தக்பீர் முதல் தஸ்லீம் வரை நபியவர்கள் எதைக் கற்றுத் தந்தார்களோ அதில் எந்த மாறுதலும் செய்யக் கூடாது என்பதில் நமக்கு எந்தக் கருத்து வேறுபாடும் கிடையாது. ஆயினும் தொழுகைக்கு உள்ளேயே சில இடங்களில் நம் விருப்பத்திற்கு ஏற்ப துஆச் செய்ய நபியவர்கள் அனுமதியளித்துள்ளனர்.
நாம் விரும்பியதை நமக்குத் தோன்றியதைக் கேட்கலாம் என்றால் இது எல்லா மொழியினருக்கும் பொதுவானதே. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தராத வார்த்தைகளைப் பொருத்த வரை அரபி மொழியும், தமிழும் சமமே! அரபிக்கென்று தனிச் சிறப்பு எதுவும் கிடையாது. முதலில் இது சம்பந்தமான ஹதீஸ்களைக் காணலாம்.
صحيح البخاري
835 – حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنِ الأَعْمَشِ، حَدَّثَنِي شَقِيقٌ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: كُنَّا إِذَا كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الصَّلاَةِ، قُلْنَا: السَّلاَمُ عَلَى اللَّهِ مِنْ عِبَادِهِ، السَّلاَمُ عَلَى فُلاَنٍ وَفُلاَنٍ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” لاَ تَقُولُوا السَّلاَمُ عَلَى اللَّهِ، فَإِنَّ اللَّهَ هُوَ السَّلاَمُ، وَلَكِنْ قُولُوا: التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، فَإِنَّكُمْ إِذَا قُلْتُمْ أَصَابَ كُلَّ عَبْدٍ فِي السَّمَاءِ أَوْ بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ، أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، ثُمَّ يَتَخَيَّرُ مِنَ الدُّعَاءِ أَعْجَبَهُ إِلَيْهِ، فَيَدْعُو “
ஒருவர் (அத்தஹிய்யாத்து ஓதி முடித்த) பிறகு தனக்கு விருப்பமான துஆவைத் தேர்வு செய்து அதைக் கேட்கட்டும்.
நூல் : புகாரி 835, 6230
صحيح مسلم
924 – حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ وَعُثْمَانُ بْنُ أَبِى شَيْبَةَ وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ إِسْحَاقُ أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ مَنْصُورٍ عَنْ أَبِى وَائِلٍ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ كُنَّا نَقُولُ فِى الصَّلاَةِ خَلْفَ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- السَّلاَمُ عَلَى اللَّهِ السَّلاَمُ عَلَى فُلاَنٍ. فَقَالَ لَنَا رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- ذَاتَ يَوْمٍ « إِنَّ اللَّهَ هُوَ السَّلاَمُ فَإِذَا قَعَدَ أَحَدُكُمْ فِى الصَّلاَةِ فَلْيَقُلِ التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِىُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ فَإِذَا قَالَهَا أَصَابَتْ كُلَّ عَبْدٍ لِلَّهِ صَالِحٍ فِى السَّمَاءِ وَالأَرْضِ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ ثُمَّ يَتَخَيَّرُ مِنَ الْمَسْأَلَةِ مَا شَاءَ ».
அவன் நாடுகின்ற கோரிக்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்.
நூல் : முஸ்லிம்
سنن النسائي
1310 – أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَمَّارٍ الْمَوْصِلِيُّ، عَنْ الْمُعَافَى، عَنْ الْأَوْزَاعِيِّ، ح وَأَنْبَأَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ، عَنْ عِيسَى بْنِ يُونُسَ، وَاللَّفْظُ لَهُ، عَنْ الْأَوْزَاعِيِّ، عَنْ حَسَّانَ بْنِ عَطِيَّةَ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي عَائِشَةَ، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِذَا تَشَهَّدَ أَحَدُكُمْ فَلْيَتَعَوَّذْ بِاللَّهِ مِنْ أَرْبَعٍ: مِنْ عَذَابِ جَهَنَّمَ، وَعَذَابِ الْقَبْرِ، وَفِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، وَمِنْ شَرِّ الْمَسِيحِ الدَّجَّالِ، ثُمَّ يَدْعُو لِنَفْسِهِ بِمَا بَدَا لَهُ “
அவனுக்குத் தோன்றியதைத் தனக்காகக் கேட்கட்டும்.
நூல்கள் : நஸாயி, பைஹகி
அத்தஹிய்யாத்தில் விரும்பியதை ஓதலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இங்கே அனுமதியளிக்கின்றனர்.
ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இந்த அனுமதி பொதுவானதாகும். ஒவ்வொருவனும் அவன் விரும்பியதை அவனுடைய தாய் மொழியில் தான் கேட்க முடியும். இந்த அனுமதியின் அடிப்படையிலே நாம் எந்த மொழியிலும் அத்தஹிய்யாத்தின் இறுதியில் துஆச் செய்யலாம் என்கிறோம்.
விரும்பியதைக் கேட்கலாம் என்று ஹதீஸ் தெளிவாக இருந்தும் சிலர் இதற்கு புது மாதிரியான விளக்கம் தரக் கூடும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தவைகளில் விரும்பியதைக் கேட்கலாம்; நாம் நமது இஷ்டத்திற்கு கேட்கக் கூடாது என்பதே இதன் கருத்து என்று சமாளிப்பர்.
இந்த விளக்கம் தவறானதாகும். நஸாயியிலும், பைஹகீயிலும் அவனுக்குத் தோன்றியதை எல்லாம் கேட்கட்டும் என்று தெளிவாக உள்ளது.
நான் கற்றுத் தந்தவைகளில் விரும்பியதைக் கேட்கலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூற வேண்டியதில்லை. நபியவர்கள் கற்றுத் தந்தவைகளில் எதையும் கேட்கலாம் என்பது இதைக் கூறாமலேயே அனைவருக்கும் தெரிந்தது தான்.
அவன் நாடியதை, அவனுக்குத் தோன்றியதைக் கேட்கலாம் என்று ஹதீஸ் தெளிவாக இருக்கும் போது ஹதீஸில் இல்லாத ஒரு வார்த்தையை வலிந்து சேர்க்க அனுமதியில்லை.
இந்த ஆதாரத்தின் அடிப்படையில் நாம் கூறுகிறோம். அத்தஹிய்யாத்தில் ஓத வேண்டியவைகளை ஓதிய பிறகு தத்தமது தேவைகளை தத்தமது தாய் மொழியில் கேட்கலாம்.