அபூஹனீஃபா இமாம் குறித்து இரட்டை நிலை ஏன்?
72 கூட்டம் என்ற தொடர் உரையில் அபூஹனீஃபா அவர்களை நீங்கள் விமர்சனம் செய்தீர்கள். ஆனால் மற்ற இடங்களில் பேசும் போது அபூஹனீஃபா இமாமைப் புகழ்ந்து பேசியுள்ளீர்கள். இந்த இரட்டை நிலை ஏன்?
ஒருவரின் தவறான கருத்தை விமர்சனம் செய்தால் அவரது நல்ல கருத்தை வரவேற்கக் கூடாது என்பது சரியான வாதம் அல்ல. நீங்களும், நாங்களும் உலகில் உள்ள அத்தனை பேரும் வாழ்க்கையில் இந்த நிலையைத் தான் மேற்கொண்டு வருகிறோம்.
ஒரு குடும்ப்ப் பஞ்சாயத்தை விசாரிக்கும் போது கணவனுக்கு எதிராக மனைவியும், மனைவிக்கு எதிராக கணவனும் குறைகளும் சொல்வார்கள். சில நிறைகளையும் சொல்வார்கள். இது தான் எதார்த்தநிலை.
அப்சல்குருவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவும் விஸ்வரூபம் படத்துக்கு எதிராகவும் நான் தெரிவித்த கருத்துக்களைப் பாராட்டிய சிலர் வேறுபல விஷயங்களில் என்னைத் திட்டித் தீர்க்கிறார்கள். இதுதான் மனிதனின் இயல்பு. இதில் தவறு ஒன்றும் கிடையாது.
யூதர்களிலும், கிறித்தவர்களிலும் உள்ள சில நல்ல தன்மைகளைப் பாராட்டும் இறைவன் அவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டி கண்டிக்கவும் செய்கிறான்.
நம்பிக்கை கொண்டோருக்கு மனிதர்களிலேயே கடுமையான பகைவர்களாக யூதர்களையும், இணை கற்பிப்போரையும் (முஹம்மதே!) நீர் காண்பீர்! “நாங்கள் கிறித்தவர்கள்” எனக் கூறியோர் நம்பிக்கை கொண்டோருக்கு மிக நெருக்கமான நேசமுடையோராக இருப்பதையும் நீர் காண்பீர்! அவர்களில் பாதிரிகளும், துறவிகளும் இருப்பதும், அவர்கள் ஆணவம் கொள்ளாது இருப்பதுமே இதற்குக் காரணம்.
திருக்குர்ஆன் 5:82
இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) அருளப்பட்டதை அவர்கள் செவியுறும் போது உண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வடிவதை நீர் காண்பீர். “எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே சான்று கூறுவோருடன் எங்களைப் பதிவு செய்வாயாக!” என அவர்கள் கூறுகின்றனர்.
திருக்குர்ஆன் 5:83
நம்பி, ஒரு குவியலையே ஒப்படைத்தால் உம்மிடம் திருப்பித் தருவோரும் வேதமுடையோரில் உள்ளனர். நீர் நம்பி ஒரு தங்கக் காசை ஒப்படைத்தால் நிலையாய் நின்றால் தவிர உம்மிடம் திருப்பித் தராதோரும் அவர்களில் உள்ளனர். “எழுதப்படிக்கத் தெரியாத சமுதாயத்தின் விஷயத்தில் எங்கள் மீது எந்தப் பாவமும் ஏற்படாது” என்று அவர்கள் கூறுவதே இதற்குக் காரணம். அல்லாஹ்வின் பெயரால் அறிந்து கொண்டே அவர்கள் பொய்யை இட்டுக்கட்டிக் கூறுகின்றனர்.
திருக்குர்ஆன் 3:75
இப்படி அதிகமான சான்றுகளைக் காணலாம்.
அபூஹனீஃபா அவர்களை எது விஷயத்தில் நாம் புகழ்ந்து பேசினோம்?
சரியான ஹதீஸ்களைப் பின்பற்றுங்கள் எனக் கூறினார். இதன் மூலம் தன்னைப் பின்பற்ற வேண்டாம் என்று மக்களுக்குச் சொன்னார். அவருக்கும், மத்ஹபுக்கும் சம்மந்தம் இல்லை என்று சொல்லும் போது அவரைப் பாராட்டி இருக்கிறோம். அதில் மாற்றம் இல்லை.
மார்க்க மஸாயில்களில் ஹதீஸை விட அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் என்றும், பதவிகளையும், பொறுப்புகளையும் பெற்றுக் கொண்டு மன்னர்களுக்கு நெருக்கமாக இருந்ததையும் அறிஞர்கள் குறை சொன்னதை 72 கூட்டம் என்ற உரையில் எடுத்துக் காட்டினேன்.
இரண்டும் சரியானது தான். இது இரட்டை நிலையாகாது
About Author
Sadhiq
அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.
[அல்குர்ஆன் 112:1]