அன்னிய ஆண்களிடம் பெண்கள் பேசலாமா?
பெண்கள் அந்நிய ஆண்களிடம் சில ஒழுங்குமுறைகளைக் கடைபிடித்து பேசுவதை மார்க்கம் தடை செய்யவில்லை.
இத்தா இருக்கும் பெண்கள் கூட பிற ஆண்களிடம் நேரடியான திருமணப் பேச்சைத் தவிர்த்து ஏனைய நல்ல பேச்சுக்களைப் பேசலாம் என்று குர்ஆன் தெரிவிக்கின்றது.
காத்திருக்கும் காலகட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றம் இல்லை. அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள்! உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள்! உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!
அல்குர்ஆன் 2 : 235
மூஸா அலை அவர்களிடம் சில பெண்கள் பேசிய சம்பவத்தை திருக்குர்ஆன் மக்களுக்கு எடுத்துக் கூறுகிறது. இது அனுமதி என்ற காரணத்தினால் தான் இச்சம்பவம் குர்ஆனில் கூறப்படுகிறது.
மத்யன் நகரின் நீர்த்துறைக்கு அவர் வந்த போது மக்களில் ஒரு கூட்டத்தினர் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்ததைக் கண்டார். அவர்களை விட்டு இரண்டு பெண்கள் ஒதுங்கி நிற்பதையும் கண்டு “உங்கள் விஷயம் என்ன?” என்று கேட்டார். “மேய்ப்பவர்கள் விலகும் வரை நாங்கள் தண்ணீர் இறைக்க முடியாது. எங்கள் தந்தை வயதான முதியவர்” என்று அவர்கள் கூறினர். அவர்களுக்காக அவர் தண்ணீர் இறைத்துக் கொடுத்தார். பின்னர் நிழலை நோக்கிச் சென்று, “என் இறைவா! எனக்கு நீ வழங்கும் நன்மையில் தேவையுள்ளவனாக இருக்கிறேன்” என்றார். அவர்களில் ஒருத்தி வெட்கத்துடன் நடந்து அவரிடம் வந்து, “நீர் எங்களுக்குத் தண்ணீர் இறைத்துத் தந்ததற்குரிய கூலியை உமக்குத் தருவதற்காக என் தந்தை உம்மை அழைக்கிறார்” என்றாள். அவரிடம் வந்து (தன்னைப் பற்றிய) செய்திகளைக் கூறினார். “நீர் பயப்படாதீர்! அநீதி இழைக்கும் கூட்டத்திடமிருந்து நீர் வெற்றி பெற்று விட்டீர்” என்று அவர் கூறினார்.
அல்குர்ஆன் 28 : 23, 24, 25
நபிகள் நாயகம் (ஸல்) காலத்து முஸ்லிம் பெண்கள் தங்கள் சந்தேகங்களை நபிகள் நாயகத்திடம் கேட்டு தெளிவு பெற்றிருக்கிறார்கள். பெண்கள் ஆண்களிடம் பேசக் கூடாது என்றிருந்தால் அவர்களின் சந்தேகங்களுக்கு நபியவர்கள் விளக்கமளித்து பேசியிருக்க மாட்டார்கள்.
பெண்கள் அந்நிய ஆண்களிடம் தேவை ஏற்படும் நேரத்தில் பேசலாம் என்றாலும் கொஞ்சி, குழைந்து, பேசக் கூடாது. அவ்வாறு பேசினால் அது ஆண்களை வழி தவறச் செய்துவிடும் என்று திருக்குர்ஆன் எச்சரிக்கின்றது.
நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.
அல்குர்ஆன் 33 : 32