அடுத்தவருக்குத் தர வேண்டிய உரிமைகளை உரிய முறையில் வழங்குவோம்
பிறரிடம் இருந்து தமக்குக் கிடைக்க வேண்டிய உரிமையைப் பெறுவதில் முனைப்பாக இருக்கும் பல பேர், அவர்கள் அடுத்தவருக்குத் தர வேண்டிய உரிமைகளைக் கொடுக்காமல் ஏமாற்றுகிறார்கள். இவ்வாறு சக மனிதர்களுக்குத் தர வேண்டிய உரிமையை நிறைவேற்றாமல் புறக்கணிப்பது பெரும்பாவம் என்று எச்சரித்த நபியவர்கள், இந்த விஷயத்தில் எப்போதும் சரியாக நடந்து கொண்டார்கள். எந்த வகையிலும் பிறருடைய உரிமையைப் பறிக்கவும் இல்லை; பாழ்படுத்தவும் இல்லை.
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம், அவர்களுக்குத் தான் கொடுத்த (ஒட்டகத்)தைத் திருப்பித் தரும்படி கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் கடுமையாகப் பேசினார். ஆகவே, நபித்தோழர்கள் அவரை தண்டிக்க விரும்பினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, “(அவரை தண்டிக்க வேண்டாம்;) விட்டு விடுங்கள். ஏனெனில், ஒருவர் தனக்குக் கடன் தர வேண்டியவரிடம் கடுமையாகப் பேச உரிமையுண்டு.
அவருக்காக ஓர் ஒட்டகத்தை வாங்கி அவரிடமே கொடுத்து விடுங்கள்’’ என்று கூறினார்கள். நபித் தோழர்கள், “அவருக்குத் தர வேண்டிய ஒட்டகத்தின் வயதை விட அதிக வயதை உடைய ஒட்டகம் தான் எங்களிடம் இருக்கின்றது’’ என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அதையே வாங்கி அவருக்குக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், உங்களில் நல்ல முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர்’’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (2390)
எப்போதும் நியாயமாக நடக்கும் நபியவர்கள் தமது கடனைத் திருப்பித் தராமல் இருக்கப் போவதில்லை. உரிய நேரத்தில் கண்டிப்பாகக் கொடுத்து விடுவார்கள். இது புரியாமல் கடன் கொடுத்தவர் நபியிடம் கடுமையாக நடந்து கொள்கிறார்.
தன்னிடம் முறைதவறி நடந்தவரைத் தண்டிக்காமல் பொறுமையாக இருந்தார்கள். அவருடைய உணர்வுகளைப் புரிந்து கொண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கடன் கொடுத்தவருக்கு அதைக் கேட்கும் உரிமையும் உள்ளது என்று சொல்லி, சிறந்த முறையில் கடனை நிறைவேற்றினார்கள். இதே போன்று இன்னொரு சம்பவத்தைப் பாருங்கள்.
நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் இருந்த சமயத்தில் பழகிய (நாட்டு) ஆடு ஒன்றின் பாலை அவர்களுக்காகத் கறந்து, என் வீட்டில் இருந்த கிணற்றின் தண்ணீரை அதில் கலந்து, அந்தப் பால் பாத்திரத்தை நபி(ஸல்) அவர்களுக்கு நான் கொடுத்தேன். நபி(ஸல்) அவர்கள் அதை அருந்திவிட்டு, தம் வாயிலிருந்து அந்தப் பாத்திரத்தை எடுத்தார்கள்.
(அப்போது) அவர்களின் இடப்பக்கத்தில் அபூபக்கர்(ரலி) அவர்களும் வலப் பக்கத்தில் ஒரு கிராமவாசியும் இருந்தனர். எனவே, உமர் (ரலி), நபி(ஸல்) அவர்கள் எங்கே மீதிப் பாலை அந்த கிராமவாசிக்குக் கொடுத்து விடுவார்களோ என்று அஞ்சி, ‘உங்களிடம் இருப்பதை அபூபக்ருக்கு கொடுத்து விடுங்கள், இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறினார்கள்.
ஆனால், நபி(ஸல்) அவர்கள் அதைத் தம் வலப்பக்கம் இருந்த கிராமவாசிக்கே கொடுத்துவிட்டு, ‘(முதலில்) வலப்பக்கம் இருப்பவரிடமே கொடுக்க வேண்டும். வலப் பக்கமிருப்பவரே (இடப் பக்கமிருப்பவரை விட) அதிக உரிமையுடையவர்’ என்றார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி (2352)
இந்த சம்பவத்தை நன்கு கவனியுங்கள். இடது புறத்தில் இருப்பவர் அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள். தமது உடலாலும் உடமைகளாலும் இஸ்லாமிய மார்க்கத்திற்கு பக்கபலமாகத் துணை நின்ற பிரபலமான நபித்தோழர். வலது பக்கம் இருப்பவர் இளைஞர் ஒருவர்.
பொதுவாக சபையில் பரிமாறும் போது, விநியோகிக்கும் போது வலது பக்கம் இருப்பவர்களுக்கே முன்னுரிமை தர வேண்டும். அது அவர்களுக்குரிய உரிமை என்று நபிகளார் கற்றுக் கொடுத்துள்ளார்கள். அந்த உரிமையைத் தட்டிப் பறிக்கும் வகையில் அண்ணலார் நடந்து கொள்ளவில்லை. தமது உற்ற தோழருக்காக வழக்கத்திற்கு மாற்றம் செய்யவில்லை. வலது பக்கம் இருப்பவருக்கான உரிமையைக் கொடுத்து விடுகிறார்கள்.
பலரும் கலந்து வாழ்கிற உலகில் சிலர் கட்டளையிடும் இடத்தில் இருப்பார்கள். சிலர் கட்டுப்படும் இடத்தில் இருப்பார்கள். அதிகாரத்தில் இருப்பவர்கள் ஆணையிடும் போது அவருக்குக் கீழ் இருப்பவர்கள் அதை ஏற்று நடந்து கொள்ள வேண்டும்.
கைகட்டி வேலை செய்கிற, கைநீட்டி சம்பளம் வாங்குகிற இடத்தில் இருப்பதால் அவர்களுக்கு தர வேண்டிய உரிமைகளைத் தராமல் விட்டுவிடக் கூடாது. இந்தத் தெளிவு இல்லாத காரணமாக பல இடங்களில் பிரச்சனைகள் வெடிக்கின்றன. இதோ ஒரு செய்தியைப் பாருங்கள்.
மதீனாவாசிகளின் பேரீச்சந் தோப்புகளுக்கு நீர் பாய்ச்சி வந்த ‘ஹர்ரா’ (என்னுமிடத்திலிருந்த) கால்வாய் விஷயத்தில் அன்சாரிகளில் ஒருவர் (என் தந்தை) ஸுபைர்(ரலி) அவர்களுடன் சச்சரவு செய்தார். அந்த அன்சாரித் தோழர், ‘தண்ணீரைத் திறந்து ஓட விடு’ என்று கூறினார். ஸுபைர்(ரலி) (தண்ணீரைத் திறந்து விட) மறுத்துவிட்டார்கள்.
(இந்தத் தகராறையையொட்டி) நபி(ஸல்) அவர்களிடம் தீர்ப்புக்காக இருவரும் சென்ற பொழுது நபி(ஸல்) அவர்கள், ‘ஸுபைரே! உங்கள் தோப்புக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டு, பிறகு உங்கள் பக்கத்துத் தோப்புக்காரருக்கு தண்ணீரை அனுப்பி விடுங்கள்’ என்று கூறினார்கள்.
இதனைக் கேட்ட அந்த அன்சாரித் தோழர் கோபம் கொண்டு, ‘உங்கள் அத்தை மகன் என்பதாலா (அவருக்கு முதலில் நீர் பாய்ச்சிக் கொண்டு பிறகு எனக்குத் திறந்து விடும்படி அவருக்குச் சாதகமாக தீர்ப்புக் கூறுகிறீர்கள்)?’ என்று கேட்டார். இதைச் செவியுற்ற நபி(ஸல்) அவர்களின் முகம் நிறம் மாறி (கோபத்தால் சிவந்து)விட்டது. அவர்கள் ஸுபைர்(ரலி) அவர்களை நோக்கி, ‘உங்கள் மரங்களுக்கு நீர் பாய்ச்சிக் கொள்ளுங்கள். பிறகு, வரப்புகளைச் சென்றடையும் வரை தண்ணீரைத் தடுத்து நிறுத்திக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள்.
(என்னிடம்) இந்நிகழ்ச்சியைக் கூறிவிட்டு ஸுபைர்(ரலி), ‘இறைவன் மீதாணையாக! ‘(நபியே!) உங்களுடைய இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் தங்களுக்கிடையே ஏற்பட்ட பிணக்குகளில் உங்களை நீதிபதியாக ஏற்ற பின்னர், நீங்கள் அளிக்கிற தீர்ப்புக் குறித்து தம் உள்ளங்களில் எத்தனைய அதிருப்தியும் கொள்ளாமல், முற்றிலும் அதற்கு அடிபணியாதவரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டார்கள்’ என்னும் (திருக்குர்ஆன் 04:65) திருக்குர்ஆன் வசனம் இந்த விவகாரத்தில்தான் இறங்கியது என்று எண்ணுகிறேன்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரலி)
நூல்: புகாரி (2359) (2362)
எவருடைய தோட்டம் முதலில் இருக்கிறதோ அவர் கால்வாய் நீரைத் தமக்குத் தேவையான அளவு பயன்படுத்திக் கொண்டு அடுத்த தோட்டத்திற்குத் திறந்து விட்டு விட வேண்டும். இது அன்றைய காலத்தில் இருந்த பொது விதி. ஆனால், முதல் தோட்டக்காரர் தேவையான தண்ணீரைப் பிடிப்பதற்கு முன்னரே இரண்டாவது தோட்டக்காரர் தண்ணீரைத் திறந்துவிடும்படி சண்டை போடுகிறார். நீண்ட சச்சரவுக்குப் பிறகு நபியிடம் சென்று தீர்ப்பு கேட்கிறார்கள்.
பொது வழக்கின் படி, தேவையான தண்ணீரை எடுத்துக் கொண்டு மடையைத் திறந்து விடுமாறு முதல் தோட்டக்காரருக்கு நபியவர்கள் கட்டளை இடுகிறார்கள். அடுத்தவரோ அந்த நியாயமான தீர்ப்பை ஏற்றுக் கொள்ள மறுத்த போது அவரைக் கண்டித்து அல்லாஹ் வசனத்தை அருளினான்.
இதிலுள்ள பாடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதலில் தண்ணீர் பெறும் உரிமை யாருக்கு இருக்கிறது என்றுதான் கவனித்தார்களே தவிர, உறவு முறையை அல்ல. இதைப் புரிந்து கொண்டு எல்லோரும் எல்லா விஷயத்திலும் பிறருக்கான உரிமையை அவசியம் தந்து விட வேண்டும். இதன்படி பெண்களுக்குக் கொடுக்க வேண்டிய உரிமையையும் வழங்க வேண்டும்.
இதோ நபிகளாரைப் பாருங்கள்.
கன்னி கழிந்த பெண்ணாயிருந்த என்னை என் தந்தை (ஒருவருக்கு) மணமுடித்து வைத்தார்கள். எனக்கு அதில் விருப்பமில்லை. எனவே, நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். (என் தந்தை முடித்து வைத்த) அந்தத் திருமணத்தை நபி (ஸல்) அவர்கள் ரத்துச் செய்தார்கள்.
அறிவிப்பவர்: கன்ஸா பின்த் கிதாம் (ரலி)
நூல்: புகாரி (6945)
திருமணத்திற்காக ஆணிடம் சம்மதம் கேட்பது போன்று பெண்ணிடமும் சம்மதம் கேட்டறிய வேண்டும். வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்யும் உரிமையை ஆணுக்கு அளிப்பது போன்று பெண்ணுக்கும் அளித்தார்கள், நபியவர்கள்.
பெண்ணுக்குரிய இந்த உரிமையோ பல சித்தாந்தங்களில் இன்றளவும் மறுக்கப்படுகிறது. ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) திருமணம் செய்து கொள்ளும் உரிமையைப் பெண்களுக்கு வழங்கியது போன்று விவாகரத்து செய்து கொள்ளவும் உரிமை வழங்கினார்கள்.
கணவனுக்கும் மனைவிக்கும் மத்தியில் இணக்கமே இல்லாத காரணமாக, இருவரும் சேர்ந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டால் பெரும்பாலான மதங்களில் விவாகரத்து செய்யும் உரிமையை ஆணுக்கு மட்டும் கொடுக்கிறார்கள். ஆனால், அந்த விவாகரத்து உரிமையைப் பெண்ணுக்கும் அல்லாஹ்வின் தூதர் கொடுத்தார்கள். இன்னும் சொல்லப் போனால், இதைத் தமது குடும்ப விஷயத்தில் செயல்படுத்திக் காட்டினார்கள்.
குடும்பத்தாரின் தேவைக்குப் போக மீதமுள்ள செல்வத்தை நபியவர்கள் நல்வழியில் செல்வழித்து விடுவார்கள். அவசியம் இல்லாமல் எதையும் சேர்த்து வைத்துக் கொள்ள மாட்டார்கள்.
ஆரம்பத்தில், தூதரின் எளிமையைப் புரிந்து கொள்ளாமல் அவரது மனைவிமார்கள் அடிக்கடி அளவுக்கு அதிகமான செல்வத்தைக் கேட்டுத் தொந்தரவு செய்தார்கள். அப்போது தான் சேர்ந்து வாழ்வது அல்லது பிரிந்து விடுவது என்று இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்து கொள்ளுமாறு தமது மனைவியருக்கு நபியவர்கள் உரிமை வழங்கினார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களின் துணைவியருக்கு (அவர்கள் விரும்பினால் தம்முடன் சேர்ந்து வாழலாம்; அல்லது பிரிந்துவிடலாம் என) உரிமையளித்திடுமாறு அல்லாஹ்வின் தூதருக்குக் கட்டளையிட்டப்பட்ட போது, அவர்கள் என்னிடம்தான் முதன்முதலாக விஷயத்தைக் கூறினார்கள்: ‘(ஆயிஷா!) நான் உனக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். (என்று அதைச் சொல்லிவிட்டு,) ‘நீ உன் பெற்றோரிடம் அனுமதி கேட்டுக் கொள்ளும் வரை அவசரப்பட வேண்டாம்’ என்று கூறினார்கள்.
என் பெற்றோர் நபி(ஸல்) அவர்களைப் பிரிந்துவிடும்படி உத்தரவிடப் போவதில்லை என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது. பிறகு அவர்கள், ‘நபியே! உங்கள் துணைவியரிடம் கூறுங்கள்: நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) விரும்புவீர்களாயின், வாருங்கள்! உங்களின் வாழ்க்கைக்க உரியதைக் கொடுத்து நல்லமுறையில் உங்களை விடுவித்து விடுகிறேன்.
ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறு உலகையும் விரும்புவீர்களானால், நிச்சயமாக அல்லாஹ் உங்களிலுள்ள (இத்தகைய) நல்லவர்களுக்காக மகத்தான நற்பலனை தயார் செய்து வைத்துள்ளான்’ எனும் (திருக்குர்ஆன் 33:28) வசனங்களை ஓதினார்கள். அப்போது நான், ‘இது தொடர்பாக என் பெற்றோரிடம் நான் என்ன அனுமதி கேட்பது? நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுமை வீட்டையுமே விரும்புகிறேன்’ என்று சொன்னேன். பிறகு நபி(ஸல்) அவர்களின் இதரத் துணைவியரும் என்னைப் போன்றே செயல்பட்டனர்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி (4786)
அல்லாஹ்வின் தூதருடைய மனைவியாக இருப்பதால் ஈருலகிலும் கிடைக்கும் சிறப்பை மனதில் கொண்டு சேர்ந்து வாழ்வதையே தேர்வு செய்தார்கள். அதன்பிறகு முன்பைக் காட்டிலும் எல்லா விஷயத்திலும் நபிகளாரைப் புரிந்து நடந்து கொண்டார்கள். மணம் செய்யும் உரிமை, விவாகரத்து உரிமை மட்டுமல்ல, சம்பாதிக்கும் உரிமை, சொத்துரிமை என்று ஆண்களுக்கு அளித்தது போன்று பெண்களுக்கும் பல உரிமைகளை நபிகளார் தந்திருக்கிறார்கள்.
குடும்பத்திலும் சமூகத்திலும் பிறருக்குத் தர வேண்டிய உரிமையை முழுமையாகக் கொடுத்ததால் தான் அவரது ஆட்சிக்குக் கீழ் அனைத்து மக்களும் நிம்மதியாக வாழ்ந்தார்கள். இவ்வாறு மற்றவருக்குத் தர வேண்டிய உரிமையை சரியாக வழங்காவிட்டால் பிரச்சனைகள் தலைதூக்கும். இதுதான் இன்று பல நாடுகளில் நடந்து கொண்டிருக்கிறது.
மக்களுக்குப் பல உரிமைகள் இருப்பதாக சட்டப் புத்தகத்தில் மட்டும் எழுதி வைத்துக் கொண்டு நடைமுறையில் பின்பற்றுவது கிடையாது. குறிப்பாக, சிறுபான்மை மக்கள், பிந்தங்கிய மக்களுக்குத் தர வேண்டிய உரிமைகளை மறுக்கிறார்கள். இதனால் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் எதிராகப் போரட்டங்கள், கலவரங்கள் தொடர்ந்து நடக்கின்றன.
ஆனால் இஸ்லாமிய மார்க்கமும், அதைப் போதிக்க வந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், அவரவருக்குரிய உரிமைகளை உரிய விதத்தில் வழங்கியதால் குறுகிய காலத்திலேயே உலகம் போற்றும் உன்னத ஆட்சியைத் தர முடிந்தது.