அகீகா கொடுப்பவர் இறைச்சியை உண்ணலாமா?
அகீகா கொடுப்பவர்கள் அறுக்கப்பட்ட பிராணியின் இறைச்சியை உண்பதற்கு எந்தத் தடையும் இல்லை. ஹஜ்ஜ‚ப் பெருநாளன்று அறுக்கப்படும் குர்பானிப் பிராணியின் இறைச்சியை குர்பானிக் கொடுப்பவர் உண்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தடைவிதிக்கவில்லை. குர்பானியும் அகீகாவும் இறைவனுக்கு செலுத்தப்படுகின்ற வணக்கமாக இருப்பதால் இவை இரண்டுக்கும் ஒரேவகையான சட்டம்தான்.
ஹஜ்ஜின் போது அறுக்கப்படுகின்ற பிராணியை அறுப்பவர்கள் தானும் உண்டு ஏழை எளியவர்களுக்கும் உண்ணக்கொடுக்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகின்றான் இவ்வாறே அகீகா விஷயத்திலும் நடந்துகொள்ள வேண்டும்.
அதை நீங்களும் உண்ணுங்கள்! கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கொடுங்கள்!
(அல்குர்ஆன்22 : 28)
ஏழாவது நாளுக்குப் பிறகு அகீகா கொடுக்கலாமா?
அகீகா என்பது குழந்தைப் பிறந்த ஏழாவது நாள் கொடுக்கப்பட வேண்டும் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் கூறுகிறது. ஆனால் சில பலவீனமான ஹதீஸ்களில் பதினான்காம் நாளும் இருபத்து ஒன்றாம் நாளும் கொடுக்கலாம் என்று வந்துள்ளது.
அகீகா (வாக கொடுக்கப்படும் பிராணி) ஏழாவது நாளும் பதினான்காம் நாளும் இருபத்து ஓன்றாம் நாளும் அறுக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி),
நூல் : பைஹகீ (பாகம் 9 பக்கம் 303)
இந்த ஹதீஸ் அல்முஃஜமுல் அவ்ஸத் மற்றும் அல்முஃஜமுஸ்ஸஹீர் போன்ற நூல்களிலும் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இஸ்மாயீல் பின் முஸ்லிம் என்ற பலகீனமானவர் இடம்பெறுகிறார்.
பெற்றோர்கள் தனக்கு அகீகாக் கொடுக்காததால் பெரியவராக ஆன பின்பு தனக்குத் தானே அகீகா கொடுக்கலாமா? என்று சிலருக்கு சந்தேகம் ஏற்படுகிறது. இவ்வாறு செய்வதற்கு நபிமொழிகளில் ஆதாரம் எதுவும் இல்லை.
அகீகா என்ற வணக்கம் குழந்தை பிறந்து ஏழாவது நாள் செய்யப்பட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் அன்று தான் இவ்வணக்கத்தை செய்ய வேண்டும். இந்த நாளைக் கடந்தப் பிறகு கொடுத்தால் அது சாதாரண தர்மமாக ஆகும். அகீகா கொடுப்பதற்குரிய நன்மை கிடைக்காது.
அகீகா கடமையில்லாத காரணத்தினால் கடமையானவைகளை பின்பு நிறைவேற்றுவதைப் போன்று இதை நிறைவேற்ற வேண்டியதில்லை. நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்திற்கு வந்தப் பின் தனக்காகவோ அல்லது அவர்களது தோழர்களுக்காகவோ அகீகா கொடுக்கவில்லை. நபித்தோழர்களும் அவ்வாறு செய்யவில்லை. எனவே இந்த புதிய வழிமுறையை நாம் ஏற்படுத்க்கூடாது.
நபி (ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்பட்ட பிறகு தனக்காக அகீகா கொடுத்தார்கள் என்று சில ஹதீஸ்கள் வருகின்றது. இவையனைத்தும் பலவீனமான செய்திகளாகும்.