ஃபித்ரா யாருக்குக் கடமை?
—————————————-
நோன்பு நோற்காதவர்கள் ஏழைகள் மகிழ்வுடன் பெருநாள் கொண்டாட உதவுதல் என்ற நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம். இதற்கான ஆதாரம் ஆரம்பமாக நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸில் காணலாம்.

அந்த ஹதீஸில் அடிமைகள், சிறுவர்கள் மீதும் கடமை என்று கூறப்பட்டுள்ளது. அடிமைகளுக்குச் சொத்து எதுவும் இருக்காது.

அவர்கள் மீது பொருளாதாரக் கடமைகளும் இருக்காது. அது போல் சிறுவர்களுக்கும் எந்தக் கடமையும் இருக்க முடியாது. அவ்வாறிருந்தும் அவர்கள் மீதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடமை என்று கூறியுள்ளார்கள்.

யார் இவர்களைப் பராமரிக்கும் பொறுப்பில் இருக்கிறார்களோ அவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்ற கருத்திலேயே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கடமையாக்கியிருக்க முடியும். எனவே ஒருவர் தமக்காகவும், தமது மனைவிக்காகவும், தமது பராமரிப்பில் உள்ள தமது பிள்ளைகளுக்காகவும், தமது பராமரிப்பில் உள்ள பெற்றோருக்காகவும் பெருநாள் தர்மத்தை வழங்க வேண்டும் என்று புரிந்து கொள்ளலாம்.

தனது பராமரிப்பில் முஸ்மல்லாத பிள்ளைகள், பெற்றோர்கள் இருந்தால் அவர்கள் சார்பாக இதைச் செலுத்த வேண்டியதில்லை. ஏனெனில் ஆரம்பமாக நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸில் முஸ்லிம்கள் மீது கடமையாக்கியதாக தெவாகக் கூறப்பட்டுள்ளது.

எந்த அளவு வசதி உள்ளவர்கள் மீது கடமை என்று ஹதீஸ்களில் கூறப்படவில்லை. எனவே தமது தேவை போக யாருக்கெல்லாம் இதைக் கொடுக்க சக்தி உள்ளதோ அவர்கள் மீது கடமை என்று புரிந்து கொள்ளலாம்.

\ஃபித்ராவாக எதைக் கொடுக்கலாம்?\

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் தங்கக் காசுகள், வெள்ளிக் காசுகள் புழக்கத்தில் இருந்தாலும் நோன்புப் பெருநாள் தர்மமாக காசுகள் கொடுக்கப்பட்டதில்லை. உணவுப் பொருட்கள் தான் கொடுக்கப்பட்டன.

நபித் தோழர்களின் அன்றைய உணவாக இருந்த பேரீச்சம் பழம், தீட்டப்படாத கோதுமை (தோல் நீக்கப்படாதது) ஆகியவற்றைத் தான் கொடுத்து வந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இப்படித் தான் கட்டளையிட்டிருந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் உணவில் தீட்டப்படாத கோதுமையில் ஒரு ஸாவு, பேரீச்சம் பழத்தில் ஒரு ஸாவு, பாலாடைக் கட்டியில் ஒரு ஸாவு, உலர்ந்த திராட்சை (கிஸ்மிஸ்) யில் ஒரு ஸாவு என்று நாங்கள் நோன்புப் பெருநாள் ஸகாத்தை வழங்கி வந்தோம்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரி (ரலி)
நூல்: புகாரி 1506

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் ஒரு ஸாவு உணவை நோன்புப் பெருநாளில் வழங்கி வந்தோம். எங்களின் அன்றைய உணவு, தீட்டப்படாத கோதுமை, உலர்ந்த திராட்சை, பாலாடைக் கட்டி, பேரீச்சம் பழம் ஆகியவை தான்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரி (ரலி)
நூல்: புகாரி 1510

இவ்விரு ஹதீஸ்களையும் ஆராயும் போது பொதுவாக உணவுப் பொருட்கள் வழங்குவது தான் முக்கியம்; அன்றைக்கு எது உணவாக இருந்ததோ அதை வழங்கினார்கள் என்று புரிந்து கொள்ளலாம்.

மேலே கூறப்பட்டுள்ள பொருட்களில் கோதுமை மட்டும் தான் நம்மில் சிலருக்கு உணவாக அமையுமே தவிர உலர்ந்த திராட்சையோ, பேரீச்சம் பழமோ, பாலாடைக் கட்டியோ நமக்கு (இந்தியர்களுக்கு) உணவாக ஆகாது.

எனவே நமது உணவாக எது இருக்கின்றதோ அதைத் தான் பெருநாள் தர்மமாகவும் கொடுக்க வேண்டும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

நமது உணவுப் பழக்கமாக அரிசியே அமைந்துள்ளதால் அதைத் தான் கொடுக்க வேண்டும்.

அரிசிக்குப் பதிலாக அதற்கான பணத்தைக் கொடுக்கலாமா? சிலர் அவ்வாறு கொடுக்கக் கூடாது எனக் கூறினாலும் கொடுக்கலாம் என்பதே சரியானதாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் தங்கமும், வெள்ளிக் காசுகளும் புழக்கத்திலிருந்தது. அதைக் கொடுக்காமல் தானியத்தை ஏன் கொடுக்க வேண்டும் என்று இவர்கள் கேட்கின்றனர். இவர்களின் வாதப்படி ரூபாய்களுக்கு ஸகாத் இல்லை என்று கூற வேண்டிய நிலை ஏற்படும்.

ஏனெனில் ஸகாத்தில் தங்கம், வெள்ளி, கால்நடைகள், நகைகள் பற்றித் தான் ஸகாத் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ரூபாய்கள் பற்றி இல்லை. ரூபாய்க்கும் தங்கத்துடன் மதிப்பிட்டு ஜகாத் வழங்குவது போல் ஃபித்ராவின் போதும் மதிப்பிடலாம்.

இன்று எந்த உணவுப் பொருளையும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் (காசு இருந்தால்) வாங்கிக் கொள்ள இயலும்.

அன்றைய நபித் தோழர்கள் பேரீச்சம் பழத்தையே உணவாக உட் கொண்டார்கள். நாம் வெறும் அரிசியை மட்டும் உணவாகச் சாப்பிட முடியாது. அரிசி உணவாக ஆவதற்கு குழம்பு போன்றவை தேவைப்படுகிறது.

பணமாகக் கொடுத்தால் தான் தேவையான அளவுக்கு தேவையானதை வாங்கிக் கொள்ள இயலும். இதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அன்றைக்குப் பண்டமாற்று முறை நடை முறையில் இருந்ததால் உபரியாக உள்ள பேரீச்சம் பழத்தைக் கொடுத்துவிட்டு கோதுமையை வாங்கிக் கொள்ள முடியும். இன்றைக்கு நம்மிடம் உள்ள அரிசியைக் கொடுத்து விட்டு தேவையானதை எந்தக் கடையிலும் வாங்க முடியாது.

நோன்புப் பெருநாள் தர்மத்தைக் கடமையாக்கிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏழைகள் அன்றைய பொழுதை மகிழ்வுடன் கழிப்பதைக் காரணமாகக் கூறியுள்ளார்கள்.

ஏழைகள் மகிழ்வோடு அந்த நாளைக் கொண்டாட அரிசியை விடப் பணமே சிறந்ததாகும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பணமாகக் கொடுக்கும் போது நாம் எதை உணவாக உட்கொள்கிறோமோ அந்த அரிசியை அதன் விலையை அளவு கோலாகக் கொள்ள வேண்டும்.
———————
ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *