ஃபித்ரா எவ்வளவு கொடுக்க வேண்டும்?
தமது பராமரிப்பில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு ஸாவு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்திருப்பதை முன்னர் எடுத்துக் காட்டிய ஆதாரங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
ஸாவு என்பது நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நடைமுறையில் இருந்த ஒரு முகத்தல் அளவையாகும். இரண்டு கைகளை இணைத்து வைக்கும் போது எவ்வளவு கொள்ளுமோ அந்த அளவு முத்து எனப்படும். இது போல் நான்கு முத்துக்கள் கொண்ட அளவு ஒரு ஸாவு எனப்படும்.
அதாவது இரு கைகள் கொள்ளுமளவுக்கு அரிசியை நான்கு தடவை அள்னால் எவ்வளவு வருமோ அது தான் ஒரு ஸாவு எனப்படும்.
இந்த அளவு அரிசியை அல்லது அதற்கான கிரயத்தை வழங்க வேண்டும். நமது பராமரிப்பில் பத்துப் பேர் இருந்தால் பத்து ஸாவு தர்மம் வழங்க வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் தோல் நீக்கப்படாத கோதுமை தான் உணவாகப் பயன்டுத்தப்பட்டு வந்தது. தோல் நீக்கப்பட்ட கோதுமை மிகவும் அரிதாகவே பயன் படுத்தப்பட்டு வந்தது.
தீட்டப்படாத கோதுமையில் ஒரு ஸாவு கொடுத்து வந்த நபித் தோழர்கள் தீட்டப்பட்ட கோதுமையில் அரை ஸாவு என நிர்ணயித்துக் கொண்டனர்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1511
இந்தச் செய்தியில் கருத்து வேறுபாடு உள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தீட்டிய கோதுமை, தீட்டாத கோதுமை என்று வித்தியாசம் காட்டவில்லை. அன்றைய உணவுப் பழக்கத்தில் இருந்த தீட்டாத கோதுமையை தீட்டிய கோதுமையுடன் மதிப்பிட்டு நபித் தோழர்கள் இவ்வாறு தீர்மானம் செய்தனர்.
நபித் தோழர்களின் நடவடிக்கை எப்படி ஆதாரமாக அமையும் என்ற கேள்வி தான் இரு வேறு கருத்துக்குக் காரணம்.
(நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தீட்டாத கோதுமையில் அரை ஸாவு என்று நிர்ணயம் செய்ததாகச் சில அறிவிப்புகள் இருந்தாலும் அவை அனைத்துமே பலவீனமானவையாக உள்ளன)
நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் உணவுப் பொருட்களில் ஒரு ஸாவு, பேரீச்சம் பழத்தில் ஒரு ஸாவு, தீட்டப்படாத கோதுமையில் ஒரு ஸாவு, உலர்ந்த திராட்சையில் ஒரு ஸாவு என வழங்கி வந்தோம். முஆவியா (ரலி) (பொறுப்புக்கு) வந்து, சிரியா நாட்டின் தோல் நீக்கப்பட்ட கோதுமையும் புழக்கத்துக்கு வந்த போது இதில் ஒரு முத்து இதில் இரு முத்துக்களுக்கு நிகரானது என்று கூறினார்.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)
நூல்: புகாரி 1508
முஆவியா (ரலி) யின் தீர்ப்பை நிராகரித்து நான் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வழங்கி வந்தவாறு ஒரு ஸாவு தான் வழங்குவேன் என்று அபூஸயீத் (ரலி) கூறியதாக மற்றொரு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மற்றொரு அறிவிப்பில் பேரீச்சம் பழத்தில் நான்கு முத்து அளவு சிரியா நாட்டின் தோல் நீக்கிய கோதுமையில் இரு முத்து அளவுக்கு நிகரானதாகும் என்று கூறப்பட்டுள்ளது.
அதாவது முஆவியா (ரலி) அவர்கள் இரண்டு வகையான கோதுமைகளையும் ஒப்பீடு செய்து இந்த முடிவுக்கு வரவில்லை. மாறாக பேரீச்சம் பழத்தின் ஒரு ஸாவுக்கு தீட்டிய கோதுமையாக இருந்தால் அரை ஸாவும், தீட்டாத கோதுமையாக இருந்தால் ஒரு ஸாவும் கிடைத்து வந்தன. இதை அளவு கோலாகக் கொண்டு தான் அந்த முடிவுக்கு வந்தனர்.
உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக்கு வந்து, தோல் நீக்கிய கோதுமை அதிகமாகப் புழக்கத்துக்கு வந்த போது (பேரீச்சம் பழம், உலர்ந்த திராட்சை, தீட்டப்படாத கோதுமை) இவற்றில் ஒரு ஸாவு என்பது தீட்டப்பட்ட கோதுமையின் அரை ஸாவு என்று நிர்ணயித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: அபூதாவூத் 1375
இந்த அறிவிப்பைச் சிலர் குறை கூறினாலும் இது ஆதாரப்பூர்வமான அறிவிப்பு தான். அப்துல் அஸீஸ் பின் அபீ ரவ்வாத் என்பவர் முர்ஜியா கொள்கையுடையவர் என்பதால் அவர் உண்மையாளர் என்ற போதும் அவரது ஹதீஸைச் சிலர் நிராகரித்துள்ளனர்.
ஹதீஸ் துறையில் நம்பகமான ஒருவர், தவறான அபிப்பிராயம் கொண்டதற்காக அலட்சியப்படுத்தப்படக் கூடாது என்று யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான் கூறியுள்ளார். இது எல்லா அறிஞர்களும் ஏற்றுக் கொண்ட அளவு கோல் தான்.
தீட்டப்படாத கோதுமையை விட தீட்டப்பட்ட கோதுமை இரு மடங்கு மதிப்புள்ளதாக இருந்ததைக் கண்ட உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு முடிவு செய்தனர்.
உமர் (ரலி) இரண்டு வகையான கோதுமைகளை ஒப்பிட்டு எடுத்த முடிவும், பேரீச்சம் பழத்துடன் கோதுமையை ஒப்பிட்டு முஆவியா (ரலி) எடுத்த முடிவும் சரியான முடிவாகத் தான் தெரிகிறது.
தீட்டப்படாத கோதுமையைத் தீட்டினால் அதில் பாதி தான் தேறும் என்பதாலும், இரண்டுக்குமுள்ள விலை வித்தியாசத்தையும் கருத்தில் கொண்டு எடுத்த முடிவை மறுக்க முடியாது.
தீட்டிய கோதுமையும், தீட்டாத கோதுமையும் சமமானது தான் என்ற அறிவுக்குப் பொருந்தாத முடிவை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளாது. எல்லாம் அறிந்த இறைவனின் மார்க்கத்தில் இத்தகைய முடிவுகள் இருக்கவே முடியாது.
எனவே தீட்டப்படாத கோதுமையில் ஒரு ஸாவு என்பதும், தீட்டிய கோதுமையில் அரை ஸாவு என்பதும் தான் சரியான முடிவாக இருக்க முடியும்.
கோதுமையை உணவாகக் கொண்ட பகுதிகளில் தான் இது போன்ற வேறுபாடுகள் இருக்க முடியும். அரிசியை உணவாகக் கொள்ளும் தமிழக மக்களிடம் கருத்து வேறுபாடு இருக்க எந்த முகாந்திரமும் இல்லை.
தீட்டிய கோதுமையும், தீட்டாத கோதுமையும் தரத்தில் வித்தியாசமாக இருந்தாலும் இரண்டையும் அப்படியே மாவாக்கி உணவாக உட்கொள்ள முடியும்.
ஆனால் இங்கே நெல்லை அப்படியே உணவாக்க முடியாது. நெல்லை மாவாக்கி உணவாக்க முடியாது. மாறாக தோலை நீக்கிய பிறகே உணவாக்க முடியும். எனவே அரிசியில் தோல் நீக்கியது, தோல் நீக்காதது என்றெல்லாம் வேறுபடுத்த முடியாது.
இருவகைக் கோதுமைகளும் அப்படியே உணவாக உட்கொள்ளப்பட்டது போல் நெல்லும் உணவாகக் கொள்ளப்பட்டால் கருத்து வேறுபாட்டுக்கு ஒரு அடிப்படையாவது இருந்திருக்கும். அந்த அடிப்படை அரிசியைப் பொருத்த வரை கிடையாது.
எனவே ஷாபிகளானாலும், ஹனபிகளானாலும், அவர்களது கொள்கைப் படி பார்த்தாலும் ஒரு ஸாவு அரிசியை வழங்குவது தான் சரியானதாகும். அவர்களது மத்ஹபுகளின் படி பார்த்தாலும் அரிசியைப் பொறுத்த வரை ஒரு கருத்தைத் தான் இரு சாராரும் கூற வேண்டும்
———————-
ஏகத்துவம்