ஃபாத்திஹா அத்தியாயத்தின் சிறப்புக்கள்

திருக்குர்ஆனின் 114 அத்தியாயங்களில் முதல் அத்தியாயமான அல் ஃபாத்திஹா அத்தியாயம் தனிச்சிறப்புக்கள் பலவற்றைப் பெற்றுள்ளது. திருக்குர்ஆனின் ஒரு பகுதியாக இந்த அத்தியாயம் அமைந்திருந்தாலும் திருக்குர்ஆனிலேயே இந்த அத்தியாயத்தின் சிறப்பு பற்றி ஒரு இடத்தில் கூறப்படுகின்றது. வேறு எந்த அத்தியாயத்திற்கும் வழங்கப்படாத தனிச்சிறப்பாகும் இது.

நிச்சயமாக நாம் உமக்குத் திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்களையும் மகத்தான குர்ஆனையும் வழங்கியுள்ளோம். (15:87)

இந்த அத்தியாயத்தின் சிறப்பு பற்றி ஏராளமான நபிமொழிகளும் உள்ளன. இந்த அத்தியாயத்தைச் சிறப்பித்துக் கூறிய அளவுக்கு வேறு எந்த அத்தியாயத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறியதில்லை.

நான் ஒருமுறை தொழுது கொண்டிருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். நான் தொழுது முடிக்கும் வரை அவர்களு(டைய அழைப்பு)க்கு மறுமொழி கூறவில்லை. (தொழுது முடித்த பின்) அவர்களிடம் சென்றேன். (நான் அழைத்தவுடன்) வருவதற்கு என்ன தடை? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டனர்.

அல்லாஹ்வின் தூதரே! (நீங்கள் என்னை அழைக்கும் போது) நான் தொழுது கொண்டிருந்தேன் என்று நான் கூறினேன். நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு உயிர் அளிக்கக் கூடிய ஒரு காரியத்திற்காக இந்தத் தூதர் அழைக்கும் போது இத்தூதருக்கும், அல்லாஹ்வுக்கும் பதிலளியுங்கள்! (அல்குர்ஆன் 8:24) என்று அல்லாஹ் கூறவில்லையா? என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டுவிட்டு, இந்தப் பள்ளியில் இருந்து நீ புறப்படுவதற்கு முன் குர்ஆனில் உள்ள மகத்தான ஒரு அத்தியாயத்தை உனக்கு நான் கற்றுத் தருகிறேன் என்று கூறி எனது கையையும் பிடித்துக் கொண்டனர்.

அவர்கள் பள்ளியிலிருந்து புறப்பட எத்தனித்த போது அல்லாஹ்வின் தூதரே! குர்ஆனில் உள்ள மகத்தான ஒரு அத்தியாயத்தைக் கற்றுத் தருவாதாகக் கூறினீர்களே! என்று நினைவுபடுத்தினேன். அவர்கள் ஆம்! அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் என்பது தான் அந்த அத்தியாயம் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் பின் அல் முஅல்லா(ரலி); நூல்: புகாரி (4474, 4647, 4703, 4704)

நபித்தோழர்களில் சிலர் அரபுப் பிரதேசத்தின் ஒரு கூட்டத்தினரிடம் வந்து தங்கினார்கள். ஆனால் அந்தக் கூட்டத்தினர் அவர்களுக்கு விருந்தளித்து உபசரிக்கவில்லை. இந்த நிலையில் அந்தக் கூட்டத்தின தலைவனை (தேள்) கொட்டி விட்டது. உங்களிடம் (இதற்கு) மருந்தோ, அல்லது மந்திரிப்பவரோ உள்ளனரா? என்று அவர்கள் கேட்டனர். அதற்கு நபித்தோழர்கள் நீங்கள் எங்களுக்கு விருந்தளித்து உபசரிக்கவில்லை. எனவே எங்களுக்கு ஒரு கூலியை நீங்கள் நிர்ணயித்தால் தான் நாங்கள் உங்களுக்கு உதவுவோம் என்றார்கள்.

அந்தக் கூட்டத்தினர் சில ஆடுகள் தருவதாகக் கூறினார்கள். அதன் பின்னர் (எங்களைச் சேர்ந்த) ஒருவர் அல்ஹம்து சூராவை ஓதி (கடிபட்ட இடத்தில்) உமிழ்ந்தார். இதனால் அவர் குணமடைந்து விட்டார். அவர்கள் ஆடுகளைக் கொடுத்தனர். நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இது பற்றி விசாரிக்காது இதைப் பெற மாட்டோம் என்று சில நபித்தோழர்கள் கூறிவிட்டு பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இதைப் பற்றிக் கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) இதைக் கேட்டுச் சிரித்தார்கள். அல்ஹம்து சூரா ஓதிப் பார்க்கத்தக்கது என்று எப்படி உனக்குத் தெரியும்? என்று கேட்டுவிட்டு, எனக்கும் அந்த ஆடுகளில் ஒரு பங்கைத் தாருங்கள்! என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ(ரலி); நூல்: புகாரி 2276

மற்றொரு அறிவிப்பில்

நபித்தோழர்கள் அல்லாஹ்வின் வேதத்துக்குக் கூலி பெற்று விட்டீரே! என்று மந்திரித்தவரைக் கண்டித்தனர். இது பற்றி நபித்தோழர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்ட போது, கூலிகள் பெறுவதற்கு மிகவும் அருகதை உள்ளது அல்லாஹ்வின் வேதம் தான் என்று கூறினார்கள்.

இந்த இரண்டு அறிவிப்புகளும் புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தக் கருத்தைக் கொண்ட ஹதீஸ் முஸ்லிமிலும் உள்ளது.

இவ்வேதத்தின் தோற்றுவாயை (ஃபாத்திஹாவை) ஓதாதவருக்கு தொழுகை இல்லை! என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி); நூல்: புகாரி 756

எவர் உம்முல் குர்ஆன் (திருக்குர்ஆனின் தாய் என்று பொருள்படும் ஃபாத்திஹாவை) ஓதவில்லையோ அவரது தொழுகை குறைவுபட்டதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி); நூல்: முஸ்லிம் 598

அடியார்கள் மீது அல்லாஹ் விதித்துள்ள கடமைகளில் தலையாயது தொழுகை தான். அதற்கு நிராக எந்தக் கடமையும் இல்லை. அந்தத் தொழுகையே ஃபாத்திஹா அத்தியாயம் ஓதப்படாவிட்டால் தொழுகையாக அங்கீகரிக்கப்படாது என்பதிலிருந்து ஃபாத்திஹா அத்தியாயத்தின் சிறப்பு எத்தகையது என்பதை உணர முடியும்.

தொழுகையில் ஓதுவதை எனக்கும் என் அடியானுக்குமிடையில் பங்கிட்டுள்ளேன். என் அடியான் கேட்டவை அவனுக்கு உண்டு.

அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் (அகில உலகங்களையும் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்) என்று ஒருவன் கூறும்போது என்னை என் அடியான் (புகழ வேண்டிய விதத்தில்) புகழ்ந்து விட்டான் என்று அல்லாஹ் கூறுகிறான்.

அவன் அர்ரஹ்மானிர்ரஹீம் (அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்) என்று கூறும்போது (என்னைப் பாராட்ட வேண்டிய விதத்தில்) என் அடியான் பாராட்டி விட்டான் என்று அல்லாஹ் கூறுகிறான்.

 

மாலிகியவ்மித்தீன் (நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதி) என்று கூறும்போது என்னைக் (கௌரவப்படுத்த வேண்டிய விதத்தில்) கௌரவப்படுத்தி விட்டான் என்று அல்லாஹ் கூறுகிறான்.

இய்யாக நஃபுது வஇய்யாக நஸ்தயீன் (உன்னையே வணங்குகிறோம் உன்னிடமே உதவி தேடுகிறோம்) என்று கூறும்போது இது தான் எனக்கும் என் அடியானுக்கும் இடையே உள்ள உறவாகும் என்று அல்லாஹ் கூறுகிறான்.

இஹ்தினஸ் ஸிராதல் முஸ்தகீம்… (இறைவா) நீ எங்களை நேரான வழியில் செலுத்துவாயாக! எவர்களுக்கு நீ பாக்கியம் புரிந்தாயோ அவர்களின் வழியில் எங்களை (செலுத்துவாயாக) எவர்கள் (உன்னால்) கோபிக்கப்படவில்லையோ அவர்களின் வழியிலும், எவர்கள் வழிகெடவில்லையோ அவர்களின் வழியிலும் (எங்களை செலுத்துவாயாக!) எனக் கூறும்போது என் அடியானின் இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: முஸ்லிம் 598

இந்த ஹதீஸ் ஃபாத்திஹா அத்தியாயத்தின் சிறப்பை உணர்த்துவதோடு, அதன் அமைப்பையும் நமக்குத் தெளிவாக்குகின்றது.

முதல் மூன்று வசனங்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றும் விதமாக அருளப்பட்டுள்ளன. இந்த வசனங்களை ஒருவன் கூறும் போது அல்லாஹ்வை உரிய விதத்தில் புகழ்ந்தவனாக இறைவனால் கருதப்படுகிறான்.

நான்காவது வசனம், இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவைத் தெளிவாக்குகின்றது. அல்லாஹ்வை எஜமானனாக ஏற்றுக் கொண்டு அவனை மட்டுமே வணங்கி வருவதும் அவனிடம் மட்டுமே உதவி தேடுவதும் தான் அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் உள்ள உறவாகும். எஜமான் அடிமை என்ற உறவைத் தவிர வேறு எந்த உறவும் இறைவனுக்கும் மனிதனுக்குமிடையில் இல்லை என்பதை இந்த வசனம் விளக்குகின்றது.

இறுதியில் இடம் பெற்றுள்ள வசனங்கள் இறைவனிடம் மிக முக்கியமான கோரிக்கையை முன் வைக்கும் விதமாக அருளப்பட்டுள்ளன. அந்தக் கோரிக்கை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற உத்திரவாதத்தை இந்த ஹதீஸ் அளிக்கின்றது.

அல்லாஹ் இந்த அத்தியாயத்தை மூன்று பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளதை இந்த ஹதீஸ் மூலம் அறிகிறோம். அந்த அடிப்படையிலேயே அல்ஃபாத்திஹா அத்தியாயத்தின் விரிவுரையை நாமும் காண்போம்.

ஃபாத்திஹா அத்தியாயம் உள்ளிட்ட அனைத்து அத்தியாயங்களின் துவக்கத்திலும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று எழுதப்பட்டுள்ளது. 9-வது அத்தியாயத்தின் துவக்கத்தில் மட்டும் எழுதப்படவில்லை. இந்தச் சொற்றொடரை ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் முதல்வசனம் என்று எடுத்துக் கொள்வதா? அடுத்த அத்தியாயம் ஆரம்பிக்கிறது என்பதற்கு அடையாளமாக எடுத்துக் கொள்வதா என்பதை முதலில் அறிந்து விட்டு இந்த அத்தியாயத்தின் விளக்கத்தில் நுழைவோம்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *