❓ நோன்பு வைத்தால் நமக்கு ஆரோக்கியம் கிடைக்கும் என்று நபிகளார் சொன்னார்களா?
✅ இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் இல்லை
நோன்பு பிடியுங்கள், ஆரோக்கியம் பெறுங்கள்:
போர் செய்யுங்கள் கனீமத் பொருட்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்! நோன்பு பிடியுங்கள் ஆரோக்கியத்தைப் பெறுங்கள்! பயணம் செய்யுங்கள் செல்வத்தை பெறுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : தப்ரானீ – அல்அவ்ஸத்
இச்செய்தியில் இடம் பெறும் சுஹைர் பின் முஹம்மத் என்பவர் பலவீனமானவராவார்.
ஸுஹைர் பின் முஹம்மதுவிடமிருந்து சிரியாவைச் சார்ந்தவர்கள் அறிவிப்பவது மறுக்கப்பட வேண்டியவையாகும். அவரிடமிருந்து பஸராவைச் சார்ந்தவர்கள் அறிவிப்பது ஆதாரப்பூர்வமானதாகும் என்று புகாரி கூறுகிறார்கள்.
சுஹைர் இடமிருந்து சிரியாவைச் சார்ந்தவர்கள் அறிவிப்பதில் மறுக்கப்பட வேண்டியவைகள் உள்ளன என்று அஹ்மத் அவர்களும் கூறியுள்ளார்கள்.
நூல் ; தஹ்தீபுத் தஹ்தீப்
சுஹைர் பின் முஹம்மத் என்பவரிடமிருந்து அறிவிப்பவர் முஹம்மத் பின் சுலைமான் பின் அபிதாவூத் ஆவார். இவர் ஹிரான் பகுதியைச் சார்ந்தவர். ஹிரான் என்பது சிரியாவை பகுதியைச் சார்ந்ததாகும்.
ஹிரான் பகுதியில் உள்ளவர்கள் சிரியாவைச் சார்ந்தவர்கள்.
நூல் : ஷரஹுல் அகீதத்துத் தஹாவிய்யா
எனவே இந்தச் செய்தி சிரியா நாட்டவர் மூலம் அறிவிக்கப்படுவதால் இது சரியான செய்தி அல்ல.
இதே செய்தி அலீ (ரலி) அவர்கள் வழியாக இப்னு அதி அவர்களின் அல்காமில் என்ற நூலில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானது அல்ல. இதில் இடம்பெறும் ஹுஸைன் பின் அப்துல்லாஹ் என்பவர் பொய்யராவார்.
நோன்பு பிடியுங்கள் ஆரோக்கியமாக இருங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அலீ (ரலி)
நூல் : அல்காமில்
ஹுஸைன் பின் அப்துல்லாஹ் என்பவரை மாலிக் பொய்யர் என்று கூறியுள்ளார்கள். அபூஹாத்திம் அவர்கள், இவர் ஹதீஸ் துறையில் விடப்படவேண்டியவர், பொய்யர் என்று கூறியுள்ளார்கள். இவர் நம்பகமானவர் இல்லை, உறுதியானவரும் இல்லை என்று இப்னு மயீன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
இவர் மறுக்கப்படவேண்டியவர், பலவீனமானவர் என்று புகாரி அவர்கள் கூறினார்கள். இவர் மதிப்பற்றவர் என்று அபூஸுர்ஆ மற்றும் அபூதாவூத் ஆகியோர் கூறியுள்ளார்கள். இவர் நம்பகமானவர் இல்லை, இவருடைய ஹதீஸ்கள் எழுதப்படாது என்று நஸாயீ அவர்கள் கூறியுள்ளார். இவர் மதிப்பற்றவர் பொய்யர் என்று இப்னுல் ஜாரூத் அவர்கள் கூறியுள்ளார்கள்.
நூல் : லிஸானுல் மீஸான்
நோன்பு பிடியுங்கள் ஆரோக்கியத்தைப் பெறுங்கள் என்ற செய்தி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வழியாகவும் இப்னு அதீ அவர்களின் அல்காமில் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுவும் ஆதாரப்பூர்வமான செய்தி அல்ல.
இச்செய்தியில் இடம்பெறும் மூன்றாவது அறிவிப்பாளர் நஹ்ஷல் பின் ஸயீத் என்பவர் பொய்யுரைப்பவர் என்று குற்றம் சாட்டப்பட்டவர்.
நஹ்ஷல் பின் ஸயீத் என்பவர் விடப்படவேண்டியவர், இவரை பொய்யர் என்று இஸ்ஹாக் பின் ராஹவைஹி குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல் :தக்ரீபுத் தஹ்தீப்
நோன்பு பிடிப்பதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்றாலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இக்கருத்தைச் சொன்னார்கள் என்பதற்கு ஆதாரம் இல்லை.
———————
ஏகத்துவம்