ஹிஜ்ரத்தின் போது நபிகளாருடன்

நபி (ஸல்) அவர்கள் மக்காவில் வாழ்ந்த போது இணைவைப்பாளர்கள் அவர்களுக்கு ஏராளமான இடயூறுகளை ஏற்படுத்தினார்கள். அப்போது ஊருக்கும், உலகத்திற்கும் அஞ்சாமல் ஓடோடி வந்து பெருமானாரைக் காத்தவர் தான் அபூபக்ர் (ரலி) அவர்கள்.

உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இணை வைப்பவர்கள் அல்லாஹ்வின் தூதருக்கு இழைத்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது எது? என்று நான் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் (ஒரு முறை மக்காவில்) உக்பா பின் அபீ முஐத் என்பவன் நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் நிலையில் வந்து தன் போர்வையை அவர்களுடைய கழுத்தில் போட்டு அதை (அவர்களின் மூச்சு திணறும்படி) கடுமையாக நெறித்ததை நான் பார்த்தேன்.

அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து நபி (ஸல்) அவர்களை விட்டு உக்பாவை (தம் கையால்) தள்ளினார்கள்.

அப்போது என் இறைவன் அல்லாஹ் தான் என்று சொல்லும் காரணத்திற்காகவா ஒரு மனிதரை நீங்கள் கொல்கிறீர்கள்? அவரோ தம் இறைவனிடமிருந்து உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்திருக்கின்றார் என்று சொன்னார்கள்.

நூல் : புகாரி (3678)

அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் மதீனா புறப்படத் தயாரானார்கள். அந்தப் புனிதப் பயணத்தில் தம் நலனைக் காட்டிலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நலனைக் கவனத்தில் கொண்டு ஒரு தாய் தன் பிள்ளையைக் கவனிப்பது போல் நபி (ஸல்) அவர்களை அபூபக்ர் (ரலி) அவர்கள் கண்ணும் கருத்துமாய்க் கவனித்துக் கொண்டார்கள்.

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தந்தை (ஆஸிப்) அபூபக்ர் (ரலி) அவர்களிடம் அபூபக்ரே நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மக்காவைத் துறந்து ஹிஜ்ரத் செய்து) சென்ற போது இருவரும் எப்படி (எதிரிகளின் கண்களில் படாமல் சமாளித்துச்) செயல்பட்டீர்கள் என எனக்கு அறிவியுங்கள் என்று சொன்னார்கள்.

(அப்போது) அபூபக்ர் (ரலி) கூறினார்கள் ஆம். நாங்கள் (குகையில் தங்கியிருந்து விட்டு அங்கிருந்து வெளியேறி) எங்களுடைய (அந்த) இரவிலும் அடுத்த நாளின் சிறிது நேரத்திலும் பயணம் செய்து சென்றோம். இறுதியில் நண்பகல் நேரம் வந்து விட்டது.

பாதையில் (வெப்பம் அதிகரித்து) எவரும் நடமாட முடியாதபடி அது காலியாகி விட்டது. அப்போது இது வரை சூரிய வெளிச்சம் படாத நிழல் படர்ந்த நீண்ட பாறை ஒன்று எங்களுக்குத் தென்பட்டது. ஆகவே நாங்கள் அதனிடத்தில் தங்கினோம். நான் நபி (ஸல்) அவர்கள் உறங்குவதற்காகச் என் கையால் ஓரிடத்தை சமப்படுத்தித் தந்தேன்.

மேலும் அதன் மீது ஒரு தோலை விரித்தேன்.அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே உங்களைச் சுற்றிலும் உள்ள சூழலை உங்களுக்காகக் கண்காணித்து வருகிறேன்.

நீங்கள் (கவலையில்லாமல்) உறங்குங்கள் என்று கூறினேன். அவ்வாறே அவர்கள் உறங்கினார்கள். அவர்களைச் சுற்றிலுமுள்ள சூழலைக் கண்காணித்தபடி நான் புறப்பட்டேன்.

அப்போது ஆட்டிடையன் ஒருவன் தன் ஆடுகளுடன் (நாங்கள் தங்கியுள்ள அந்தப்) பாறையை நோக்கி நாங்கள் (ஓய்பெடுக்க) விரும்பியதைப் போன்று அவனும் (ஓய்வெடுக்க) விரும்பியபடி வந்து கொண்டிருப்பதைக் கண்டேன். உடனே இளைஞனே நீ யாருடைய பணியாள் என்று கேட்டேன்.

அவன் மதீனாவாசிகளில் ஒருவரின் (பணியாள்) அல்லது மக்கா வாசிகளில் ஒருவருடைய (பணியாள்) என்று பதிலளித்தான். நான் உன் ஆடுகளிடம் பால் ஏதும் இருக்கிறதா? என்று கேட்டேன்.

அவன் ஆம் என்று சொன்னான். நான் நீ (எங்களுக்காக) பால் கறப்பாயா? என்று கேட்டேன். அவன் சரி (கறக்கிறேன்) என்று சொல்லிவிட்டு ஆடு ஒன்றைப் பிடித்தான். (ஆட்டின்) மடியை (அதில் படிந்துள்ள( மண்ணையும் முடியையும் தூசுகளையும் நீக்கி உதறிக்கொள் என்று சொன்னேன்.

அவன் உட்பக்கம் கடையப்பட்ட ஒரு மரப்பாத்திரத்தில் சிறிதளவு பாலைக் கறந்தான். என்னுடன் தண்ணீருள்ள ஒரு தோல் பாத்திரம் இருந்தது.

நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து நீரருந்தி தாகம் தணித்துக் கொண்டு உளூ செய்துகொள்வதற்காக நான் அதை அவர்களுடன் சுமந்து வந்திருந்தேன். நான் நபி (ஸல்) அவர்களிடம் (அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது) சென்றேன்.

அவர்களை எழுப்ப நான் விரும்பவில்லை. (எனினும்) அவர்களிடம் நான் சென்ற நேரமும் (தூக்கத்திலிருந்து) அவர்கள் எழுந்த நேரமும் ஒன்றாயிருந்தது. நான் தண்ணீரை (மஜ்ப் பாத்திரத்திலிருந்து) பாலில் ஊற்றினேன்.

அதன் அடிப்பகுதி குளிர்ந்து போகும் வரை இவ்வாறு ஊற்றினேன். பிறகு நான் பருகுங்கள் அல்லாஹ்வின் தூதரே என்று சொன்னேன். அவர்கள் நான் திருப்தியடையும் வரை பருகினார்கள். பிறகு நாம் புறப்படுவதற்கான நேரம் வரவில்லையா? என்று கேட்டார்கள்.

நான் ஆம் (நேரம் வந்து விட்டது) என்று சொன்னேன். சூரியன் உச்சி சாய்ந்த பிறகு நாங்கள் பயணமானோம்.

நூல் : புகாரி (36156)

ஜ‚ன்துப் பின் சுஃப்யான் (ரலி) அவர்கள் கூறுவதாவது:

அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஸவ்ர்) குகையை நோக்கிச் சென்ற போது அல்லாஹ்வின் தூதரே குகையை நான் சுத்தப்படுத்துகின்ற வரை நீங்கள் (முதலில்) நுழையாதீர்கள் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்கள் குகையில் நுழைந்து (சுத்தப்படுத்திய போது) ஏதோ ஒன்று அவரது கையைத் தாக்கியது. அப்போது அவர்கள் நீ இரத்தம் சொட்டுகின்ற ஒரு விரல் தானே? நீ அடைந்த(பழு)தெல்லாம் அல்லாஹ்வின் பாதையில் தானே என்று கூறிக் கொண்டு இரத்தத்தை தம் விரலிலிருந்து துடைத்தார்கள்.

நூல் : ஜ‚ஸ்வுல் உஸ்பஹானீ பாகம் : 1 பக்கம் : 95

இந்தப் பயணத்தின் போது எதிரிகள் நபி (ஸல்) அவர்களைக் கொல்வதற்காக தேடிக் கொண்டிருந்தார்கள்.

ஸவ்ர் என்ற குகையில் இருவரும் தஞ்சம் புகுந்திருந்த போது குகைக்கு மேல் எதிரிகள் நடமாடிக் கொண்டிருந்தார்கள். தமக்கும் உயிரிலும் மேலான இறைத்தூதருக்கும் ஏதேனும் ஏற்பட்டுவிடுமோ என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கலக்கமுற்ற போது நபி (ஸல்) அவர்களின் ஆறுதல் அவர்களுக்கு உறுதியை ஏற்படுத்தியது.

அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுடன் நான் (ஸவ்ர்) குகையில் இருந்த போது அவர்களிடம் (குகைக்கு மேலிருந்து நம்மைத் தேடிக் கொண்டிருக்கும்) இவர்களில் எவராவது தம் கால்களுக்குக் கீழே (குனிந்து) பார்த்தால் நம்மைக் கண்டு கொள்வார் என்று சொன்னேன். அதற்கு அவர்கள் எந்த இரண்டு நபர்களுடன் அல்லாஹ் மூன்றாமவனாக இருக்கிறானோ அவனைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள் அபூபக்ரே என்று கேட்டார்கள்.

நூல் : புகாரி (3653)

இச்சம்பவத்தை அல்லாஹ்வும் திருக்குர்ஆனில் குறிப்பிடுகிறான்.

நீங்கள் இவருக்கு (முஹம்மதுக்கு) உதவி செய்யாவிட்டால் (ஏக இறைவனை) மறுப்போர் இவரை இருவரில் ஒருவராக வெளியேற்றிய போதும், அவ்விருவரும் அக்குகையில் இருந்த போதும், “நீர் கவலைப்படாதீர்! அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்” என்று அவர் தமது தோழரிடம் கூறிய போதும் அவருக்கு அல்லாஹ் உதவியிருக்கிறான். தனது அமைதியை அவர் மீது இறக்கினான்.

நீங்கள் பார்க்காத படைகளின் மூலம் அவரைப் பலப்படுத்தினான். (தன்னை) மறுப்போரின் கொள்கையைத் தாழ்ந்ததாக அவன் ஆக்கினான். அல்லாஹ்வின் கொள்கையே உயர்ந்தது. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

அல்குர்ஆன் (9 : 40)

இந்தப் புனிதப் பயணித்திற்கு உதவி செய்வதற்காக அபூபக்ர் (ரலி) அவர்கள் தம் மகள் அஸ்மா (ரலி) மற்றும் ஆயிஷா (ரலி) அவர்களையும் தம் மகன் அப்துல்லாஹ் (ரலி) அவர்களையும் தம் அடிமை ஆமிர் பின் ஃபுஹைரா (ரலி) அவர்களையும் பயன்படுத்திக் கொண்டார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபி (ஸல்) அவர்கள் மற்றும் அபூபக்ர் (ரலி) ஆகிய) இருவருக்காகவும் பயண ஏற்பாடுகளைத் துரிதமாகச் செய்து முடித்தோம். இருவருக்கும் ஒரு தோல் பையில் பயண உணவை வைத்தோம். (என் சகோதரி) அஸ்மா பின்த் அபீபக்ர் தம் இடுப்புக் கச்சிலிருந்து ஒரு துண்டைக் கிழித்து அந்தத் தோல் பையின் வாயில் வைத்துக் கட்டினார்.

இதனால் தான் இரு கச்சுடையாள் என்று அவர் பெயர் சூட்டப்பட்டார். பிறகு நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் ஸவ்ர் எனும் மலையிலுள்ள ஒரு குகையை அடைந்தார்கள். அங்கு நபி (ஸல்) அவர்கள் மூன்று இரவுகள் தங்கினார்கள். அவர்களுடன் (என் சகோதரர்) அப்துல்லாஹ் பின் அபீபக்ரும் இரவில் தங்கியிருப்பார். அப்துல்லாஹ் சமயோசித அறிவு படைத்த புத்திக் கூர்மையுள்ள இளைஞராக இருந்தார். அவர் அவ்விருவரிடமிருந்தும் (வைகறைக்கு முந்திய) ஸஹர் நேரத்தில் (விடைபெற்றுப்) புறப்பட்டு விடுவார். இரவு (மக்காவில்) தங்கியிருந்தவரைப் போன்று குரைஷிகளுடன் காலையில் இருப்பார்.

அவர்கள் இருவருக்கெதிரான (குரைஷியர்களின்) சூழ்ச்சிகள் எதுவாயினும் அதைக் கேட்டு நினைவில் இருத்திக் கொண்டு இருள் கலக்கும் நேரத்தில் அவர்களிடம் அதைக் கொண்டு செல்வார். அவர்கள் இருவருக்காகவும் பாலை அன்பளிப்பாகக் கறந்து கொள்ள இரவல் கொடுக்கப்பட்ட ஆடொன்றை அபூபக்ர் (ரலி) அவர்களின் அடிமையான ஆமிர் பின் ஃபுஹைரா அவர்கள் மேய்த்து வந்தார்கள்.

அவர் இரவின் சிறிது நேரம் கழிந்தவுடன் அதனை அவர்கள் இருவரிடமும் ஓட்டி வருவார். அந்தப் பாலிலேயே இருவரும் இரவைக் கழிப்பார்கள். அந்த ஆட்டை ஆமிர் பின் ஃபுஹைரா இரவின் இருள் இருக்கும் போதே விரட்டிச் சென்று விடுவார். இதை மூன்று இரவுகளில் ஒவ்வோர் இரவிலும் அவர் செய்து வந்தார்.

நூல் : புகாரி (5807)

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed