ஹரம் பள்ளிவாசலில் தூங்கலாமா?

தூங்கலாம்

கஅபாவாக இருந்தாலும், அல்லது வேறு எந்த பள்ளிவாசலாக இருந்தாலும், அதில் உறங்குவது தவறான காரியமல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நபித்தோழர்கள் பள்ளியில் உறங்கியுள்ளனர். இதை நபியவர்கள் தடை செய்யவில்லை.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

மணமாகாத, குடும்பமில்லாத இளைஞனாக நான் இருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பள்ளிவாசலில் (தங்கி) நான் உறங்கிக் கொண்டிருந்தேன்.

புகாரி (440)

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் புதல்வி ஃபாத்திமா (ரலி அவர்களின் இல்லத்திற்கு வந்த போது (மருமகனான) அலீ (ரலி) அவர்களை வீட்டில் காணவில்லை. ஆகவே, உன் பெரிய தந்தையின் புதல்வர் எங்கே?” என்று (மகளிடம்) கேட்க, அதற்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள், “எனக்கும் அவருக்கும் இடையே சிறிய மனஸ்தாபம் ஏற்பட்டது. ஆகவே அவர் என்னைக் கோபித்துக் கொண்டு என்னிடம் ஏதும் சொல்லாமல் (வீட்டிலிருந்து) சென்று விட்டார் (அவர் பள்ளிவாசலுக்குள் இருக்கலாம்)” என்று கூறினார்கள்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், “அவர் எங்கே என்று பாருங்கள்” என்றார்கள். உடனே அந்த மனிதர் (சென்றுவிட்டு) வந்து, “அவர் பள்ளிவாசலில் உறங்கிக் கொண்டிருக்கிறார், அல்லாஹ்வின் தூதரே!” என்றார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிக்குள்) வந்தபோது தனது மேலங்கி முதுகிலிருந்து (தரையில்) விழுந்து மேனியில் மண் படிந்திருக்கும் நிலையில் அலி (ரலி) ஒருக்களித்துப் படுத்திருக்கக் கண்டார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களின் மேனியிலிருந்த மண்ணைத் துடைத்தவாறே “எழுந்திருங்கள், மண்ணின் தந்தையே! எழுந்திருங்கள், மண்ணின் தந்தையே!!” என்று கூறலானார்கள்.

புகாரி (441)

(மேனியில் மண் படிந்திருந்ததால் மண்ணின் தந்தையே என்று செல்லமாக அழைத்தனர்)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினர்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் (நாள்) இரவு இஷாத் தொழுகையைத் தாமதப்படுத்தினார்கள். (பள்ளியில் எதிர்ப்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த) மக்கள் உறங்குவதும் விழிப்பதும் மீண்டும் உறங்குவதும் விழிப்பதுமாக இருந்தனர்.

புகாரி (571)

ரமலான் மாதம் பத்து நாட்கள் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் இஃதிகாஃப் இருந்துள்ளனர். சில நபித்தோழர்களூம் இஃதிகாப் இருந்துள்ளனர். அவர்கள் தூங்குவது உள்ளிட்ட அனைத்துக் காரியங்களையும் பள்ளிவாசலில் தான் செய்துள்ளனர்.

பள்ளிவாசலில் படுத்து உறங்குவதற்கு இது போல் இன்னும் பல ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed