ஸஹீஹான ஹதீஸை மறுக்கும் விதிகள் ஹதீஸ் கலையில் உண்டா ? (01)

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை மறுப்பவர்களைப் பார்த்து ஹதீஸ்களை மறுக்கிறார்கள் என்று குறை சொல்லக்கூடியவர்கள் தங்களை அறிந்தோ அறியாமலோ அவர்களும் பல ஹதீஸ்களை மறுக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், நாம் மறுப்பது திருமறைக் குர்ஆனுக்கு மாற்றமாக இருக்கிறது என்ற காரணத்தினால் ஆகும். ஆனால் அவர்கள் மறுப்பதோ ஹதீஸ்கலை விதிக்கு மாற்றமாக இருப்பதினால் ஆகும்.

ஹதீஸ்கலை விதிகளுக்கு முரணாகிறது என்று மறுப்பதை விட குர்ஆனுக்கு முரணாகிறது என்று கூறி மறுப்பது மிகவும் உறுதியானது என்பதை இங்கே அவர்கள் மறந்து விடுகிறார்கள்.

நம்மைப் பார்த்து இவர்கள் “நவீன முஃதஸிலாக்கள், காரிஜியாக்கள்” என்று வசைபாடுகிறார்கள். முஃதஸிலாக்கள் குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று கூறி ஹதீஸ்களை மறுத்ததால் அந்த விதியையே மறுக்க வேண்டும் என்று வாதிடுகின்றார்கள்.

இந்த வாதத்தில் அவர்கள் உண்மையாளர்கள் எனில், முஃதஸிலாக்கள், அல்லாஹ் ஒருவன் என்று கூறுகிறார்கள். அதற்கு மாற்றமாக இவர்கள் கூறத் துணிவார்களா?

மார்க்க விஷயத்தில் முஃதஸிலாக்களும், காரிஜியாக்களும் எதைக் கூறியிருக்கிறார்கள் என்று கவனித்து, அதற்கு நேர் எதிராகக் கூறுவது அறிவார்ந்த செயலா? அல்லது அதில் குர்ஆனும் ஹதீசும் என்ன கூறுகிறது என்று முடிவு செய்வது அறிவார்ந்த செயலா?

நம்மைக் குறை கூறுபவர்கள், ஹதீஸ் கலையின் விதிகளின் அடிப்படையில் எவ்வாறு ஹதீஸ்களை மறுக்கிறார்கள் என்று கூறுவதற்கு முன்னால் இஸ்லாத்தின் ஓர் அடிப்படையை இங்கே பதிவுசெய்கிறோம்.

குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் பாதுகாப்பு தன்மை

இஸ்லாம் என்ற மாளிகையில் இரு மாபெரும் தூண்களான குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் பாதுகாப்புத் தன்மை ஒரே சமமானதாக இல்லையென்பது யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.

இவ்வாறு நாம் கூறுவதினால் ஹதீஸ்கள் என்றாலேயே சந்தேகத்திற்கு இடமானது என்பது நமது வாதமல்ல.

மாறாக, குர்ஆனில் எவ்வித தவறோ, குறையோ, கலப்படமோ, கூட்டலோ, குறைத்தலோ, திரித்தலோ, மாற்றலோ இருக்கவே முடியாது என்பதை நாம் அனைவரும் ஒருமித்த கருத்தோடு ஏற்றுக்கொள்கிறோம்.

அதற்கு, இலட்சக்கணக்கான நபித்தோழர்கள் சான்று பகர்கிறார்கள். அதற்கடுத்து, அதற்கடுத்து என்று பல தலைமுறையினர் அதை உறுதிப்படுத்துகிறார்கள்.

அதைவிட, படைத்தவனே அதைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறான்.

“இந்த உபதேசத்தை நாமே இறக்கினோம். இதை நாமே பாதுகாப்போம்”.

(அல்குர்ஆன் – 15:9)

ஆனால் ஹதீஸ்கள், குர்ஆனைப் போன்று அல்லாமல் வேறு முறையில் பாதுகாப்பைப் பெற்றுள்ளது. அதாவது குர்ஆனிற்கும், ஹதீஸிற்கும் மத்தியில் பாதுகாப்புத் தன்மையில் ஏற்றத்தாழ்வு இருக்கிறது என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மை.

அதனால் தான் குர்ஆனுடைய வசனத்தை யாரேனும் கூறினால் அது நம்பகமானதா என்று ஆராய்வதற்கு அணுவளவும் இடமின்றி அதை அப்படியே தங்குதடையின்றி உடனே ஏற்றுக்கொள்கிறோம்.

ஆனால், ஹதீஸ்கள் என்று யாராவது கூறினால் அந்தச் செய்தி சரியானது தானா?

அதனை அறிவிப்பவரின் நம்பகத்தன்மை எவ்வாறு?

அவருடைய குலம் என்ன?

கோத்திரம் என்ன?

அவர் எந்தக் காலத்தில் வாழ்ந்தவர்?

அவருக்கு அறிவித்தவர் யார்?

அவருடைய நம்பகத்தன்மை என்ன?

நபி (ஸல்) அவர்களுடைய செய்தியை அறிவிப்பதற்கு அவர் தகுதியானவரா?

என்று சல்லடை போட்டு வேறு யாருடைய வாழ்க்கையையும் இந்த அளவிற்கு ஆராய்ந்ததில்லை என்று சொல்லுமளவிற்கு அவர் மீது கழுகுப் பார்வைகள் சுமத்தப்படுகிறது.

அத்துடன் விட்டுவிடாமல் அந்தச் செய்தியைப் பற்றியும் ஆய்வுசெய்து, இதே போன்ற வேறு செய்திகளுக்கு மாற்றமாக இந்த செய்தி இருக்கிறதா? அல்லது

குர்ஆனுடைய ஏதேனும் வசனத்தின் கருத்திற்கு மாற்றமாக இது இருக்கிறதா?

என்று நமக்கு முன்னால் வாழ்ந்த ஹதீஸ்கலை முன்னோடிகளான பல இமாம்கள் அதுபற்றிய சட்டங்களை நமக்கு வகுத்து தந்துள்ளார்கள்.

அந்தச் சட்டங்களை இன்று உலகமே ஏற்றுக்கொண்டுதான் இருக்கிறது.

ஆனால், சில இடங்களில் அது தெளிவாகப் பேசப்படாமல் மூடலாக விடப்பட்டதின் காரணத்தினால், இன்று ஹதீஸ் கலையை சரியான ஆய்வுக் கண்ணோட்டத்தோடு அணுகாத சிலர் அறிவிப்பாளர் வரிசை சரியாக இருக்கிறது என்ற ஒரு விதி மட்டுமே ஒரு ஹதீஸ் சரியானது என்பதற்கு ஆதாரமாகும் என்று கூறுகின்றனர்.

“அதனுடைய இஸ்னாத் (அறிவிப்பாளர் வரிசை) மாத்திரம்தான் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியது, அதன் மத்தன் (ஹதீஸின் கருத்து) என்ன கருத்தை தருகிறது என்பதை ஆய்வு செய்யக்கூடாது, அப்படி ஆய்வுசெய்வது நம்மை ஹதீஸ் மறுப்புக் கொள்கையில் கொண்டு சேர்த்து விடும், இது போன்ற ஒரு விதி ஹதீஸ்கலையில் எங்குமே கிடையாது, இந்த விதியை எந்த நல்லறிஞர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை, அறிவிப்பாளர்கள் வரிசை சரியாக அமைந்த ஹதீஸ்கள் குர்ஆனுடன் ஒருபோதும் முரண்படாது, அப்படி வருமென்று நாம் நம்பினால் அது நமது அறிவுடைமை’ என்று பரவலாக வாதிடுவதை நாம் பார்க்க முடிகிறது.

இவர்களுடைய இந்த வாதம் திருமறைக் குர்ஆனுடைய அடிப்படையையே அறியாததின் விளைவாக எழுந்துள்ளது என்பதை திருக்குர்ஆனின் அடிப்படைகளை அறிந்திருக்கும் அனைவரும் புரிந்துக் கொள்வார்கள்.

ஏனென்றால், இஸ்லாமிய மார்க்கம் மற்ற அனைத்து மதங்களை விடவும் விலகி நிற்கும் முக்கியமான இடமே, இஸ்லாத்தின் அடிப்படைகளைக் கண்மூடிப் பின்பற்றாமல் அவற்றை அறிந்து சிந்தித்துப் பின்பற்ற வேண்டும் என்பதில்தான்.

அதனால்தான் அல்லாஹ் கூறுகிறான்,

(இறை நம்பிக்கையாளர்களுக்கு) தங்களின் இறைவனின் வசனங்களின் மூலம் அறிவுறுத்தப்பட்டால் அதன் மீது செவிடர்களாகவும் குருடர்களாகவும் விழமாட்டார்கள்.

(அல்குர்ஆன் 25:73)

அவர்கள் இக்குர்ஆனை சிந்திக்க வேண்டாமா? அல்லது உள்ளங்களின் மீது பூட்டுகள் உள்ளதா?

(அல்குர்ஆன் 47:24)

இதுபோன்று இன்னும் ஏராளமான வசனங்கள், இறை நம்பிக்கையாளர்கள் இஸ்லாத்தின் அடிப்படைகளைக் கண்மூடி பின்பற்றக்கூடாது, கருத்தை விளங்கித்தான் பின்பற்றவேண்டும் என்பதைத் தெளிவாக விளக்குகின்றன.

ஆனாலும், இந்த ஆதாரங்களை மறந்து ஹதீஸ்கலை விதிகளை மாத்திரம் முன்னிறுத்தி வாதிடக்கூடியவர்களுக்கு ஹதீஸ்கலை விதிகளும் இதைத்தான் சொல்கிறது என்பதை எவ்வித காய்தல் உவத்தலின்றி நேரான கண்ணோட்டத்தோடும், தெளிவான சிந்தனையுடனும், ஹதீஸ் கலை விதிகளிலிருந்தே சில கேள்விகளை நாம் முன்வைக்கின்றோம்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed