முரண்படும் ஹதீஸ்களை பற்றி  முடிவு தரும் அறிஞர்களின்  கூற்று(02)

நல்லறிஞர்களின் வழிமுறை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக நம்பகமான அறிவிப்பாளர்கள் வழியாக அறிவிக்கப்படும் இரண்டு செய்திகள் ஒன்றிற்கொன்று முரணாக இருக்குமென்றால் குர்ஆனுக்கு ஒத்த செய்தியையே நபியவர்கள் கூறியதாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என பல நல்லறிஞர்கள் வழிகாட்டியுள்ளனர்.

இமாம் ஷாஃபி

அவர்களில் மிக முக்கியமானவர் இமாம் ஷாஃபி அவர்கள் ஆவார்கள். இமாம் ஷாஃபி அவர்கள் தமது ”அர்ரிஸாலா” என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்கள்.

அதிகமான ஹதீஸ்களில் அவை உண்மையானவையா? பொய்யானவையா?

என்பதை அறிவிப்பாளர் உண்மையாளரா?

பொய்யரா?

என்பதை அடிப்படையாக வைத்தே முடிவு செய்யப்படும்.

ஹதீஸாகக் கருதப் படுவதற்குத் தகுதியற்ற செய்தியை அறிவிப்பாளர் அறிவித்தால் அது பொய்யானது என்றும் நம்பகத்தன்மையில் மிக உறுதியான செய்திக்கோ, அல்லது அதிகமான அறிவிப்புகளுக்கு மாற்றமாக அறிவிப்பாளர் அறிவித்தால் அந்தச் செய்தி பொய் என்றும் மிக உறுதியான அந்த அறிவிப்பு உண்மை என்றும் மிகக் குறைவான குறிபிட்ட செய்திகளில் முடிவு செய்யப்படும்.

நூல்: அர்ரிஸாலா, பாகம்: 1, பக்கம்: 398

இரண்டு செய்திகள் முரண்பட்டால் மிக உறுதியான ஆதாரத்திற்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் மிக உறுதியான ஆதாரத்திற்கு முரணான செய்தியை பொய் என்றே முடிவு செய்ய வெண்டும் என இமாம் ஷாஃபி அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள் என்பதை மேற்கண்ட அவருடைய கூற்றிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படும் செய்தியை எவ்வாறு உறுதிப்படுத்த வேண்டும் என்பதை இமாம் ஷாஃபி அவர்கள் தம்முடைய ”அல்உம்மு” என்ற நூலிலும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

ஒரு நம்பகமான அறிவிப்பாளர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து நம்பகமான அறிவிப்பாளர் வரிசையில் ஒரு செய்தியை அறிவித்தால் அது நபியவர்களிடமிருந்து வரும் உறுதியான அறிவிப்பாகும்.

ஒன்றுக்கொன்று முரண்பட்டு வரும் அறிவிப்புகளைத் தவிர நபியவர்கள் கூறிய எந்த ஒரு ஹதீஸையும் நாம் ஒரு போதும் விட்டுவிட மாட்டோம்.

நபியவர்கள் கூறியதாக வரும் ஹதீஸ்கள் முரண்பட்டால் அந்த முரண்பாடு இரண்டு வகைகளில் இருக்கும்.

ஒன்று :

இரண்டு செய்திகளில் ஒன்று ”நாஸிஹ்” – புதிய சட்டமாகவும், மற்றொன்று ”மன்ஸுஹ்” – மாற்றப்பட்ட சட்டமாகவும் இருக்கும். இப்போது நாம் புதிய சட்டத்தை அமுல்படுத்துவோம். மாற்றப்பட்ட சட்டத்தை விட்டுவிடுவோம்.

மற்றொரு வகை :

இரண்டும் ஒன்றிற்கொன்று முரண்படும். இரண்டில் எது புதிய சட்டம் என்பதற்கு எந்தச் சான்றும் இருக்காது. இப்போது இரண்டு அறிவிப்புகளில் எது உறுதியானதோ அதனை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இரண்டும் (உறுதித் தன்மையில்) சமமானதாக இருந்தால் இரண்டில் எது இறைவேதத்திற்கும், நபி வழிக்கும் ஒத்ததாக உள்ளதோ அதன் பக்கம் நான் சென்று விடுவேன்.

நூல்: அல்உம்மு, பாகம் 7, பக்கம் 201

நபியவர்கள் கூறியதாக நம்பகமான அறிவிப்பாளர்கள் அறிவிக்கும் செய்திகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டிருந்தால் குர்ஆனிற்கும், சுன்னாவிற்கும் ஒத்ததாக உள்ளதை ஏற்று மற்றொன்றை மறுத்து விட வேண்டும் என்பதே இமாம் ஷாஃபி அவர்களின் வழிமுறையாகும். அறிவிப்பாளர்களின் குறைகளை வைத்து மறுக்கப்படுவதைப் போன்று, கருத்தைக் கவனித்தும் ஹதீஸ்கள் மறுக்கப்படும் என்பதை இதன் மூலம் நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.

தொழுது கொண்டிருப்பவருக்கு முன்னால் ஒரு பெண், அல்லது நாய், அல்லது கழுதை கடந்து சென்றால் தொழுகை முறிந்து விடும் என்று நபியவர்கள் கூறியதாக நம்பகமான அறிவிப்பாளர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி ”ஒருவரின் சுமையை மற்றவர் சுமக்கமாட்டார்” (அல்குர்ஆன் 35:18) என்ற குர்ஆன் வசனத்திற்கு முரணாக இருப்பதினாலும், நபியவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது ஆயிஷா (ரலி) குறுக்கே படுத்திருப்பார்கள் என்ற ஹதீஸிற்கு முரணாக இருப்பதினாலும் இதனை இமாம் ஷாஃபி மறுத்துள்ளார்கள். இதன் விபரம் இமாம் ஷாஃபி அவர்களுக்குரிய இஹ்திலாஃபுல் ஹதீஸ், பாகம்: 8, பக்கம் 623ல் இடம் பெற்றுள்ளது.

மேலும் இறந்தவரின் குடும்பத்தினர் அழுவதினால் இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார் என்று நபியவர்கள் கூறியதாக நம்பகமானவர்கள் வழியாக அறிவிக்கப்படும் செய்தியையும் இமாம் ஷாஃபி அவர்கள் மறுத்துள்ளார்கள்.

இந்தச் செய்தியின் கருத்து ”ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான்”

(அல்குர்ஆன் 6:164) “மனிதனுக்கு அவன் முயற்சித்தது தவிர வேறு இல்லை”

(அல்குர்ஆன் 53:39), ”

அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார். அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார்”

(அல்குர்ஆன் 99:7, 8),

”ஒவ்வொருவரும் தமது உழைப்புக்கேற்ப கூலி கொடுக்கப் படுவார்கள்”

(அல்குர்ஆன் 20:15),

ஆகிய இறை வசனங்கள் எந்த அடிப்படையைப் போதிக்கிறதோ அதற்கு எதிராக உள்ளது. இதனை மறுத்து ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தியே குர்ஆனுடைய கருத்திற்கு ஒத்ததாக உள்ளது. என இமாம் ஷாஃபி அவர்கள் தம்மடைய ”இஹ்திலாஃபுல் ஹதீஸ்” என்ற நூலில் பாகம்:8, பக்கம் 648ல் விரிவாக விவரித்துள்ளார்கள்.

இமாம் ஷாஃபி அவர்கள் கூறுகிறார்கள்:

அல்லாஹ்வுடைய வேதத்தின் வெளிப் படையான கருத்திற்கு ஒத்திருக்கும் ஹதீஸ்களே (நபியவர்கள் கூறினார்கள் என்று) உறுதிப்படுத்துவதற்கு தகுதியானவை ஆகும்.

(நூல் : இஹ்திலாஃபுல் ஹதீஸ், பாகம் 8, பக்கம் 661)

குர்ஆனிற்கு முரண்படாமல் இருந்தால்தான் ஒரு ஹதீஸை ஸஹீஹானதாக ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் இமாம் ஷாஃபி கூறியுள்ளார்கள்.

ஒரு ஹதீஸ் சரியாவதற்கான நிபந்தனைகள் முழுமையாகி விட்டால் அதைக் குர்ஆனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது கட்டாயமா? இது குறித்து இமாம் ஷாஃபி அவர்கள், “கட்டாயமில்லை. ஏனென்றால் அந்த ஹதீஸ் குர்ஆனிற்கு முரண்படாமல் இருந்தால் தான் அதன் நிபந்தனைகள் முழுமையடையும்” என்று கூறியுள்ளார்கள்.

நூல்: அல்மஹ்சூல், பாகம்: 4, பக்கம்: 438

இவ்வாறு குர்ஆன் என்ற மிகப்பெரும் ஆதாரத்திற்கு முரணாக நபியவர்கள் கூறியதாக ஒரு செய்தி அறிவிக்கப்படுமென்றால் அது மறுக்கப்பட வேண்டும் என்பதே இமாம் ஷாஃபி அவர்களின் வழிமுறை என்பதை மேற்கண்ட விளக்கங்களிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

இமாம் மாலிக்

அடுத்ததாக, “மிக உறுதியான ஆதாரமான குர்ஆனிற்கு முரணாக நபியவர்கள் கூறியதாக அறிவிக்கப் பட்டால் அதனை ஏற்றுக் கொள்வது கூடாது’ என்பதுதான் இமாம் மாலிக் அவர்களின் வழிமுறையாகும்.

ஹிஜிரி நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த இமாம் ”முஹம்மத் இப்னு அப்தில்லாஹ் அல்முஆஃபிரீ” அவர்கள் ”அந்நஸ்ஸுல் காமில்” என்ற தனது நூலில் இமாம் மாலிக் அவர்களின் வழிமுறையைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

மார்க்கத்தின் அடிப்படையான (குர்ஆனிற்கு) முரண்படும் போது தனி நபர் செய்திகளை (இமாம்களில்) ஒரு கூட்டமே மறுத்துள்ளது. அவர்களில் ஒருவர்தான் இமாம் மாலிக் (ரலி) அவர்கள் ஆவார்கள்.

நூல்: அந்நஸ்ஸுல் காமில், பக்கம் 231

தெளிவான சுன்னாவை விட குர்ஆனுடைய வெளிப்படையான கருத்தே மாலிக் இமாமிடம் முற்படுத்தப்பட்டதாகும். மார்க்க மஸாயில்களில் தீர்வு சொல்லும் போதும் இவ்வாறுதான்.

நூல்: அல்ஃபிக்ருஸ் ஸாமி, பாகம் 1, பக்கம் 455

புகாரி 1854வது ஹதீஸ் குர்ஆனின் கருத்திற்கு முரணாக இருப்பதால் இமாம் மாலிக் அவர்கள் குர்ஆனுடைய கருத்திற்கே முக்கியத்துவம் வழங்கியுள்ளார்கள்.

குர்துபீ கூறுகிறார்:

கஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த பெண்மணி அறிவிக்கும் ஹதீஸ் குர்ஆனுடைய வெளிப்படையான கருத்திற்கு முரண்படுகிறது என்று மாலிக் அவர்கள் கருதுகிறார். ஆகையால் அவர் குர்ஆனுடைய வெளிப்படையான கருத்திற்கே முன்னுரிமை கொடுத்துள்ளார். குர்ஆனுக்குள்ள அங்கீகாரத்தைக் கவனித்தால் குர்ஆனிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

நூல்: பத்ஹுல்பாரீ, பாகம்: 4, பக்கம்: 70

இமாம் அவ்ஸாயீ அவர்களும் இதே வழிமுறையில்தான் சென்றுள்ளார்கள்.

“நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வரும் அனைத்தையும் நாம் ஏற்க வேண்டுமா?” என்று முனீப் என்பவர் அவ்ஸாயீ அவர்களிடம் கேட்டார். அதற்கு அவ்ஸாயீ அவர்கள், “அந்தச் செய்திகளில் அல்லாஹ்வுடைய வேதம் எதை உண்மைப்படுத்துகின்றதோ அதை ஏற்றுக் கொள்வோம். அது நபி (ஸல்) அவர்களிடமிருந்து வந்ததாகும். அல்லாஹ்வின் வேதத்திற்கு மாற்றமாக வரும் செய்திகள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து வந்தவை அல்ல” என்று கூறினார்கள்.

முனீப் அவர்கள், “அந்தச் செய்திகளை நம்பகமானவர்கள் அறிவித்திருக்கின்றார்களே” என்று கேட்டார். அதற்கு அவ்ஸாயீ, “நம்பகமானவர்கள் நம்பகமில்லாதவர்களிட மிருந்து அதைப் பெற்றிருக்கலாமே” என்று கூறினார்கள்.

நூல்: தாரீகு அபீ சுர்ஆ (பாகம் 1, பக்கம் 271)

கருத்தைக் கவனித்தும் ஹதீஸ்களை மறுக்கின்ற வழிமுறைகளை இமாம்கள் பின்பற்றியுள்ளார்கள் என்பதற்கு ஒரு சில சான்றுகளை மட்டுமே இங்கே நாம் எடுத்துக் காட்டியுள்ளோம்.

நபியவர்கள் கூறியதாக அறிவிக்கப்படும் செய்தி, தெளிவான நடைமுறை உண்மைகளுக்கு மாற்றமாக இருக்கும் போதும், அதை விட உறுதியான ஆதாரங்களுக்கு முரண்படும் போதும் மறுக்கப்படும் என்பதே மேற்கண்ட சான்றுகளிலிருந்து நாம் அறிந்து கொள்ளும் உண்மையாகும்.

கருத்தைக் கவனித்து ஹதீஸ்களை மறுக்க வேண்டும் என்பது தவ்ஹீத் ஜமாஅத்தினுடைய நிலைப்பாடு மட்டுமல்ல என்பதும் மேற்கண்ட சான்றுகளிலிருந்து தெளிவாகிவிட்டது.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களும் குர்ஆனிற்கு முரண்படுகிறது என்ற அடிப்படையில் பல செய்திகளை மறுத்துள்ளார்கள். இதனை நம்முடைய பல நூற்களில் நாம் தெளிவுபடுத்தியுள்ளோம்.

இதன் அடிப்படையில்தான்

நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டு அதனால் அவர்கள் பாதிப்பிற்கு உள்ளானார்கள் என்ற செய்தியையும்,

இப்ராஹீம் நபிக்கு எதிராகப் பல்லி நெருப்பை ஊதியது,

குரங்கு விபச்சாரம் செய்து அதற்குக் கல்லெறி தண்டனை கொடுக்கப்பட்டது,

நபிகள் நாயகம் அன்னியப் பெண்ணுடன் தனிமையில் இருந்தார்கள்,

மூஸா நபி மலக்குல் மவ்த்தை அடித்து மலக்கின் விழி பிதுங்கியது,

நபியவர்கள் அந்நியப் பெண்ணை ஸாலிமிற்குப் பாலூட்டுமாறு கூறினார்கள் என்ற செய்தி,

சுலைமான் நபிக்கு நூறு குழந்தைகள் பிறக்கும் என்று மறைவான விஷயத்தை அவர் முன்கூட்டியெ அறிவித்ததாக வரும் செய்தி போன்றவற்றையும் இவையல்லாத இன்னும் சில செய்திகளையும் தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்கள் மறுத்துள்ளனர்.

ஒரு செய்தி குர்ஆனுக்கு, அல்லது நிரூபிக்கப்பட்ட உலக உண்மைக்கு மாற்றமாக வந்தால் அதனை நபியவர்கள் கூறியதாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதை நாம் விரிவாகக் கண்டோம்.

 

ஒரு ஹதீஸ் சரியானது என்று முடிவு செய்வதற்கு 5 நிபந்தனைகள் அவசியமாகும் என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆரம்ப அறிவிப்பாளரிடமிருந்து கடைசி அறிவிப்பாளர் வரை ஒரு தொடரில் எந்த ஒரு அறிவிப்பாளரும் விடுபடாமல் தொடர வேண்டும்.

ஒவ்வொரு அறிவிப்பாளரும் நேர்மையானவராக இருக்க வேண்டும்.

மனனமாகவோ அல்லது எழுத்து வடிவிலோ ஹதீஸைத் துல்லியமாகப் பாதுகாத்திருக்க வேண்டும்.

தன்னை விட மிக நம்பமான அறிவிப்பாளருக்கு மாற்றமாக செய்தியை அறிவிக்கக்கூடாது.

ஹதீஸைப் பாதிக்கின்ற குறை இடம்பெற்றிருக்கக்கூடாது.

இந்த ஐந்த நிபந்தனைகள் இடம்பெற்றுவிட்டால் அந்த ஹதீஸ் சரியானது என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

இந்த அடிப்படையில் ஒரு ஹதீஸ் சரியானது என்று சொன்னால், மேற்கண்ட ஐந்து நிபந்தனைகள் அந்த ஹதீஸில் உறுதியாகின்றது என்று தான் அர்த்தமே தவிர அது நூற்றுக்கு நூறு சரி என்றாகி விடாது.

ஏனென்றால் மறதி, தவறு போன்றவை ஒரு நம்பகமானவருக்கும் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.

ஸஹீஹாக வரக்கூடிய ஒரு செய்தியில் அறிவிப்பாளரின் நம்பகத்தன்மையை முன்னிறுத்தி அதை ஏற்றுக் கொள்ளவேண்டும்.

அதில் குர்ஆனுக்கு மாற்றமான கருத்துக்கள் இடம்பெற்றிருப்பது உறுதியாகத் தெளிவாகும் போது அதை நிறுத்தி வைத்து விட்டு திருமறைக் குர்ஆனை முன்னிறுத்துவது தான் அறிவவுடையோரின் தன்மையாக இருக்க முடியும்.

ஆகையால், நாம், குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று ஒரு செய்தியை மறுப்பது குர்ஆனையும் ஹதீஸ்களையும் பாதுகாக்கும் நோக்கில் தானே தவிர அதை மறுக்க வேண்டும் என்ற நோக்கில் அல்ல என்பதை மேற்கூறப்பட்ட விஷயங்களை வைத்து அறிவுடையோர் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

தொகுப்பு : முஹம்மது அலீ, ஸபீர் அலீ. இஸ்லாமியக் கல்லூரி மாணவர்கள்

 

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed