ஹஜ் தொடர்பான ஆதாரப்பூர்வமான துஆக்கள்

 

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டவை இரண்டு.

  1. ஜகாத், 2. ஹஜ்.

பொருளாலும், உடலாலும் சக்தி பெற்றவர்கள் மீது வாழ்நாளில் ஒருமுறையாவது மக்கா சென்று கஃபாவை ஹஜ் செய்வது கடமையாகும். இவ்வாறு குர்ஆன் கட்டளையிடுகிறது.

அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்றுவர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை.

அல்குர்ஆன் 3:97

எவ்வாறு ஹஜ் செய்வது என்பதை என்னிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள் (முஸ்லிம் 2286) என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதுடன் அதன் முறைகளைச் செய்து காட்டி விட்டும் சென்றுள்ளனர்.

நபிகள் நாயகம் செய்த ஹஜ்ஜின் கிரியைகள் மீது கவனம் செலுத்தினால் அதில் ஒரு விஷயம் நமக்கு நன்றாகப் புலப்படும்.

படைத்த இறைவனை நினைவு கூர்வது தான் ஹஜ்ஜின் நோக்கம் என்பதை நபிகளாரின் ஹஜ் செய்முறை நமக்குத் தெளிவாக எடுத்துச் சொல்லும்.

பின்வரும் வசனமும் ஹஜ்ஜின் போது இறைவனை நினைவு கூர்வதை வலியுறுத்துகின்றன.

(ஹஜ்ஜின்போது வியாபாரத்தின் மூலம்) உங்கள் இறைவனின் அருளைத் தேடுவது உங்களுக்குக் குற்றமில்லை. அரஃபாத் பெருவெளியிலிருந்து நீங்கள் திரும்பும்போது மஷ்அருல் ஹராமில் அல்லாஹ்வை நினையுங்கள்! அவன் உங்களுக்குக் காட்டித் தந்தவாறு அவனை நினையுங்கள்! இதற்கு முன் வழிதவறி இருந்தீர்கள்.

அல்குர்ஆன் 2:198

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனை எவ்வாறு நினைவு கூர்ந்து ஹஜ்ஜின் கிரியைகளை நிறைவேற்றினார்களோ அவ்வாறே முஸ்லிம் சமுதாயம் ஹஜ் செய்ய வேண்டும். அதுவே இறைவனின் கட்டளை.

ஹஜ்ஜின் போது சில சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட சில இடங்களில் இன்னின்ன துஆக்களை – திக்ருகளை ஓதிட வேண்டும் என்று நபிகளார் நமக்கு வழிகாட்டியுள்ளார்கள்.

ஹஜ்ஜுடைய மாதம் நெருங்கி விட்டதால் ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லும் முஸ்லிம்கள் இந்த துஆக்களை மனனமிட்டு முறையாக ஓதும் போது இறைவனின் அளப்பரிய அருளைப் பெறலாம்.

துவக்கமாக ஹஜ்ஜுக்காகப் பயணம் மேற்கொள்ளும் போது பயண துஆவை மறக்காமல் ஓதிவிட வேண்டும் என்பதால் அதை மனனமிட்டு கொள்ள வேண்டும்.

பயணத்தின் போது…

தமது வாகனத்தில் எறி அமர்ந்ததும் மூன்று தடவை

اَللهُ أَكْبَرُ اَللهُ أَكْبَرُ اَللهُ أَكْبَرُ

அல்லாஹு அக்ப(B]ர் – அல்லாஹு அக்ப(B]ர் -அல்லாஹு அக்ப(B]ர் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.

பின்னர்

سُبْحَانَ الَّذِيْ سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِيْنَ وَإِنَّا إِلَى رَبّنَا لَمُنْقَلِبُوْنَ اَللّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا اَلْبِرَّ وَالتَّقْوَى وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى اَللّهُمَّ هَوّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُاَللّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيْفَةُ فِي الأَهْلِ اَللّهُمَّ إِنّيْ أَعُوْذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالأَهْلِ

ஸுப்(B]ஹானல்லதீ ஸக்கர லனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வஇன்னா இலா ரப்பி(B]னா லமுன்கலிபூன். அல்லாஹும்ம இன்னா நஸ்அலு(க்)க பீ[தி] ஸப[தி]ரினா ஹாதா அல்பி(B]ர்ர வத்தக்வா வமினல் அமலி மா(த்)தர்ளா. அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸப[தி]ரனா ஹாதா வத்வி அன்னா பு(B]ஃதஹு, அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸாஹிபு(B] பி[தி]ஸ்ஸப[F]ரி வல் கலீப[தி](த்)து பி[F]ல் அஹ்லி அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் வஃஸாயிஸ் ஸப[F]ரி வகாப(B]தில் மன்ளரி வஸுயில் முன்கலபி(B] பி[F]ல் மாலி வல் அஹ்லி

பொருள் :

அல்லாஹ் மிகப் பெரியவன். எங்களுக்கு இதை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதன் மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு! இதன் தொலைவை எங்களுக்குக் குறைத்து விடு! இறைவா! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். இறைவா! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும், மோசமான தோற்றத்திலிருந்தும், செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்

என்று கூறுவார்கள்.

பார்க்க: முஸ்லிம் 2392

ஒரு இஹ்ராமில் ஹஜ்ஜையும், உம்ராவையும் செய்ய நாடுபவர் கூற வேண்டிய துஆ

(லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரதன் (ஹஜ்ஜையும் உம்ராவையும் நாடி இறைவா உன்னிடம் வந்து விட்டேன்)

ஹஜ்ஜை மட்டும் செய்ய நாடினால்…

லப்பைக்க ஹஜ்ஜன்

உம்ராவை மட்டும் செய்ய நாடினால்…

லப்பைக்க உம்ரதன்

இஹ்ராம் ஆடை அணிந்த பின் மேற்கண்டவாறு கூற வேண்டும். இதற்குப் பெயரே இஹ்ராம் ஆகும். இதைத் தொடர்ந்து தல்பியா எனும் முழக்கத்தைச் சொல்ல வேண்டும்.

பார்க்க: முஸ்லிம் 2194, 2195

தல்பியா

لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لَا شَرِيكَ لَك

லப்பைக், அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல்முல்க, லாஷரீக லக

பார்க்க: புகாரி 1549, 5915

இதன் பொருள்:

இதோ, உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன்! இறைவா! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! இணையில்லாதோனே! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! புகழும், அருட்கொடையும், ஆட்சியும் உனக்கே உரியன! உனக்கு இணையானவர் எவருமில்லை.

இஹ்ராம் கட்டியவர்கள் அதிகமதிகம் தல்பியாவைக் கூற வேண்டும். ஏனைய துஆக்கள் ஓதும் இடங்களைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் தல்பியாவை கூறிக் கொண்டே இருக்க வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜம்ரதுல் அகபாவில் கல்லெறியும் வரை தல்பியா கூறிக் கொண்டே இருந்தார்கள் என்பது நபிமொழி.

பார்க்க: புகாரி 1544, 1683, 1687.

மஸ்ஜிதுல் ஹராமில் நுழையும் போது…

மஸ்ஜிதுல் ஹராமில் நுழையும் போது ஓதுவதற்கென்று பிரத்தியோகமாக எந்த துஆவையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தரவில்லை. பொதுவாகப் பள்ளிவாசலில் நுழையும் போது ஓத வேண்டிய துஆ மஸ்ஜிதுல் ஹராமிற்கும் பொருந்தும் என்பதால் அதையே ஓதிக் கொள்ள வேண்டும்.

اَللّهُمَّ افْتَحْ لِيْ أَبْوَابَ رَحْمَتِكَ

அல்லாஹும்மப்[F]தஹ் லீ அப்(B]வாப(B] ரஹ்ம(த்)தி(க்)க

இதன் பொருள் :

இறைவா! உனது அருள் வாசல்களை எனக்காகத் திறப்பாயாக.

நூல்: முஸ்லிம் 1165

கஃபாவை தவாஃப் செய்யும் போது…

தவாஃப் செய்யும் போது ருக்னுல் யமானிக்கும், ஹஜருல் அஸ்வதுக்கும் இடையே பின்வரும் துஆவை ஓத வேண்டும்.

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

ரப்பனா ஆ(த்)தினா ஃபித்துன்யா ஹஸன(த்)தன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்.

இதன் பொருள்:

அல்லாஹ்வே! எங்கள் இறைவனே! எங்களுக்கு இந்த உலகிலும் நன்மையை அருள்வாயாக! மறு உலகிலும் நன்மையை அருள்வாயாக! மேலும், நரக நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ காத்தருள்வாயாக!

பார்க்க: அஹ்மத் 14851,  அபூதாவூத் 1616

ஸஃபா மற்றும் மர்வாவில் ஓத வேண்டியவை

தவாஃபுல் குதூம் எனும் தவாஃபை நிறைவேற்றி, இரண்டு ரத்அத்கள் தொழுது விட்டு ஸஃபா, மர்வா எனும் மலைகளுக்கிடையே ஓட வேண்டும்.

ஸஃபா குன்றின் மேல் ஏறி நின்று கிப்லாவை முன்னோக்கி செய்ய வேண்டிய துஆ

لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كَلِّ شَىْءٍ قَدِيرٌ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ أَنْجَزَ وَعْدَهُ وَنَصَرَ عَبْدَهُ وَهَزَمَ الأَحْزَابَ وَحْدَهُ

லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலாகுல்லி ஷையின் கதீர். லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தா, அன்ஜஸ வஃதா, வநஸர அப்தா, வஹஸமல் அஹ்ஸாப வஹ்தா

மர்வாவிலும் இவ்வாறே துஆ ஓதிக் கொள்ள வேண்டும்.

இதன் பொருள்:

அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையாக எவரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழனைத்தும். அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் படைத்தவன். (அந்த) அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவன் தனது வாக்குறுதியை நிறைவேற்றித் தந்தான். தன் அடியாருக்கு உதவி செய்துவிட்டான். தன்னந்தனியாக பல படையினரை தோற்கடித்துவிட்டான்

பார்க்க: முஸ்லிம் 2137, புகாரி 1616, 1624

மஷ்அருல் ஹராமில் கூற வேண்டியவை

குறிப்பிட்ட நாளில் மஷ்அருல் ஹராம் என்ற இடத்துக்கு வந்ததும் அங்கே கிப்லாவை முன்னோக்கி இறைவனை இறைஞ்சுவதோடு பின்வருமாறு கூற வேண்டும்.

அல்லாஹு அக்பர் லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு லாயிலாஹ இல்லல்லாஹு

இதன் பொருள்:

அல்லாஹ் மிகப் பெரியவன். அவனன்றி வேறு கடவுள் இல்லை. அவன் தனித்தவன். அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை.

பார்க்க: முஸ்லிம் 2137

ஜம்ரதுல் அகபா

துல்ஹஜ் பத்தாம் நாள் காலையில் முஸ்தலிஃபாவிலிருந்து புறப்பட்டு மினாவை அடைந்ததும் ஜம்ரதுல் அகபா என்ற இடத்தில் மட்டும் ஏழு கற்களை எறிய வேண்டும். ஒவ்வொரு கல்லை எறியும் போதும் கூற வேண்டியது

அல்லாஹூ அக்பர்

ஏழு கற்களை எறிந்த பின் கிப்லாவை நோக்கி நின்று கொண்டு இரு கைகளையும் உயர்த்தி நீண்ட நேரம் துஆச் செய்ய வேண்டும்.

பார்க்க: புகாரி 1753

ஹஜ்ஜின் அனைத்து கிரியைகளையும் முடித்து ஊருக்குத் திரும்பும் போது பின்வரும் துஆவை ஓத வேண்டும்.

பயணத்திலிருந்து திரும்பும் போது…

آيِبُوْنَ تَائِبُوْنَ عَابِدُوْنَ لِرَبّنَا حَامِدُوْنَ

ஆயிபூ(B]ன தாயிபூ(B]ன ஆபி(B]தூன லிரப்பி(B]னா ஹாமிதூன்.

இதன் பொருள் :

எங்கள் இறைவனை வணங்கியவர்களாகவும்புகழ்ந்தவர்களாகவும் மன்னிப்புக் கேட்பவர்களாகவும் திரும்புகிறோம்.

பார்க்க: முஸ்லிம் 2392

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed