ஹஜ்ருல் அஸ்வத் கல் சொர்க்கத்துக் கல்லா?

ஹஜ்ருல் அஸ்வத் சொர்க்கத்துக் கல் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவற்றில் சில பலவீனமானவையாக இருந்தாலும் சில ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமாக உள்ளன.
அதன் விபரம் வருமாறு:

ஹஜ்ருல் அஸ்வத் கல் சொர்க்கத்திலிருந்து இறங்கியதாகும். இது பாலை விட வெண்மையானதாகும். ஆதமுடைய மக்களின் பாவங்கள் அதைக் கருப்பாக்கி விட்டன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : திர்மிதீ 803

இந்தச் செய்தியில் இடம்பெறும் அதா பின் ஸாயிப் என்ற அறிவிப்பாளர் நல்லவர் என்றாலும் கடைசிக் காலத்தில் அவருக்கு மூளை குழம்பிவிட்டது.

எனவே அவர் மூளை குழம்பிய காலத்திற்கு முன்பாக அவரிடம் கேட்டவரின் செய்தி ஏற்றுக் கொள்ளப்படும். மூளை குழம்பிய பின்னர் அவரிடம் கேட்ட செய்தியாக இருந்தால் அந்தச் செய்தியை ஏற்றுக் கொள்ளக்கூடாது. இது ஹதீஸ்கலையின் விதியாகும்.

இந்த விதியின் அடிப்படையில் அதா பின் ஸாயிப் என்பவரிடமிருந்து ஜரீர் என்பவர் அறிவிக்கிறார். இவர் அதா விடம் மூளை குழம்பிய பின்னரே கேட்டவராவார்.

(நூல் : பத்ஹ‚ல் பாரி, பாகம் :3, பக்கம் : 462)

எனவே இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது இல்லை.

ஹஜ்ருல் அஸ்வதும், மகாமு இப்ராஹீமும் சொர்க்கத்தின் மாணிக்கக் கற்களில் உள்ளவையாகும். அவற்றின் ஒளியை அல்லாஹ் மங்கச் செய்துவிட்டான். அவற்றின் ஒளியை அவன் மங்கச் செய்யாமலிருந்தால் கிழக்குக்கும், மேற்குக்கும் இடைப்பட்ட பகுதியை அவை ஒளிரச் செய்திருக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி),

நூல் : திர்மிதீ 804

இச்செய்தியில் இடம்பெறும் ரஜா அபூயஹ்யா என்பவர் பலவீனமானவராவார்.

(நூல் : தக்ரீபுத் தஹ்தீப், பாகம் :1, பக்கம் : 208)

இந்தச் செய்திகள் பலவீனமானதாக இருந்தாலும் பின்வரும் செய்திகள் ஆதாரப்பூர்வமானதாகும்.

ஹஜ்ருல் அஸ்வத் கல் சொர்க்கத்திலிருந்து இறங்கியதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர் : இப்னுஅப்பாஸ் (ரலி)

நூல்: நஸாயீ 2886

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தொடரிலும் அதா பின் ஸாயிப் என்பவரே இடம்பெற்றுள்ளார். என்றாலும் இவரிடம் இந்தச் செய்தியைக் கேட்டவர் ஹம்மாத் பின் ஸலமா என்பவராவார். இவர் அதா மூளை குழம்பியதற்கு முன்னர் கேட்டவராவார்.

(நூல் : பத்ஹ‚ல் பாரி, பாகம் :3, பக்கம் : 462)

இந்தச் செய்தி அதா நல்ல நிலையில் இருந்தபோது கேட்டதால் இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானதே!

மேலும் பின்வரும் நபிமொழியும் ஆதாரப்பூர்வமானதே!

ஹஜ்ருல் அஸ்வத் கல் சொர்க்கத்துக் கல்லாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : அஹ்மத் 13434

எனவே அஹ்மத், நஸாயீ ஆகிய நூல்களில் பதிவுசெய்யப்பட்ட ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவையாக உள்ளதால் ஹஜருல் அஸ்வத் கல் சொர்க்கத்துக் கல் என்று நாம் நம்ப வேண்டும்

الله اعلم

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed